top of page
Search

08/09/2024, பகவத்கீதை, பகுதி 24


அன்பிற்கினியவர்களுக்கு:

உயிர்களை இறைவன் தோற்றுவிக்கவில்லை; அவை அனாதி காலம் தொட்டே இருக்கின்றன என்கிறது சைவ சித்தாந்தம் என்று பார்த்தோம்.


இருக்கட்டும்.


ஒரு காற்றுப் புகாக் கண்ணாடி பாட்டிலில் (குடுவையில்) கொஞ்சம் தின்பண்டங்களையிட்டு முடி அடைத்துவிடுவோம். அதைச் சில வாரங்களோ, மாதங்களோ கழித்து எடுத்துப் பார்த்தால் அதனுள் வண்டுகள், பூச்சிகள் இருக்கும். அந்த பண்டங்களும் பொடிப் பொடியாகி கரைந்து இருக்கும். இன்னும் சில மாதங்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் அதனுள் எதுவுமே இருக்காது! எல்லாம் மாயமாகிவிட்டிருக்கும்!


யாரும் நடமாடாத சாலையின் ஓரத்தில் நாய் ஒன்று அடிபட்டு இறந்து கிடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். முதலில் ஈக்கள் மொய்க்கும்; பின்னர் எறும்புகள் அணி வகுக்கும்; அப்படியே விட்டு விட்டால் புழுக்கள் தோன்றும்; இன்னும் பல பூச்சிகள் தோன்றும்; சில பல நாள்கள் கழித்துப் பார்த்தால் அங்கு நாய் ஒன்று இறந்த தடமே தெரியாமல் சுத்தமாக இருக்கும்!


இஃது இயற்கை. இதுவே பிரபஞ்ச இரகசியம். அவ்வளவு உயிர்கள் எங்கிருந்தன? எப்படித் தோன்றின? எங்கே மறைந்தன?


பல உயிர்கள் ஒடுங்கியே இருக்கும்; உயிர்கள் தோன்றுவதுமில்லை; தோற்றுவிக்கப்படுவதும் இல்லை என்கிறார்கள் சைவ சித்தாந்திகள்.

உயிர்கள் அனாதி காலம் தொட்டே இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதனால் பிரபஞ்சமும் அனாதி என்றாகிறது.


உயிரும் உடலும் இணைந்து செயல்படும் இடம்தான் பிரபஞ்சம்.


சரி, ஏன் இந்தத் தத்துவ அலசல் என்றால் நிலையாமை என்பது வாழ்க்கைக்குதான். இயற்கை என்றும் நிலைத்திருக்கும். அஃது என்றும் உள்ள பொருள். அஃதே இறை; அஃதே பதி!


இந்த வாழ்வின் நிலையாமையை அறிந்து கொண்டால் “இதுவும் கடந்து போகும்” என்னும் தெளிவு பிறக்கும்.


இவ்வாறு அலசி ஆராய்ந்து கொண்டே போவதுதான் சாங்கிய யோகம்.

இது நிற்க. மகாகவி பாரதியைக் கேட்டால்:


சென்றதினி மீளாது;மூடரே, நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;

அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும் … 32

 

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!

மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்

மேன்மேலும் புதியகாற்று எம்முள்வந்து

புதிய உயிர் விளைத்தல் கண்டீர்,

ஆன்மா என்றே கருமத் தொடர்பை எண்ணி

அறிவு மயக்கம் கொண்டு கெடுகின்றீரே!

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி

வசப்பட்டுத் தனை மறந்து வாழ்தல் வேண்டும் … 33, பாரதி அறுபத்தாறு, மகாகவி பாரதியார்

 

ஆன்மா, முற்பிறப்பின் வினைத் தொடர்பு என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்கிறார் மகாகவி.


உயிர் அல்லது ஆன்மா என்னும் ஒன்று இல்லை, இல்லவே இல்லை என்று ஆயிரம் வாதங்கள அடுக்கினாலும் தவறில்லை! அதனால் ஆகப்போவதும் ஒன்றும் இல்லை. ஆகக் கடைசியில் உயிர் கூட்டைவிட்டுப் போய்விடும்! அவ்வளவே.


கடமைகளைச் செய்யுங்கள்; கவலையை ஒழியுங்கள்; இன்றுதான் புதிதாய்ப் பிறந்தோம்; கவனத்தில் கொள்ளுங்கள்!


கிருஷ்ண பரமாத்மா சாங்கிய யோகத்தில் என்ன சொல்கிறார் என்பதனை நாளைத் தொடர்வோம்.


நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




3 views0 comments

Commentaires


Post: Blog2_Post
bottom of page