அன்பிற்கினியவர்களுக்கு:
பரமாத்மா தொடர்கிறார்:
பிரம்ம நிர்வானம் என்றால் என்னவென்று சொல்கிறார்.
லபந்தே ப்ரஹ்ம-நிர்வாணம் ருஷயஹ க்ஷிண-கல்மஷாஹா
ச்சின்ன-த்வைதா யதாத்மானஹ ஸர்வ-பூத-ஹிதே ரதாஹா – 5:25
க்ஷிண-கல்மஷாஹா = எவருடைய தீ வினைகள் ஒழிந்தனவோ; ச்சின்ன-த்வைதா = எவருடைய மனம் நன்மை - தீமை, இன்பம் – துன்பம் உள்ளிட்ட இருமைகளினிடையே ஊசலாடவிடாமல் இருக்கின்றதோ; யதாத்மானஹ = எவருடைய புலன்கள் கட்டுப்பாட்டில் உள்ளனவோ; ஸர்வ-பூத-ஹிதே ரதாஹா = (மேலும்,) அனைத்து உயிர்களுக்கும் நன்மையை நாடுபவர்களாக இருக்கும்; ருஷயஹ = பற்றற்றவர்கள் (துறவிகள்); ப்ரஹ்ம-நிர்வாணம் லபந்தே = இயற்கையோடு இணைந்து பிரம்ம நிர்வாணம் என்கிறார்களே அதனை அடைகிறார்கள். அஃதாவது, தமக்குள்ளேயே அனைத்தையும் கண்டு அமைதியாகிறார்கள்.
எவருடைய தீ வினைகள் ஒழிந்தனவோ, எவருடைய மனம் நன்மை - தீமை, இன்பம் – துன்பம் உள்ளிட்ட இருமைகளினிடையே ஊசலாடவிடாமல் இருக்கின்றதோ, எவருடைய புலன்கள் கட்டுப்பாட்டில் உள்ளனவோ, மேலும், அனைத்து உயிர்களுக்கும் நன்மையை நாடுபவர்களாக இருக்கும் பற்றற்றவர்கள் (துறவிகள்) இயற்கையோடு இணைந்து பிரம்ம நிர்வாணம் என்கிறார்களே அதனை அடைகிறார்கள். அஃதாவது, தமக்குள்ளேயே அனைத்தையும் கண்டு அமைதியாகிறார்கள். – 5:25
காமத்தையும் (விருப்பத்தையும்), கோபத்தையும் தவிர்த்து மனத்தைக் கட்டுப்படுத்தி உள்ளொளியைக் காண்பவர்களுக்குப் பிரம்ம நிர்வானம் அருகில் உள்ளது. – 5:26
பிரம்ம நிர்வானம் என்பது வேறு ஒன்றுமல்ல ஒளிவு மறைவற்ற இயற்கையின் இயல்புகளைத் தரிசிப்பது. அவர்களுக்குப் புதைந்திருக்கும் இயற்கையின் இரகசியங்கள் வெளித்தோன்றும். இவ்வாறுதான் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.
மூச்சினைச் சரி செய்தால் அனைத்தும் நிகழும் என்னும் கருத்தினைச் சொல்லப் போகிறார்.
அதற்குமுன் சிவவாக்கியர் பெருமான் என்ன சொல்கிறார் என்பதனைக் கவனிப்போம்.
உடலின் உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் காற்றினைக் கூர்ந்து கவனித்து நன்றாக மூளைக்குச் செல்லுமாறு செய்வதனால் உடல் தளர்ந்தவரும் மெலிந்தவரும்கூட ஊக்கம் பெற்றுச் செயல் செய்யத் தொடங்குவார். பொலிவும் பெறுவார்கள். இஃது உண்மை என்கிறார்.
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே! – பாடல் 4; சிவவாக்கியர் பெருமான்.
காற்றினில் கருத்தை வைத்தால் கவலை ஒழியும்!
பரமாத்மா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
நம்மை அலைக்கழிக்கும் புறக் காரணிகளைப் புறத்திலேயே விட்டுவிட்டுக் கண்ணைப் புருவ மத்தியில் குவித்து, நம் நாசியில் மேல் நோக்கியும் (பிராணன்) கீழ் நோக்கியும் (அபானன்) ஒடிக் கொண்டிருக்கும் காற்றுகளைச் சமன் செய்து கொண்டு புலன்களை, மனத்தை, புத்தியைக் கட்டி, மன அமைதியே இலக்கெனக் கொண்டு ஆசை, அச்சம், கோபம் தவிர்ப்பவனே (இல்லறத்தில்) துறவி. – 5:27-28
மூச்சைக் கவனி; உன்னைக் கட்டலாம்; உயர்ந்து நிற்கலாம் என்கிறார்!
அடுத்து, இந்தச் சந்நியாச யோகமென்னும் ஐந்தாம் அத்தியாயத்தின் இறுதிப் பாடலாகச்:
செய்ய வேண்டிய செயல்களே வேள்வி; அவற்றைப் பற்றற்றுச் செய்வதே தவம்! இவற்றைக் கடைப்பிடிப்பவன் இந்த உலகினிற்கே வழிகாட்டியும் நன்பனாகவும் ஆக முடியும் என்பதனை அறிவான், அமைதியடைவான். – 5:29
சந்நியாச யோகமென்னும் ஐந்தாம் அத்தியாயம் முற்றிற்று.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments