அன்பிற்கினியவர்களுக்கு:
செல்வம் பெருக குபேர முத்திரை என்கிறார்கள்.
செல்வங்கள் பல விதம். எல்லாவற்றிற்கும் ஒரே வழிதான்!
போவதற்கான வழிமுறையை அடக்கினால் சேரும்.
ஆகாறு அளவிட்டது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை. --- குறள் 478; அதிகாரம் – வலியறிதல்
பணம் போவது எவ்வாறு என்றால் அலைந்து கொண்டேயிருந்தால் போய்விடும். பணம் மட்டுமல்ல, மனமும், மானமும்கூட கெட்டுப் போக அதுவே காரணம்.
அலைவதற்குக் காரணம் இடமும், அலையும் நெஞ்சமும்!
இடம் என்பது ஆகாசம்; அலைவது காற்று. இந்த இரண்டை அடக்கினால் போதும்.
அஃதாவது, சுட்டு விரல், நடுவிரல், கட்டை விரல் நுனிகளை இணைத்தால் அதுதான் குபேர முத்திரை.
உணர்ந்து செய்தால் பயன் அதிகம். சாங்கியமாகச் செய்தால் சுகமில்லை.
பார்த்தீர்களா, நாம் தற்கால வழக்கில் “சாங்கியம்” என்பதற்கு “ஒப்புக்குச் செய்வது” என்னும் பொருளில் தொனிக்கிறது. அக்காலத்தில் சாங்கியம் என்பது அறிவின் தேடல்!
நாம் பார்த்தவை முத்திரைகள் குறித்த அறிமுகம்தான். நல்ல குருவை நாடிக் கற்றுக் கொள்ளவும்.
இது நிற்க.
அனாதி என்றால் அதற்குக் கால அளவு உண்டா? அறிவியல் என்ன சொல்கிறது என்பதனையும் பார்த்துவிட்டு மீண்டும் கீதைக்குள் நுழைவோம்.
இந்தப் பூமிப் பந்தின் வயது என்ன? இந்தச் சூரிய குடும்பத்தின் (Solar system) வயது என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?
அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இந்தச் சூரிய குடும்பத்தின் வயது சுமார் 456 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்கிறார்கள். பூமிப் பந்தின் வயதிற்குச் சூரிய குடும்பத் தோற்றத்தில் இருந்து கொஞ்சம் கோடியைக் கழித்துக் கொள்ளலாமாம். சுமார் 450 கோடி ஆண்டுகள்!
சரி, இதனை எவ்வாறு கணித்தார்கள்? யார் இந்த வேலையைப் பார்த்தது என்கிறீர்களா?
ரேடியோமெட்ரிக் கால அளவு முறை (Radiometric dating) மூலம் சூரிய குடும்பம் 460 கோடி பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். பூமியில் அறியப்பட்ட மிகப் பழமையான கனிமப் படிமங்கள் தோராயமாக 440 கோடி ஆண்டுகள் பழமையானவை என்கிறார்கள். காண்க: http://www.geology.wisc.edu/%7Evalley/zircons/Wilde2001Nature.pdf
இந்த வகைப் படிமங்கள் கிடைப்பதில் பல நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. பூமியின் மேற்பரப்பு தொடர்ந்து இயற்கையின் சீற்றத்தால் கணம்தோறும் மாறிக்கொண்டே உள்ளது. எனவே, விண்கற்களையும் பயன்படுத்துகிறார்களாம்! சந்திரனிலிருந்த படிமங்களை ஆராய்ந்தார்கள் என்றும் சொல்கிறது NASA (அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்).
சரி, இன்னும் எவ்வளவு காலம் இந்தச் சூரியக் குடும்பம் இருக்கும் என்றால், இப்பொழுது அதன் வாழ் நாளில் பாதிதான் முடிந்துள்ளதாம். இன்னும் 460 கோடி ஆண்டுகளுக்கு மேலாம்.
சரி, ஏன் இங்கே சுற்றிக் கொண்டுள்ளோம் என்று கேட்கிறிர்களா?
அதாங்க, பதி, பசு, பாசம் அனாதி என்றார்களே, அதன் காலம் சுமார் எவ்வளவுக்கு மேல் இருக்கும் என்னும் ஆராய்ச்சிதான்!
நாளையும் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント