top of page
Search

05/09/2024, பகவத்கீதை, பகுதி 21


அன்பிற்கினியவர்களுக்கு:

“வெகுளி” என்றால் தற்கால வழக்கில் அப்பாவி என்றே பொருள்படும். வெகுளியா இருக்கான் என்றால் உலக வழக்கம் ஒன்றும் தெரியாமல் இருக்கான் என்று பொருள்படும்.

 

ஆனால், நம் பேராசான் காலத்தில் வெகுளி என்றால் பெருங்கோபம் என்று பொருள். வெகுளாமை வேண்டும் என்கிறார். இதனை ஒரு அதிகாரமாக அமைத்துள்ளார்.

 

அதைப்போல, கீதையில் வரும் சாதி, வர்ணம் என்ற சொல்களுக்குத்  தற்காலத்தில் சொல்லப்படும் பொருள்களைக் கொண்டு ஆராய்வதை சற்று கவனமுடன் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன்.

 

தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் வள்ளுவமும் மகளிரும் என்னும் கட்டுரையில் பின்வருமாறு எடுத்துவைக்கிறார்:

 

“… மனு ஸ்மிருதி எழுந்த நாளில் (இருந்து இது போன்ற கருத்துகள்) வலிவடைந்தது. இக்கொள்கையைப் பரப்பியவர் ஜதிஸாயனர் என்னும் முனிவரே என்று பூர்வமீமாம்ஸையில் ஜைமினி கூறுகின்றார். ஜைமினி இந்தப் பொய் கொள்கையை (பிற்போக்குக் கருத்துகளை) எதிர்த்து உரையாடுகிறார். … திருமறையின் கொள்கைக்கு முரண்படுதலினால், மனுவின் கொள்கைகள் கொள்ளத்தக்கதன்று என முடிவு கட்டுகின்றார்.

வாதராயனர் என்னும் வியாசர் முதலியோர் பெண்களுக்கும் சடங்குகளில் ஒத்த உரிமையுண்டு என்ற கொள்கையை உடையவர்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றனர்.

 

மேலும் தெ.பொ.மீ தொடர்கிறார்.

 

“… ஆனாலும், என்ன பயன்? திருமறையின் கொள்கையை உலகினர் மறந்துவிடவே மனுவின் கொள்கையே பரவியது …”

 

(காண்க - பக்கம் 11, “வள்ளுவரும் மகளிரும்”, முதற் பதிப்பு 2014, முல்லை நிலையம் வெளியீடு)

 

படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பதனைப் போன்றே நம் நிலை.

 

சின்ன நூல் கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது என்பது போல சில சொல்களே பல பெரும் நூல்களைக் கற்க விடாமல் தடுக்கின்றன.

 

என் ஆசிரியர் எனக்கு எப்பொழுதும் சொல்லுவார்: “சொல்களைப் பிடித்துக் கொண்டு தொங்காதே” என்று! அதன் பின்னிருக்கும் உணர்வுகளை உணர்ந்து அறி என்பார்.

 

இவ்வளவு நீண்ட இடையீடு ஏன் என்றால் சாதி, வர்ணம் என்ற சொல்களைப் பிடித்துக் கொண்டு பல பெரும் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு விட்டன. யாரும் மறுப்பதற்கில்லை.

 

கடவுளைக்கூட மறந்துவிடுவார்கள்;

மதத்தைக்கூட மறந்து இருந்து விடுவார்கள்;

ஆனால், சாதியை மட்டும் மறக்கவே முடியாதபடி விதைத்துவிட்டார்கள்.

 

கண்டம் விட்டு கண்டம் தாவி “சாதி” என்ற ஒன்று அறிந்திராத இடங்களிலும்கூட சாதி சங்கங்கள் வைத்துச் சாதியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பார்கள் நம்மவர்கள்.

 

இந்தக் கொடுமையைத் தத்துவங்களின் துணைக்கொண்டு கருத்தியலின் மூலமுமே களைய இயலும்.

 

இதற்கு என்ன மருந்து என்றால் நம் பேராசான் வள்ளுவப் பெருந்தகை அன்பு மற்றும் அருள் என்பார்.

 

நாம் கீதையின் முதல் அத்தியாயத்தில் பாடல் 44 வரை பார்த்தோம். காண்க 03/09/2024. பாடல் 45 இல் இருந்து அர்ஜுனன் மேலும் சொல்வதைக் கேட்போம்.

 

“ஐயகோ, என்ன ஒரு பெரும் துன்பம்! அரியணை மேல் ஆசை கொண்டு நம் சுற்றங்களையே அழிக்கத் தொடங்குகிறோமே!

 

நான் ஆயுதங்களைத் தொடாமல் நின்று கொண்டிருக்கும் இவ் வேளையிலேயே அவர்கள் என்னைக் கொன்றுவிட்டாலும் நான் மகிழ்வேன். இந்தப் போருக்கு ஒரு முடிவு வரும். பேரழிவு தடுக்கப்படும் என்று சொல்லி அம்பையும் வில்லையும் கீழே போட்டுவிட்டு தேர் மீது அமர்ந்துவிடுகிறான். – 1:45-47

 

அர்ஜுன விஷாத யோகம் முற்றும்.

 

அவன் தெளிவு பெறுவானா? தொடர்வோம் நாளை.

 

நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 


 

5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page