அன்பிற்கினியவர்களுக்கு:
இரண்டாம் அத்தியாயம் – சாங்கிய யோகம்
சாங்கியம் என்றால் ஆராய்ந்து தெளிவதால் அடையும் அறிவு அல்லது ஞானம். யோகம் என்றால் அதனைச் சிந்தித்துச் செயல்படுத்தும் வழிமுறை என்று பொருள்படுகிறது.
இஃது எங்கனம்?
இந்த அத்தியாயத்தில், கிருஷ்ண பரமாத்மா பாடல் 39 இல் இதுவரை சாங்கியம் என்னவென்று விளக்கினேன். இனி யோகத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன் என்கிறார். இங்கே சாங்கியத்தையும் யோகத்தையும் பிரித்தே பொருள் கொள்ளவேண்டியிருக்கிறது.
ஒன்று அறிவிலே தெளிவு; மற்றொன்று அதன் செயல்வடிவம் என்று பொருள்படுகிறது.
எதனை ஆராயப் போகிறார்?
ஆத்மா என்னும் கருத்தியலைக் குறித்து ஆராயப் போகிறார்.
ஆன்மா, ஆத்மா, உயிர் என்பன உண்மையா? பொய்யா? என்பன பல காலமாக இருந்துவரும் விவாதங்களே! இஃதும் கடவுள் உண்டா இல்லையா என்ற வினாவும் எந்தக் காலத்திலும் அலசப்பட்டுக் கொண்டே இருக்கும்.
கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்றால் ஆத்மாவை என்னவென்று அறிந்து கொண்டால் அந்த ஞானம் உன்னைச் சரியான பாதையில் செலுத்தும். குழப்பங்கள் ஏற்படாது என்கிறார்.
ஆத்மா தங்கும் இடம் உடல்;
உடல் அழிந்தால் ஆத்மா அங்கு இருக்க இயலாது;
ஆத்மா நீங்கினால் உடல் அழியும், அழுகும். அவ்வளவே!
பிண்டத்தில் உயிர் இணையும்போது உடல் உருவாகிறது. உயிர் நீங்கும்போது உடல் சடமாகிறது, சடலமாகிறது.
சரி அந்த உயிர் எங்கே போகிறது? என்னவாகிறது? போன்ற வினாக்கள் எழுவது இயற்கை.
இதெல்லாம் வீணான வினாக்கள். இயற்கையே அவ்வாறுதான். உடல் இயங்கத் தொடங்குவதும் இயற்கை; சில காலம் கழித்து பிரிவதும் இயற்கை. இந்த ஆத்மா என்னும் கொள்கையைக் காட்டி அடிமைப்படுத்தாதீர், பயமுறுத்தாதீர் என்பவர்கள் பலர். அந்தக் கருத்திலும் உண்மை இல்லாமலும் இல்லை.
மகாகவி பாரதியார் என்ன சொல்கிறார் என்றால்
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாம் என்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! --- மகாகவி பாரதியார்
என்று சங்கநாதம் முழங்குகிறார். மேலும் என்ன சொல்கிறார் என்பதில்தான் சாங்கிய யோகத்தின் இரகசியம் இருக்கிறது. பின்னர் விரிப்போம்.
சரி, ஆத்மா அல்லது உயிர் என்ற ஒன்று இருக்கிறதா என்று சிந்திப்போம்.
இளைஞர் ஒருவரை அழைத்துத் தம்பி இந்த அறை நெடுகிலும் வேகமாக நடந்து காட்ட முடியுமா என்று வினவினால், அதற்கென்னவென்று விடுவிடுவென்று நடந்து காட்டுவார்.
அதுவும் அந்த அறையில் கன்னியர்கள் இருந்துவிட்டால் அவரின் மிடுக்கே தனியாகத்தான் இருக்கும்.
தம்பி, அப்படியே அந்த மூட்டை இருக்கிறதே அது ஒரு பதினைந்து கிலோ எடையிருக்கும். அதனைத் தூக்கிக் கொண்டு இப்பொழுது நடந்து காட்டினீர்களே அதே போல நடக்க முடியுமா என்றால் மேலும் கீழும் பார்ப்பார். அந்தக் கன்னியர்களையும் பார்ப்பார்.
அதென்ன பெரிய வேலை என்று அந்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடந்துவிடுவார். ஆனால் என்ன அவரின் வேகம் சற்று குறைந்திருக்கும். அந்த எடையைக் கூட்டிக் கொண்டே போனால், அவருக்கு மூச்சு வாங்கும். அடப் போங்கப்பா, எதற்கும் ஒரு அளவு இருக்கா இல்லையா, அதெப்படி முடியும் என்று அவரால் முடியாமல் போகும்போது நிறுத்திவிடுவார். தண்ணீர் குடிப்பார், ஓய்வு எடுப்பார்!
இஃது இயற்கை. அனைத்திற்கும் ஒரு சமநிலைத் தவறும் புள்ளி (Breaking Point) ஒன்று உண்டு.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments