அன்பிற்கினியவர்களுக்கு:
தன் குஞ்சுகளுக்குக் குருவி ஒன்று பெரிய கூடு கட்டியது. அந்தக் கூடு சற்று வெளிச்சமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தது. பறந்து சென்று பார்த்தது; ஒரு பவள மணி கிடைத்தது. அதனைக் கொண்டு சென்று கூட்டினுள் வைத்தது. அந்தக் கூடு கொஞ்சம் வெளிச்சமானது. அடுத்துப் பறந்து சென்றது. ஒரு வைரக்கல் கிடைத்தது. அதனையும் கொண்டு சேர்த்தது. மீண்டும் சென்றபோது அதற்குப் பளப்பான கண்ணாடிச் சில்லு ஒன்று கிடைத்தது. அதனையும் கொண்டு சென்று கூட்டினுள் வைத்தது.
அந்தக் குருவிக்கு அனைத்துக் கற்களும் ஒன்றே. அது கூட்டினை ஒளிப்படுத்த நினைத்தது. அந்தக் கடமையை நிறைவேற்றியது. அவ்வளவே!
பரமாத்தமா தொடர்கிறார்.
அறிவாலும் அனுபவத்தாலும் அமைதியடைந்தவனாய், எதற்கும் அசையாதவனாய், புலன்களை வென்று மண்ணையும், கல்லையும், பொன்னையும் ஒன்று போலக் காணும் பண்பைக் கொண்டவனே யோகி என்று சொல்லப்படுவான். அவனே ஒரு நிலையில் நிற்பவன். – 6:8
மனிதர்கள் பல விதம்; ஒவ்வொருவரும் ஒரு விதம்!
நல்லவர்கள், அன்புடன் பழகுவோர், வஞ்ச நெஞ்சத்தினர், செருக்கு மிகுந்தோர், எந்த ஒரு வம்பிற்கும் செல்லாமல் இருப்போர், வெறுப்பினைத் தூண்டுவோர், உறவினர், துர்புத்தியுடையோர் என சக மனிதர்கள் பல வகையாகத் தோன்றுவர். இவர்கள் அனைவரிடமும் சமபுத்தியுடையவன் சிறந்தவன். – 6:9
நம்மாளு: அது எப்படி இருக்க முடியும்? சாத்தியமில்லையே! நாம் ஒன்றும் களி மண்ணால் அடித்தப் பிண்டமா என்ன? அடித்தவாக்கில் அப்படியே இருக்க!
ஆசிரியர்: நல்ல கேள்விதான். மனம் அலைபாயும்! எண்ணிப் பார்த்தால்: நமக்குக் கெட்டவனாக இருப்பவன் பிறர்க்கு நல்லவனாக இருப்பான்; நம்மிடம் அன்பாக இருப்பவன் பிறரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வான். இன்று அன்பாகப் பழகுபவன் நாளை மாறிவிடுவான்; இந்த நொடி அம்பியாக இருப்பான்; அடுத்த நொடி அந்நியனாக மாறுவான்! எப்பொழுதும் ஒரே நிலையில் மனிதர்கள் இருப்பதில்லை. அந்தக் கூட்டத்தினில் நாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் கடமைகளை நாம் சரியாகச் செய்ய இயலும். அடுத்தவன் மன நிலை நம் மனத்தை ஆட்டிப் பார்க்கக் கூடாது. இதற்குப் பயிற்சி தேவை!
நம்மாளு: என்ன பயிற்சி?
ஆசிரியர்: மனம் ஒருமிக்கும் பயிற்சி! அஃதாவது, தியானப் பயிற்சி. அதற்காகத்தான் இந்தத் தியான யோகம் என்னும் அத்தியாயம்.
கூச்சல் குழப்பங்களிடையே அமைதியாக இருப்பதைப் பழக வேண்டும். அலை பாயும் கடலுக்கு ஆழத்தில் அமைதி நிலவுவது போல இருக்க வேண்டும்.
பரமாத்மா தொடர்கிறார்:
எப்பொழுதும் ஏகாந்தத்தில் இருந்து கொண்டு, தன்னந்தனியனாய் உடலையும் உள்ளத்தினையும் அடக்கியவனாய், ஆசைகளைத் தவிர்க்கும் முகமாகப் பொருள்களின்மீது பற்று இல்லாமல் இருக்க தியானத்தை முயல்பவன் தன்னை நிலை நிறுத்துவான். – 6:10
தியானம் செய்வது எப்படி? பரமாத்மா சில குறிப்புகளைக் கொடுக்கிறார். அவரின் குறிப்புகளை நாகூர் ரூமி அவர்களின் குறிப்புகளைக் கொண்டு (ஆல்ஃபா தியானம், நாகூர் ரூமி, கிழக்குப் பதிப்பகம் - முதல் பதிப்பு 2007) விரித்துப் பார்ப்போம். இது ஒரு பயிற்சி முறை. எழுத்துகளால் ஓரளவிற்குதான் விவரிக்க இயலும்! நல்ல குருவினை நாடிக் கற்றுக் கொள்ளலாம்.
முதலில் ஒரு தனி இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். (இரகசிய இடம் என்று பரமாத்மாவும் நாகூர் ரூமி அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.) பிறரின் பார்வைக்கு மறைவான இடமாக இருத்தல் முக்கியம். அந்த இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யக் கூடாது! அஃதாவது, அசைவற்ற இடமாக இருக்க வேண்டும். இருக்கை அதிக உயரமும் வேண்டாம்; தாழ்ந்தும் இருக்க வேண்டாம்.
(பல உரையாசிரியர்கள், தர்பைப் புல்லைப் பரப்பி அதன் மேல் தோலையோ, அல்லது துணியையோ போட்டுக் கொள்ளலாம் என்கிறார்கள். நாம் எங்கே தர்பைக்கும் மான் தோலுக்கும் போவது!)
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments