அன்பிற்கினியவர்களுக்கு:
திருதராஷ்ட்டிரரே, மனத்தில் கழிவிரக்கமும், கண்களிலே தாரை தாரையாகக் கண்ணீர் பெருக அர்ஜூனன் மதுசூதனிடம் முறையிட்டான். இதற்குக் கிருஷ்ணர் சொல்லத் தொடங்குகிறார் என்று ஆரம்பிக்கிறார் சஞ்ஞயன். – 2:1
என்ன அர்ஜுனா, இப்படி ஒரு சஞ்சலம் உனக்கு; உன்னைப் போன்ற விரர்களுக்கு (ஆர்யன்) இஃது அழகல்ல; இந்தச் செயல் உனக்கு இம்மையிலும் பயன் தராது; நீ மறைந்த பின்னும் புகழை நிலைக்கச் செய்யாது. -2:2
போரில் புறமுதுகிட்டு ஓடுவது விரர்க்கு அழகல்ல; உன் பலத்தையும் பலவீனத்தையும் அறியாமல் இருப்பதே மிகப் பெரிய அறியாமை. இந்த அறியாமையை ஒழி. – 2:3
இந்தப் பாடலில்தான் கீதையின் இரகசியம் ஒளிந்திருக்கிறது என்கிறார் விவேகானந்தர் பெருமான். அஃதாவது நம் பலமும் பலவீனமும் எவை என்று நாம் அறிந்து வைத்துக் கொள்வது.
கல்கத்தாவில் உள்ள ஒரு நீர் நிலையின் ஓரமாக விவேகானந்தர் நடந்து கொண்டிருந்தாராம். அங்கே குரங்குகள் ஏராளமாக இருந்தனவாம். இவரைப் பார்த்தவுடன் துரத்தத் தொடங்கியதாம். இவரும் மிகவும் பயந்து மூச்சிரைக்க வேகமாக ஓடத் தொடங்கினாராம்.
அந்தக் குரங்குகளும் விடாமல் துரத்தியதாம்.
அப்பொழுது, அந்தக் கரையினில் இருந்த ஒருவர் “ஓடாதே, திரும்பி எதிர்த்து நில்” (Do not run; Face the brute) என்றாராம்.
இதனைச் செவியுற்ற விவேகானந்தரும் உடனே திரும்பி நின்று அந்தக் குரங்குகளைப் பார்த்தாராம். அதனைக் கண்ட அந்தக் குரங்குகள் ஒரு கணம் திகைத்துப் பின்வாங்கி ஒடிவிட்டனாவாம்!
பிரச்சனைகளை எதிர்கொண்டால் அவை மறையும்; நம்மைத் துரத்தாது என்பதனைப் புரிந்துகொள்; பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து கொள்; இதுதான் கீதையின் முக்கியமான இரகசியம் என்கிறார் விவேகானந்தப் பெருமான்.
துணிந்து நில்; தொடர்ந்து செல்;
தோல்வி கிடையாது தம்பி
உள்ளதைச் சொல்; நல்லதைச் செய்;
தெய்வம் இருப்பதை நம்பி … கவிஞர் வாலி, பால்குடம். 1969
விவேகானந்தர் திரும்பி நின்றார்; வெற்றி கண்டார்!
ஆனால், நம் அர்ஜுனன் அவ்வாறு அல்லவே! சஞ்சலமுடையவன் அல்லவா, மீண்டும் புலம்பத் தொடங்குகிறான்.
மதுசூதனா, பூசித்து வணங்க வேண்டிய பீஷ்மரையும், துரோணரையும் அம்புகளால் துளைப்பதா? – 2:4
இவர்களைக் கொல்வதைக் காட்டிலும் பிச்சை எடுத்து வாழலாம்; அவர்கள்தாம் ஆசைகளால் உந்தப்பட்டு இந்தப் போருக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களைக் கொன்று அந்த இரத்ததில் நான் எப்படி இன்பம் காண முடியும்? – 2:5
(ச்சீ, ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நினைத்தானோ?)
வெற்றியை விரும்புவதா? அல்லது தோல்வியை விரும்புவதா? இவர்களைக் கொன்று நான் உயிர் வாழ்வதில் பயன் உண்டா? எனக்குக் குழப்பமாக இருக்கிறதே கிருஷ்ணா! – 2:6
நீதான் எனக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; உன்னைத் தவிர என்னைக் காப்பாற்றக் கூடியவர் யாருமில்லை; நின்னைச் சரணடைகிறேன்; என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல். – 2:7
இந்த உலகத்தையே வெற்றி கொண்டாலும் எனது மனத்திற்கு அமைதி கிட்டாது என்றே தோன்றுகிறது. – 2:8
இவ்வாறு போர் முனையில் நிகழும் இந்த உரையாடல்களைத் திருதராஷ்டிரர்க்குச் சொல்லிக் கொண்டிருக்கும் சஞ்ஞயன் மேலும் சொல்கிறார்:
அர்ஜுனன் போர் செய்யமாட்டேன் என்று கோவிந்தனுக்குச் சொல்லிவிட்டுத் தேரில் அமர்ந்துவிட்டான் என்கிறார். – 2:9
அர்ஜுனனுக்குத் தன்னம்பிக்கை இருக்க வாய்ப்பே இல்லை! அவன்தான் எப்பொழுதும் யாரையாவது சார்ந்தே வெற்றி பெற்று வருபவனல்லவா?
இப்பொழுது அவனுக்கு வெற்றி பெறுவோமா என்ற பெரும் அச்சம் மனத்தில் எழுந்திருக்க வேண்டும். அவனுக்குப் பரமாத்மாவின் முழு ஆதரவும் வேண்டும் என்பதற்காக இது போன்று புலம்புகிறானா?
பரமாத்மா இருந்தும் வெல்ல முடியாமல் போய்விடும் என்று எண்ணுகிறானா? இவ்வாறு பல ஐயங்கள்.
பரமாத்விற்கு எந்தக் குழப்பமும் இல்லை. அவர்தாம் முடிவை நிர்ணயித்துக் கொண்டு செல்பவராயிற்றே!
அவனுக்குதான் எல்லாக் குழப்பமும்!
கிருஷ்ணர் அவன் பக்கம் உள்ளார். எதனையாவது செய்து அவனை வெற்றி கொள்ளச் செய்வார் என்று தெரிந்தாலும் ஒரு வேளை தோற்றுவிட்டால் அவனின் பிம்பம் சிதைந்துவிடுமே என்று கவலைப்பட்டானா? பரமாத்வின் மீதே நம்பிக்கையின்மையா?
பரமாத்மா சிரித்துக் கொண்டே (மனத்தில் அவருக்கு அவனின் உண்மையான எண்ணங்கள் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். இருப்பினும்… ) அவனுக்குச் சொல்லத் தொடங்குகிறார். – 2:10
குழந்தை சாப்பிடமாட்டேன் என்றால் அன்னை விட்டுவிடுவாளா என்ன? அவளுக்குத் தெரியுமே அஃது ஒரு விளையாட்டு என்று! ஏதேதோ சொல்லி ஊட்டிவிடுவாள். அந்தத் தைரியம்தானே குழந்தைகளுக்கு அடம் பிடிக்க!
பரமாத்மா என்ன சொல்லப் போகிறார் என்பதனை நாளைப் பார்ப்போம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments