top of page
Search

11/09/2024, பகவத்கீதை, பகுதி 27

அன்பிற்கினியவர்களுக்கு:

யோக முத்திரை (சுருக்கமாக முத்திரை) என்பது நம் சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவுவது. கையில் உள்ள விரல்களைக் கொண்டு செய்வது.

முத்திரைகளில் ஒரு முத்திரை சின்முத்திரை. இதனை ஞான முத்திரை என்றும் வழங்குவார்கள். இந்த முத்திரை அறிவின் தெளிவை ஒருமுகப்படுத்தும் என்கிறார்கள்.


சுட்டு விரலின் நுனியைப் பெரு விரலின் நுனியோடு சேர்த்து வைத்துக் கொண்டு ஏனைய மூன்று விரல்களையும் அப்படியே தனியாக விட்டுவிட்டால் அதுதான் சின்முத்திரை.


இங்கே சுட்டு விரல் – ஜீவன் (உயிர்); கட்டை விரல் – சிவன் (பதி). உயிரும் இறையும் இணையும் வேளை ஞானம் பிறக்கும்! பற்றுகளை விட்டுவிட்டால்!

விடப்பட்ட மூன்று விரல்களும் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயையைக் குறிக்கும்.


இஃது ஒரு குறியீடு. உணர்ந்து கொண்டு செய்தால் தெளிவு பிறக்கும்.

விரல்களில் தத்துவங்கள் ஏராளம்!


ஒவ்வொரு விரலும் ஒரு பஞ்ச பூதத்தைக் குறிக்கும். Accupressure (அக்குபிரஷர்) முதலான சிகிச்சை முறைகள் இவற்றைப் பயன்படுத்தி உடலுக்கு வரும் நோய்களை நீக்குகின்றன.


பெருவிரல் அல்லது கட்டைவிரல் நெருப்பினைக் குறிக்கும்; சுட்டு விரல் அல்லது ஆள் காட்டி விரல் - காற்று; நடுவிரல் - ஆகாயம்; மோதிர விரல் – நிலம்; சுண்டு விரல் – நீர்.


நெருப்பினில் அனைத்தும் பொடிப் பொடியாகும்!


காற்று அலைபாயும்; உடலில் உள்ள காற்றுகள் பத்து (தச வாயுக்கள்) என்கிறார்கள். விரித்தால் விரியும்.


உடலில் காற்றுத் தொல்லை இருந்தால் சுட்டு விரலின் நுனியை பெருவிரலின் நுனியோடு இணைத்தால் காற்றின் அட்டகாசம் ஒடுங்குமாம்;

உடலில் உள்ள காற்று அதற்குரிய சக்தி இல்லாமல் இயங்கினால் கட்டைவிரலினை சுட்டு விரலின் அடியில் வைத்துக் கொள்ள வேண்டுமாம்.

அடியில் வைத்தால் பெருகும்; தலையில் (நுனியில்) வைத்தால் அடங்கும்! ஓவ்வொரு விரலுக்கும் அவ்வாறே.


என்னனு சொல்லத் தெரியலை. உடம்பே ஒரு நிலையில் இல்லைன்னு நினைத்தீர்கள் என்றால் உங்கள் உடம்பில் பஞ்சபூதங்களும் ஒரு நிலையில் இல்லை என்று பொருள்.


எதனால் ஒரு நோய் வந்தது என்று தெரியவில்லை என்றால், ஆங்கில மருந்துகளில் பல்வேறு கிருமிகளைத் தாக்கும் கலவை (broad spectrum antibiotics) என்னும் ஒன்றைத் தருவார்கள். காரணம் இன்னவென்றுத் தெரியாமலேயே அது நோயைக் குணப்படுத்திவிடும்.

முத்திரையிலும் அது போன்று ஒரு முத்திரை உள்ளது. அதுதான் சமான முத்திரை!


இஃது ஒன்றுமல்ல, ஐந்து விரல்களையும் ஒரு மொக்கு போல குவித்து வைத்துக் கொள்வதுதான் அந்த முத்திரை. இரு கைகளிலும் செய்யலாம். எவ்வளவு நேரம் இயலுமோ அவ்வளவு நேரம்.

நம்மாளு:

… முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக் கோனே

காசு, முதலாளி ஆக்குமடா தாண்டவக் கோனே …

 

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்

காசுமுன் செல்லாதடி – குதம்பாய்; காசு முன் செல்லாதடி.

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்குப் பின்னாலே – குதம்பாய் காசுக்குப் பின்னாலே … கவிராயர் உடுமலை நாரயணகவி, பராசக்தி,1952

 

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்

எஃகு அதனின் கூரியது இல். --- குறள் 759; அதிகாரம் - பொருள் செயல் வகை

 

ஆசிரியர்: என்ன பாட்டும் குறளும் பலமாக வருகின்றன? பணம் வருவதற்கு, செல்வங்கள் சேர்வதற்கு முத்திரை இருக்கிறதா என்கிறீர்களா?

காரியத்தில் கண் அதானே!


அதுதான் பகவத்கீதையின் உபதேசமும் கூட.

நாளைக்குப் பார்க்கலாம் என்றார்.


நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page