top of page
Search

14/09/2024, பகவத்கீதை, பகுதி 30

அன்பிற்கினியவர்களுக்கு:

கி.பி. 1543 இல்தான் இந்தப் பூமிப் பந்து சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரலாம் (Helio centric) என்றார் கோபர்நிக்கஸ் (Copernicus); ஏற்றுக் கொள்ளப்படவில்லை!


அதுவரை, தாலமியின் புவி மைய வாதத்தைக் (Ptolemaic Geo centrism) கொண்டு பூமியை மையமாகக் கொண்டே சூரியன் முதலானவை சுற்றி வருகின்றன என்றார்கள்.


கோபர்நிக்கஸின் கருதுகோளைத் (Copernican Heliocentrism) தொலை நோக்கியின் மூலம் உறுதி செய்தார் கலிலியோ (Galileo).


எப்பொழுது? கி.பி. 1615 இல். அஃதாவது சற்றேறக் குறைய 400 ஆண்டுகளுக்கு முன்தான்! பிரபஞ்சக் காலக் கணக்கில் சிறு துளி!


அப்பொழுதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை!


கலிலியோவைக் கல்லால் அடித்தார்கள்; சாகும் வரையில் வீட்டுக் காவலில் வைத்தார்கள்; எதிர் வாதம் செய்தார்கள். மத நம்பிக்கைக்கு எதிரானது என்றார்கள்; மறையில் சொல்லப்படவில்லை என்றார்கள்; கண்ணால் காண முடியாதனவற்றை நம்ப முடியாது என்றார்கள்!


உண்மைகளைச் சொல்வதில்கூட சில நேரம் கவனம் தேவை! காண்க குறள் 970. https://foxly.link/easythirukkural_470_எள்ளாத.


உண்மைகள் எப்பொழுதும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை! நம் மரபு அறிவும் பொது புத்தியும் இடம் கொடா!


பூமியானது சூரியனைச் சுற்றிக் கொண்டுள்ளது என்னும் உண்மையைச் சிறிது காலம் கழித்து ஏற்றுக் கொண்டது இந்த உலகம்!


இது நிற்க.


ஒரு வீட்டினுள் சூரிய ஒளிக்கதிர் ஏதோ ஒரு ஓட்டையின் மூலம் விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். நாம் அந்தக் கதிரைக் காணும் பொழுது அதனுள் தூசுகள் மிதந்து கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். அந்தத் தூசுகள் அதுவரை நம் இல்லத்தினுள்ளே இருந்தவைதாம். இருப்பினும் அந்த ஒளிக் கதிர் பாயும் பொழுது நம்மால் தெளிவாகக் காண முடிகின்றது.

அந்தத் துகள்களின் எண்ணிக்கையை நம்மால் எண்ணத்தான் முடியுமா? பல கோடிகள் இருக்கலாம்.


மேற்கண்ட உருவகத்தைக் கொண்டு பூமிப் பந்து மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டுள்ள ஏனைய கோளங்களும் அவ்வாறே தூசுகள் போல ஏராளம் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!


அதுமட்டுமன்று, அண்டம் என்ற ஒன்று இருக்கின்றது; அதில் உள்ள உண்டை (உருண்டை) பிறக்கம் (குவியல்) அஃதாவது அதில் உள்ள கோளங்களின் குவியல்கள் அளக்க முடியாதன என்கிறார்!


அறிவியலின் துணை கொண்டு நாம் பூமி உள்ளிட்டவை உருண்டை வடிவம் என்று உறுதி செய்தது கி.பி. 1500 களில்!


பால்வெளி மண்டலம் என்று கண்டதும் அதில் எண்ணற்ற கோளங்கள் இருக்கலாம்; அவை ஒளி வீசிக் கொண்டு இருக்கும் காட்சியை உறுதி செய்ததும் கி.பி. 1600 களில்!


ஆனால், மாணிக்கவாசகப் பெருமான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவற்றைக் கண்டுள்ளார்!


அவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்கிறார்கள் சிலர்; பதிமூன்றாம் நூற்றாண்டு என்கிறார்கள் சிலர். எப்படி இருப்பினும் பால்வெளியைக் காண உதவிய தொலை நோக்கி வருவதற்கு முன்னரே இந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்துள்ளார். அது மட்டுமல்ல அந்தக் கோளங்கள் நூற்று ஒரு கோடிக்கும் மேல் என்றும் சொல்கிறார்.


அந்தப் பெரும் அண்டம் அவர் வணங்கும் இறைவனுக்கு ஒரு துகள் அளவிற்குச் சிறியது என்கிறார்.


இறைவன் என்றாலும் இயற்கை என்றாலும் ஒன்றே. அதன் வியாபகத்தை அளக்க முடியுமா என்ன?


இந்தப் பாடல் தொகுப்பிற்குப் பெயர் திருஅண்டப் பகுதி. முதல் பாடல் இப்படித் தொடங்குகிறது:


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல் நுழை கதிரின் துன்னணுப் புரையச்

சிறிய வாகப் பெரியோன் தெரியின் … திருவண்டப் பகுதி, மாணிக்கவாசகர் பெருமான்

 

இல் நுழைக் கதிரின் துன் அணுப் புரைய = வீட்டில் நுழைந்த கதிரில் காணும் சிறிய துகள்களைப் போல – என்ன ஒரு உவமை!

 

திருவண்டப் பகுதியை The Nature And Development Of The Universe (பிரபஞ்சத்தின் தோற்றமும் வளர்ச்சியும்) என்று மொழி பெயர்த்துள்ளார் பெருமதிப்பிற்குரிய ஜி,யு.போப் (Rev. GU Pope).

 

The development of the sphere of the elemental universe,

Its immeasurable nature and abundant phenomena,

If one would tell their beauty in all its particulars,

As when, more than a hundred millions in number spread abroad,

The thronging atoms are seen in the ray that enters the house, (5)

So is He the GREAT ONE, Who exists in the minutest elements … Translation by Rev. GU Pope

 

சரி, இதற்கும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கீதைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? அதாங்க, நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் கீதையின் பகுதி சாங்கிய யோகம்! சாங்கியம் என்றால் அறிவின் தேடல்! அங்கேதானே இருக்கோம்?

 

இவை போன்ற பாடல்களை ஆராய்ந்து கற்க வேண்டும்.  பல பிறவிகள்தாம் எடுக்க வேண்டும் போல!

 

அனைத்து அருளாளர்களும் பிறவிப் பெருங்கடலை கடந்துவிட வேண்டும் என்று சொல்லும் பொழுது திருநாவுக்கரசர் பெருமான் மட்டும் மனிதப் பிறவி மீண்டும் வேண்டும் என்றார்.

 

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. – திருநாவுக்கரசர் சுவாமிகள்

 

மனித்த பிறவி = மனிதப் பிறவி

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




1 view0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page