அன்பிற்கினியவர்களுக்கு:
தியான யோகத்தில் பார்த்த சில கருத்துகள்:
சந்நியாசம் என்பது (இல்லறத்தார்க்கு) பற்றற்றுக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பது. இந்த உடலைக் கொண்டு நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். தியானப் பயிற்சி செய்பவன் மன அமைதி அடைகின்றான்.
மிதமான உணவு; சற்றுச் சிறிய நடை; மிதமான உழைப்பு; மிதமான உறக்கம்; விழிப்புடன் இருத்தல் உள்ளிட்டவற்றைக் கைக்கொண்டால் தியான யோகமானது துன்பங்களைத் துடைக்கும் கருவியாக இருக்கும்.
தியானப் பயிற்சி என்பது எந்த அளவிற்கு முயல்கிறோமோ அந்த அளவிற்குப் பயனளிப்பது. எவன் சிரத்தையுடன் (உள்ளமொன்றி மன உறுதியுடன்) இயற்கையுடன் இயைந்து, உள்ளத்தால் இயற்கையைப் போற்றி செயல்களைச் செய்கின்றானோ அவன் யோகிகளூள் சிறந்தவன் என்றார்.
அடுத்து ஏழாம் அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தைப் பார்ப்போம்.
ஞானம் என்றால் அறிவு; அதனைப் பயன்படுத்தி பெறும் அனுபவம் தான் விஞ்ஞானம்! படிப்பறிவும் பட்டறிவும் இணையும் புள்ளியில் உயர் வகைத் தெளிவு பிறக்கும்.
உண்மையான உள் பொருள்களைத் தெரிந்து கொள்வது, அறிந்து கொள்வது ஞானம்; அதனில் லயித்துக் காரியங்களைச் செய்யும் பொழுது ஏற்படும் தெளிவு விஞ்ஞானம்.
இந்த அத்தியாயத்தில் பரமாத்மா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
மய்-ஆசக்த-மனாஹ பார்த்த யோகம் யுஞ்சன் மத்-ஆச்ரயஹ அசம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு – 7:1
பார்த்த = பார்த்தா; மயி = என்னிடத்தில்; ஆசக்த-மனாஹ = ஒருமை மனத்தினனாய் பொருந்தி; மத்-ஆச்ரயஹ = என்னையே சார்ந்து; யோகம் = யோகத்தைக்; யுஞ்சன் = கடைப்பிடிப்பவன்; அசம்சயம் =ஐயத்திற்கு இடமின்றி; ஸமக்ரம் = முற்றும்; மாம் = என்னை; யதா = எப்படி; ஜ்ஞாஸ்யஸி = அறிவாயோ; தத் = அதை; ச்ருணு = கேள்
பார்த்தா, இயற்கையில் (என்னிடத்தில்) ஒருமை மனத்தினனாய் பொருந்தி, இயற்கையையே (என்னையே) சார்ந்து இருக்கும் யோகத்தைக் கடைப்பிடிப்பவன், ஐயத்திற்கு இடமின்றி முற்றும் இயற்கையை (என்னை) எப்படி அறிவாயோ அதைக் கேள். – 7:1
என்று இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார்.
எதை அறிந்து, உணர்ந்து கொண்டால் அதன் பின்னர் அறிய வேண்டியது வேறொன்றும் இல்லை (என்று மனம் அமைதியடையுமோ) என்னும் அனுபவத்துடன் கூடிய ஞானம் முழுவதும் உனக்கு உரைக்கின்றேன். – 7:2
மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன்தான் உண்மையான உண்மைப் பொருளைக் காணும் அறிவினைப் பெற முயற்சி செய்கின்றான்; அந்த ஆயிரம் பேர்களில் யாரோ ஒருவன்தான் அந்த உண்மையைக் காண்கின்றான். – 7:3
இந்த உலகத்தில் விளையும் செயல்களுக்குக் காரணிகள் என்பன மொத்தம் எட்டு என்பர்! அவையாவன: மண், நீர், தீ, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம். இதன் கலவைதான் மனிதனுமாம். – 7:4
(சுண்டு விரல் – நீர்; மோதிர விரல் – நிலம்; நடுவிரல் – ஆகாயம்; சுட்டு விரல் அல்லது ஆள் காட்டி விரல் – காற்று; பெருவிரல் அல்லது கட்டைவிரல் நெருப்பினைக் குறிக்கும் என்று முன்னர் சிந்தித்துள்ளோம். காண்க 11/09/2024, பகவத்கீதை, பகுதி 27.)
இயற்கையின் கூறுகள் ஐந்து (பஞ்ச பூதங்கள்) என்று நமக்குத் தெரியும். அவையாவன: நீர், தீ, நிலம், காற்று, ஆகாயம்.
இவற்றில் இருந்து பெறப்படுவன: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் உள்ளிட்ட அனுபவங்கள்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments