அன்பிற்கினியவர்களுக்கு:
அனாதி காலத்தைக் கணிக்க இயலாது. இப்போதைக்கு, 460 கோடிகளுக்கு மேல் என்று எடுத்துக் கொள்ளலாம்.
கொஞ்சம் நாம் எங்கிருக்கிறோம் என்று அலசிவிட்டுக் கீதைக்குள் நுழைவோம். இஃதே சாங்கியம்; அறிவின் தேடல்!
சூரியன் என்பது ஒரு விண்மீன் அல்லது நட்சத்திரம் (star); நட்சத்திரக் கூட்டங்கள் என்பன ஒளி மற்றும் ஆற்றலை வெளியிடக்கூடிய பெரிய விண் அமைப்பு (Celestial bodies); அவை ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் ஹீலியம் (Helium) வாயுக்களால் நிறைந்தவை என்கிறார்கள்; அவற்றின் மையங்களுக்குள் நிகழும் அணுக்களின் இணைவுகளாலும் (nuclear fusion) மற்றும் எதிர் வினைகளாலும் அவை ஒளியையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றன.
நட்சத்திரங்கள் என்பன விண்மீன் மண்டலத்தில் இருக்கும் தூசி மற்றும் வாயு ஆகியவற்றின் கூட்டினால் உருவாகின்றன என்கிறார்கள்; இதற்குப் பல கோடி ஆண்டுகள் ஆகலாமாம்;
நம் சூரியனைச் சுற்றிவருவனவற்றைக் கிரகங்கள் (Planets) என்கிறோம்; கிரகங்களுக்கு ஒளியை உமிழும் தன்மை இல்லை; கிரகங்கள் திட, திரவ, வாயுப் (Solid,liquid and Gaseous) பொருள்களால் ஆனவை; அஃதாவது ஓளியையும் ஆற்றலையும் சூரியனில் இருந்து பெற்றுக் கொள்ளும்!
சூரியன் உள்ளிட்ட பற்பல நட்சத்திரங்கள் (Stars), கிரகங்கள் (Planets), தூசுகள் (Dust), வாயுகள் (Gases) உள்ளிட்டவைகள் ஈர்ப்பு விசையால் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும்; இந்த அமைப்பை ஒரு விண்மீன் மண்டலம் (Galaxy) எனலாம்;
இந்த மண்டலங்களைப் போன்று பல இருக்கலாமாம்; அவை பல கோடிக் கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருக்கலாமாம்;
விண்மீன் மண்டலங்கள் தங்கள் மையத்தில் கருந்துளைகளைக் (Black hole) கொண்டிருக்குமாம்; அந்த மையத்தைக் கொண்டு மண்டலங்கள் சுற்றி வருமாம்; அந்தக் கருந்துளைகள் நம் சூரியனைப் போன்று பல மடங்கு பெரியதாகவும் இருக்கலாமாம்!
நாம் இருக்கும் இந்த மண்டலத்தினைப் பால் வெளி மண்டலம் (Milkyway Galaxy) என்று வழங்குகிறார்கள்; இந்தப் பால் வெளியில் 20000 முதல் 40000 கோடி நட்சத்திரங்கள் வரை இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்!
பால் வெளியின் ஒரு ஓரத்தில்தான் நம் சூரியக் குடும்பம் (Solar system) தொங்கிக் கொண்டு உள்ளதாம்; நாம் இன்னும் பால் வெளியையே முழுவதுமாகப் படம் பிடிக்க முடியவில்லை!
நம் சூரியன் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு அதுவும் ஒரு வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டுள்ளதாம். இந்தச் சூரியன் நம் பால் வெளியைச் சுற்றிவர, நம் கணக்கில், 22.5 கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளுமாம்!
நம் பால் வெளியைப் போன்ற பல மண்டலங்கள் ஏதோ ஒரு மையத்தைக் கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன; இந்த மொத்த அமைப்பும்தான் பிரபஞ்சம் (Universe)!
சுருக்கமாக நாம் எவ்வளவு தனித்துவமானவர்கள் என்று பார்ப்போம்: பிரபஞ்சத்தில் (Universe) உள்ள பில்லியன் கணக்கான விண்மீன் திரள்களில் (Galaxies) ஒன்று நமது பால்வெளி மண்டலம் (Milky way galaxy); பால்வெளி மண்டலத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் (Stars) நம் சூரியனும் ஒன்று; நமது பூமி (Planet – Earth) நம் சூரியனைச் சுற்றி வருகிறது; நமது பூமியில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் நாமும் ஒருவர்.
எனவே நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனித்துவமான ஒரு நபர் என்றாலும் நாம் எவ்வளவு பெரிய அல்லது சிறிய ஆள் என்பதும் தெரிகிறது!
இந்தப் பிரபஞ்சமும் விரிவடைந்து கொண்டே உள்ளது (expanding universe) என்கிறார்கள்.
பிரபஞ்சத்தின் வயது எவ்வளவு என்றால், அறிவியல் பூர்வமாகக் கணக்கிட்டு 1370 கோடி ஆண்டுகள் என்கிறார்கள்.
முன்னர் அனாதி காலத்தை 460 கோடி ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம் என்றோம். காண்க https://foxly.link/பகவத்கீதை_பகுதி28
இப்பொழுது அதனை 1370 கோடி ஆண்டுக்களுக்கு முன்னர் இருக்கலாம் என்று சொல்லலாம்.
இது நிற்க.
நம் அறியாமையின் வரலாற்றை நாளைப் பார்ப்போம்!
Komentarze