அன்பிற்கினியவர்களுக்கு:
குணங்களின் கூட்டுதாம் செயல்களை இன்ன வழியினில் செய்ய ஒரு முக்கியமான காரணமாக அமையும்.
குணங்களின் தாக்கம் செயல்களில் நிச்சயம்! அதனால்தான் குணங்களைக் கவனித்தல் வேண்டும். குணங்களை ஒரு நிலையில் வைக்க மனத்தினில் அமைதி தேவை.
குணங்களில் கவனம் செலுத்தினால் மனம் அமைதியாகும். எப்படி எந்தத் திசையினில் நாம் பார்க்கிறோமோ அந்தத் திசையினில் நாம் செலுத்தும் வண்டி செல்வதனைப் போல எவற்றில் நாம் கவனம் செலுத்துகிறோமோ அவற்றில் மனம் குவியும். இதற்குத் தியானம் உள்ளிட்டவை பயன்தரும்.
“குண கர்ம விபாகசஹ” என்றார் நாம் எல்லாரும் அறிந்த பாடல் 4:13 இல்.
மீள்பார்வைக்காக காண்க 25/08/2024, பகவத்கீதை, பகுதி 11:
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகசஹ
தஸ்ய, கர்தாரம் அபி மாம் வித்தி அகர்தாரம் அவ்யயம் – 4:13
(4:13 என்றால் நான்காவது அத்தியாயம், பதிமூன்றாவது பாடல் என்று பொருள்)
நான்கு வர்ணங்கள் எனது கண்டுபிடிப்பு; குணங்களையும் செயல்களையும் கொண்டு அவை பிரிக்கப்படுகின்றன; இவற்றினை நான் தான் கண்டுபிடித்தவன் என்றாலும் மாறுபாடில்லாத அந்த வேறுபாடுகளுக்கு நான் பொறுப்பாளி அல்லன் என்பதை அறி. – 4:13
சரி, நாம் இந்த அத்தியாயத்திற்கு வருவோம்.
முக்குணங்களான சாத்விகம், இராசசம், தாமசம் இயற்கையே! (என்னில் இருந்து தோன்றின). உலகில் காணக் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் குணங்களின் கூட்டினால் உருவாவன என்று அறிந்து கொள். இந்தக் குணங்கள் இயற்கையில் (என்னிடமிருந்து) உருவாவன என்றாலும் அதனுள் இயற்கை (நான்) இல்லை! – 7:12
இந்தப் பாடல் ஒரு மிக முக்கியமான பாடல். குணங்கள் இயற்கை என்றாலும்கூட அந்தக் குணங்களை நம் மனத்தைக் கொண்டு மாற்றி அமைக்க முடியும். இதனைத்தான் குணங்களுள் இயற்கை ஒன்றுவதில்லை என்கிறார். மனம் மாற குணம் மாறும். இதனில் கவனம் கொள். இயற்கையின் செயல் அல்லது ஆண்டவன் செயல் என்றெல்லாம் எவற்றின் மீதும் பாரத்தைப் போடாதே என்கிறார்.
பாடல் 5:15 இல் இதனைத் தெளிவாக்கியுள்ளார். மீள்பார்வைக்காக காண்க 01/11/2024, பகவத்கீதை, பகுதி 77.
எவருடைய செயல்களால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கும் இறைவன் என்பவன் பொறுப்பு எடுப்பதில்லை; (இறைவன் பொறுப்பு எடுத்துக் கொள்வான் என்று) மயக்கமுற்று இருக்கிறார்கள். சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் பொருள். – 5:15
முக்குணங்கள் என்பன தனித்தனியாக இயங்கும் என்றும் நினைப்பதிற்கில்லை. இந்தப் பிரிவுகள் ஒரு புரிதலுக்காக மட்டுமே. முக்குணங்கள் ஒரு கூட்டாகத்தாம் இயங்கும்! எது தூக்கலாக இருக்கிறதோ அதனின் விளைவு, பெரும்பாலும், அந்தக் குணத்தைச் சார்ந்ததாக இருக்கும்.
இயற்கையில் உள்ள இயற்கையை அறிந்து கொண்டு நம் குணங்களையும் செயல்களையும் செலுத்த வேண்டும். இதுவும் ஊரோடு ஒத்து வாழ் என்பதனில் அடங்கும்.
… காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா! … மகாகவி பாரதியார்
இது ஏதோ குழந்தைக்களுக்கான பாட்டு என்று நினைத்தால் அது தவறு.
பரமாத்மா தொடர்கிறார்:
முக்குணங்களின் இழுப்பிற்கெல்லாம் ஆளாகி இந்த உலகம் மயங்கிக் கிடக்கிறது. இதன் பின்னால் உள்ள மாறுபாடில்லாத இயற்கை விதிகளை (என்னை) அறி. உன் செயல்களை வடிவமைக்கலாம். – 7:13
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント