அன்பிற்கினியவர்களுக்கு:
சந்நியாச யோகம் என்னும் ஐந்தாம் அத்தியாயம் சுருக்கமாக:
துறவறவியலும் இல்லறவியலும் இரண்டுமே உயர்வினைத் தரும். இவற்றுள் இல்லறவியலே இயல்பானது. அஃதாவது, சிறப்பானது.
செயல்களில் வெறுப்பும் விருப்பும் அற்றவனோ அவன் என்றும் துறவியே என அறியத்தக்கவன்.
தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் போற்றுபவன் தாம் செய்யும் செயல்களினால் எந்தவித பாதிப்பும் அடையமாட்டான்.
எவருடைய செயல்களால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கும் இறைவன் என்பவன் பொறுப்பு எடுப்பதில்லை! மயக்கமென்னும் திரை விலக ஞானமானது சூரியனைப் போல ஒளிரும்!
மனத்தினில் சமனிலை எய்தியவர்கள் இயற்கையோடே இயல்பாக ஒன்றி விடுகிறார்கள்.
அகத்துள் சமநிலையில் இருப்போன் அழியாத இன்பம் எய்துகிறான். புறக்காரணிகளால் மகிழ்ச்சி அடைவோன் அக்காரணிகள் நீங்க அவனின் மகிழ்ச்சியும் மறையும்.
செய்ய வேண்டிய செயல்களே வேள்வி; அவற்றைப் பற்றற்றுச் செய்வதே தவம்! இவற்றைக் கடைப்பிடிப்பவன் இந்த உலகினிற்கே வழிகாட்டியும் நண்பனாகவும் ஆக முடியும்!
அஃதாவது, இல்லறத்தார்க்குப் பற்றற்றுச் செயல்களைச் செய்வதே துறவு என்றார். அவர்களே இயற்கையோடு இயல்பாக இயைந்து புகழுடன் நீண்ட நாள் வாழ்வார்கள் என்கிறார்.
அடுத்து வரும் அத்தியாயம் தியான யோகம். தியானம் யோகம் என்பது மனம் ஒரு முகமாகப் பொருந்தி நிற்றலைப் பயிற்சி செய்வது.
இந்த அத்தியாயத்தின் முதல் ஒன்பது பாடல்களில் முன்பு சொன்னவற்றைச் சுருக்கமாக மீண்டும் சொல்கிறார்!
பற்றற்றுக் கடமைகளைச் செய்பவன் துறவி; தீ மூட்டி யாகங்கள் செய்பவனும், எதுவுமே செய்யாமல் ஒதுங்கி இருப்பவனும் துறவி என்று சொல்ல இயலாது. – 6:1
சங்கல்பம் என்பது ஒன்றை இதற்காக இப்படிச் செய்யப் போகிறேன் என்று உறுதி எடுத்துக் கொள்வது. சங்கல்பம் என்பது ஒரு செயலைச் செய்ய மிக முக்கியமான முதல் படி. ஆனால் அந்தச் சங்கல்பம் சுய நலத்தையும், பேராசையையும் அடிப்படையாகக் கொண்டால் அந்தச் சங்கல்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் அடுத்து வரும் பாடல்களில்!
சந்நியாசம் என்பது (இல்லறத்தார்க்கு) பற்றற்றுக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பது. அவற்றிலேயே பொறுந்தி நிற்பவன் யோகி. இரண்டும் ஒன்றே! எனவே, (ஆசையை அடிப்படையாகக் கொண்ட) சங்கல்பத்தைத் துறவாதவன் எவனும் யோகியாகமாட்டான். – 6:2
யோகத்தில் உயர வேண்டும் என்று நினைப்பவன் கடமைகளைப் பற்றற்றுச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறான். அவனுக்கே மனத்தில் அமைதி கிட்டும். இதுவே அவனை மேலும் உயர்த்தும். – 6:3
புலன்களின் நாட்டங்களின் பின் மனத்தை அலைய விடாதவன் செயல்களின் மீது பற்றுக் கொள்வதில்லை. அவ்வாறு இருப்பவன் யோகத்தில் வெற்றி கண்டவன் என்பர். – 6:4
இந்த உடலைக் கொண்டு நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். நமக்கு நாமே நண்பன்; நமக்கு நாமே பகைவன் என்பதை நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். – 6:5
தன்னைத் தான் வென்றவன் தனக்குத் தானே நண்பன்; தன்னை வெல்லாதவன் அவனுக்கு அவனே எதிரியாகிறான். – 6:6
மானம் – அவமானம், குளிர் – வெம்மை, இன்பம் – துன்பம் உள்ளிட்ட இருமைகளின் தாக்கங்களில் இருந்து எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் தன்னை வென்று மனத்தினை அமைதியாக வைப்பவனுக்கு இயற்கை அறிவு (Supreme Conscious) வெளிப்படும். – 6:7
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント