அன்பிற்கினியவர்களுக்கு:
ஞான விஞ்ஞான யோகத்தின் முக்கிய குறிப்பினை நான்காம் பாடலில் குறித்தார். அஃதாவது, அபர ஞானம் பெற ஏதுவாக இருக்கும் எட்டுக் காரணிகளைச் சொன்னார். அபர ஞானம் என்பது வெளியில் இருந்து உள்ளுக்குள் வருவது.
உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள்; அவற்றால் வரும் அனுபவங்கள்; அவற்றால் கிடைக்கும் தெளிவு இதுவே பர ஞானம்.
அபரம் = knowledge என்றால் பரம் = wisdom என்று எடுத்துக் கொள்ளலாம்.
அபரம் = உள்ளீடு (input) என்றால் பரம் = வெளியீடு (output) என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு நூலை வாசித்தால் அந்த நூலினை வாசித்து முடிக்கும் பொழுது நம்முள் ஒரு மாற்றம், தெளிவு நிகழ்ந்திருக்க வேண்டும். ஆழ் கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்க வேண்டும். அங்கிருக்கும் கிளிஞ்சல்கள் கவர்ச்சியாக இருக்கலாம்! முத்து எடுக்கும்போது கூர்மையான கிளிஞ்சல்கள் நம்மைக் கீறி பதம் பார்க்கும்! கவனம் தேவை. இந்தப் பிரித்தறியும் பகுத்தறியும் தன்மைதான் முக்கியம்.
அடுத்து வரும் பாடலில் இந்தக் குறிப்பினைக் கொடுக்கிறார்.
அபரேயம் இதஸ் த்வந்யாம் பிரக்ருதிம் வித்தி மே பரம்
ஜீவ-பூதாம் மஹா-பாஹோ யயேதம் தார்யதே ஜகத். – 7:5
மஹா-பாஹோ = சிறந்த வீரனே; இயம் = இவை (மேலே சொன்னவை); அபரா = புறத்தில் உள்ளன; இதஹ = இதனில் இருந்து; அன்யாம் = வேறாயுள்ளதும்; ஜீவ பூதாம் = உயிரின் வடிவாக உள்ளிருந்து இயங்கிக் கொண்டிருப்பதும்; யயா = எதனால்; இதம் = இந்த; ஜகத் = உலகம்; தார்யதே மே= நிலைப் பெற்றுள்ளதோ அந்த; பரம் ப்ரக்ருதிம் வித்தி = உள்ளொளியே உண்மையான நீ என்று அறி.
சிறந்த வீரனே, இவை (மேலே சொன்னவை) புறத்தில் உள்ளன. இதனில் இருந்து வேறாயுள்ளதும் உயிரின் வடிவாக உள்ளிருந்து இயங்கிக் கொண்டிருப்பதும், இந்த உலகம் எதனால் நிலைப் பெற்றும் உள்ளதோ அந்த உள்ளொளியே உண்மையான நீ என்று அறி. – 7:5
சரி, இந்தப் பாடலுக்கு இவ்வாறுதான் பண்டைய உரை இருக்கின்றதா என்றும் பார்ப்போம்.
மகாகவி பாரதியார்: இது என் கீழியற்கை. இதினின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி;
அதுவே உயிராவது; பெருந்தோளாய்! அதனால் இவ்வுலகு தாிக்கப்படுகிறது.
சுவாமி சித்பவானந்தர்: இதுவோ என்னுடைய கீழான பிரகிருதி. இதனின்று வேறானதும், உயிர் ஆவதும் ஆகிய என்னுடைய மேலான பிரகிருதியை அறிவாயாக, தோள்வலியோய், இந்த் ஜகத்தானது இதனால் தாங்கப்படுகிறது.
பாட பேதங்கள் உரைகள் தோறும் உள்ளன. மூலத்தை நாடி நாமே தெளிவு பெறுதல்தான் பர ஞானம்!
எல்லாப் பொருள்களும் அபரம் பரம் என்னும் இரண்டினால் ஆனவை என்று அறிந்து கொள். இஃதே இயற்கை (நான்). இந்த உலகத் தோற்றத்திற்கும் மாற்றத்திற்கும் அதுவே (நானே) காரணம். – 7:6
தனஞ்ஜயா, இயற்கையைக் (என்னைக்) காட்டிலும் உயர்ந்த பொருள் வேறில்லை. நூலிலே மணிகளைக் கோத்து மாலை செய்வது போல அனைத்துப் பொருள்களும் இயற்கையில் (என்னில்) அழகாகக் கோர்க்கப்பட்டுள்ளன. – 7:7
குந்திப் புத்திரனே, நீரில் சுவையும்; சூரிய சந்திரர்களிடம் தோன்றும் ஒளியும்; அனைத்து மறை நூல்களில் உள்ள மறை பொருள்களும்; ஆகாயத்தில் வெளிப்படும் ஒலியும்; மனிதர்களுள் உயிர்ப்பும் என அனைத்தும் இயற்கையே (நானே). – 7:8
மண்ணில் மணமும்; தீயினில் ஒளியும்; அனைத்து உயிர்களின் உள் நின்று ஒளிரும் உயிர்ப்பும்; மன உறுதியுடன் குறிக்கோளை நோக்கி நகர்பவர்களுக்கு மன உறுதியாகவும் ஆகின்றேன். – 7:9
நாளைத் தொடர்வோம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments