அன்பிற்கினியவர்களுக்கு:
எல்லாம் ஒன்றே என்பதனைக் குறிக்க எல்லாம் நானே என்கிறார் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
இயற்கையை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவன்! இயற்கையில் பொதிந்திருக்கும் இரகசியங்கள் நேற்றும் இன்றும் நாளையும், எக்காலத்திலும் ஆச்சரியப்படவைக்கும். நாம் கண்டுபிடிக்கும் அனைத்துப் பொருள்களுக்கும் மூலம் இயற்கை விதிகளே! இயற்கை விதிகளை ஆராய்ந்து அறிவது மேலும் அவற்றை நல் வழிக்கு, நல் வாழ்விற்குப் பயன்படுத்துவதுதாம் ஞான விஞ்ஞான யோகம்.
பார்த்தா, இயற்கையே (நானே) அனைத்துப் பொருள்களுக்கும் வித்து என்று அறி; அறிவாளிகளின் அறிவில் ஒளிர்வதும், துணிவுடன் செயல் ஆற்றுபவர்களின் உள்ளத்தின் துணிவும் இயற்கை விதிகளைக் (என்னைக்) கொண்டே நிகழ்கின்றன. கடமைகளைச் செய்பவர்களுக்கு வலிமையாகவும், பிற உயிர்களிடத்து நல் விருப்பங்களின் வெளிப்பாடாகவும் இருக்கிறேன். – 7:10-11
இயற்கையை அறிய தேவையான முதல் பொருள்கள் எவை என்றால் அவை இடமும் காலமுமே (space and time). இடமும் காலமும் முதல் பொருள் என்றார் தொல்காப்பியர். அனைத்தையும் வரையறுப்பது இடமும் காலமும். இவை மாற விளைவுகளும் மாறும்.
அனைத்து ஆராய்சிகளும் இடத்தையும் காலத்தையும் வரையறுத்த பின்னர் நிகழ்த்தப்படுகின்றன. இந்த இரண்டினை வரையறுக்காமல் செய்யப்படும் ஆராய்ச்சிகள் ஆராய்ச்சிகளே அல்ல.
இடமும் காலமும் மாற குணங்கள் மாறும். குணங்கள் மாற விளைவுகள் மாறும்.
இந்தியத் தத்துவ வரிசையில் குறிப்பிடத்தக்கது சாங்கியத் தத்துவம். கடவுள் என்பவன் வெளியே இல்லை. உனக்குள்ளே இருக்கிறான் என்பது சாங்கியம். பிரகிருதி (இயற்கை), புருஷன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருள்களை மட்டும் பேசுவது சாங்கியம். உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.
முக்குணங்களாவன சாத்விகம், இராசசம்; தாமசம். இம்மூன்றும் இடம் காலத்தைப் பொறுத்து ஒருவர்க்கு அமையும். அமைதியாக இருக்கும் ஒருவர் ஒரு தருணத்தில் வன்முறையாளார் ஆவதனைப் பார்த்துள்ளோம். அந்தச் செயலைச் செய்துவிட்டு அதனை நான்தான் செய்தேனா என்று குழம்புவார்கள்.
காலையில் உலகமே மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும்; பொழுது போகப் போகப் பரபரப்புத் தொற்றிக் கொள்ளும்; உலக ஓட்டம் வேகம் எடுக்கும்; நன்பகலுக்குப்பின் அப்படியே அந்த வேகம் படிப்படியாக குறையும்; மாலையில் ஒரு மயக்கம் வரும்; பின்னர் இரவில் உலகமே ஓய்வெடுக்கும்!
இதனைக் கருத்தில் கொண்டுதான் நிறுவனங்களில் பகல் பொழுதை வேலைக்கான பொழுதாக வைக்கிறார்கள்! உலக மயமாக்கலில் இந்த இயற்கையோடு ஒன்றிப் போவதனை மாற்றி இரவினில் வேலை செய்கிறார்கள். பகலினில் ஓய்வு! ஒளி இல்லாத இரவினை மின் விளக்குகளையிட்டு ஒளியைப் பாய்ச்சி பகலாக்க முயல்கிறார்கள். ஒளிரும் பகலினை பல திரைகளைக் கொண்டு முடியும் கண்ணைக் கட்டிக் கொண்டும் இரவாக்க முயல்கிறார்கள்!
சரி, ஏன் இந்தக் கதைகள் என்கிறீர்களா?
அடுத்து வரும் பாடல்களில் குணங்களைப் பற்றிச் சொல்லப் போகிறார்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments