அன்பிற்கினியவர்களுக்கு:
பிரபஞ்சத்தைக் குறித்த அறிவியல் செய்திகளைப் பார்த்தோம். இப்பொழுது கீதைக்குள் நுழைவோம்.
சற்காரிய வாதத்தைப் பாடல் 2:16 இல் சொன்னார். அதிலிருந்து தொடர்வோம்.
வியாபகத் தன்மை கொண்ட ஆத்மாவிற்கு அழிவில்லை; அதற்கு யாரும் அழிவினை ஏற்படுத்த முடியாது. – 2:17
ஆத்மாவைத் தாங்கி நிற்கும் உடல்களுக்கு அழிவு உண்டு. எனவே போர் செய்வாயாக. – 2:18
எவன் ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ, எவன் கொல்லப்படுவதாக நினைக்கிறானோ இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆத்மா கொல்வதுமில்லை; கொல்லப்படுவதுமில்லை. ஆத்மா பிறப்பதுமில்லை; அழிவதுமில்லை; என்றும் நிலையானது; உடல் அழிந்தாலும் அஃது அழிவதில்லை. நிலையான ஆத்மாவை யாரால் கொல்ல இயலும்; உடல் அழிவு என்பது ஆத்மாவைப் பொறுத்தவரை உடைகளை மாற்றிக் கொள்வதனைப் போன்றது. – 2:19-22
இப்படி ஆத்மாவைப்பற்றி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் பரமாத்மா!
மீண்டும் மீண்டும் மீள்பார்வை செய்வது கவனத்தில் இருத்துவதற்கு உரிய வழி (Repetition is the mother of retention) என்று நினைத்தார் போலும்!
மேலும் தொடர்கிறார்:
ஆத்மாவை ஆயுதங்களால் பதம் பார்க்க முடியாது; நெருப்பும், நீரும், காற்றும் அதனை ஒன்றும் செய்ய முடியாது; வியாபித்து நிற்கும் ஆத்மா அசைவற்றது; புலன்களாலும் மனத்தாலும் உணர முடியாதது; மாறுதலில்லாதது; இவற்றை அறிந்து உன் துக்கத்தை விடுவாயாக. – 2:23-25
நம்மாளு: எங்கும் வியாபித்து நிற்கும் ஆத்மா, அசைவற்ற ஆத்மா ஒரு உடலை விட்டு வேறொரு உடலில் புகுவது எங்கனம்?
ஆசிரியர் அண்ணா சுப்பிரமணியம்: எப்படிச் சூரியன் எழுவதுமில்லை, மறைவதுமில்லையோ அப்படி ஆத்மாவும் ஒரு உடலைவிட்டு இன்னுமோர் உடலை அடைவதுமில்லைதான். நமக்குதான் அது போலத் தோன்றுகிறது. (பக்கம் 34-35, ஸ்ரீமத் பகவத்கீதை – ‘அண்ணா’ சுப்பிரமணியன், ஸ்ரீ இராகிருஷ்ண மடம், மைலாப்பூர் வெளியீடு, V111 5 M 3 C 1 85)
நம்மாளு: அப்பொழுது ஆத்மா நம்முள்ளும் ஊடுருவி நிற்கிறது. இந்த உடலுக்குக் கேடு வரும் பொழுது உடல் அழிகிறது; அந்த வியாபகம் ஊடுருவ நிலைக் களன் இல்லாமல் போகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போல!
அர்ஜுனா நீ, பிறந்து பிறந்து அழியும் உடல்களையே ஆத்மா என்றும் அவற்றையே அழிக்கப் போவதாக நினைத்தாலும் அப்பொழுதும் நீ வருந்த வேண்டியதில்லை. பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம்; இறந்தவன் மீண்டும் பிறக்கலாம்; தவிர்க்க முடியாததைக் குறித்து கவலை ஏன்? – 2:26-27
நம்மாளு: போருக்குன்னு வந்தாச்சு; நான் சொல்வது உனக்குச் சரியாக புரியலைன்னாலும் பரவாயில்லை. ஆரம்பி தம்பின்னு சொல்றார் போல!
கவியரசு கண்ணதாசன்:
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள் ஆஆஅஅ.. கவியரசு கண்ணதாசன், கர்ணன், 1964
நம் கவியரசு மானாவிற்கு மானா என்ற வகையினில் மானிடர் என்று போட்டுவிட்டார். ஆத்மா என்ற கருதுகோள்களில் மானிடர் ஆன்மா மட்டுமல்ல அனைத்து உயிர்களுமே சமம்
இது நிற்க.
நீதி மன்றத்திற்கு ஒரு வழக்கு வந்தது. மூன்று நீதிபதிகளின் அமர்வு விசாரிக்கிறது. அஃது ஒரு கொலை வழக்கு. மகன் தந்தையைக் கொன்றுவிட்டான்.
நீதிபதிகள்: நீ உன் தந்தையைக் கொலை செய்தாயா?
கொலையாளி சொன்னத் தகவலைக் கேட்டு ஒரு நீதிபதி மயக்கம் போட்டுவிட்டார். ஒருவர் வாயடைத்துப் போனார்.
அப்படி என்ன அந்தக் கொலையாளி சொன்னார் என்பதனை நாளைப் பார்ப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários