top of page
Search

16/09/2024, பகவத்கீதை, பகுதி 32

அன்பிற்கினியவர்களுக்கு:

ஒரு நீதிபதி மயக்கம் போட்டுவிட்டார்; இன்னுமொரு நீதிபதி வாயடைத்து நின்றார்!


கோர்ட் கலைந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கூடியது.

கொலையாளி சொன்னது என்னவென்றால்:


கணம் கோர்ட்டார் அவர்களே, என் தந்தை என்கிறீர்களே அவரை நான் கொலை செய்யவில்லை. கண்ணன்தான் கொலை செய்தான்.

நீதிபதிகள்: என்ன சொல்கிறீர்கள். நீங்கள் கொலை செய்யும் பொழுது கண்ணால் கண்ட சாட்சிகள் இருக்கின்றனவே! யார் அந்தக் கண்ணன்? அவர் சாட்சிகளின் பட்டியலில் இல்லையே!


நீதிபதிகள் காவல் துறை ஆய்வாளரைப் பார்த்து: யார் அந்தக் கண்ணன்?


ஆய்வாளர்: (குற்றவாளியைப் பார்த்து முறைத்துக் கொண்டே) கண்ணன் என்பவரைக் குறித்து அவன் எங்களிடம் சொல்லவே இல்லை மை லார்ட்!


அவன்: ஐயா, கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!


நீதிபதிகள்: அதற்குதானே இந்த நீதிமன்றம்! சொல்வதைத் தெளிவாகச் சொல்.


அவன்: யாரையும் யாராலும் கொல்ல முடியாது. பிறந்தவன் ஒரு நாள் இறந்தே தீருவான்! நான் அவரைக் கொன்றேன்; இவரைக் கொன்றேன் என்பதெல்லாம் மாயை. இறந்தவன் மீண்டும் பிறப்பான்; பிறந்தவன் மீண்டும் இறப்பான். கண்ணன் சொன்னதை நீங்கள் கேட்டதில்லையா?


நீதிபதிகள்:எங்கே? எப்பொழுது?


அவன்: அப்போ, நீங்கள் கர்ணன் படம் பார்க்கலை. அதில் கண்ணன் பாடுவாரே …

“கண்ணனே காட்டினான்; கண்ணனே சாட்டினான்;

கண்ணனே கொலை செய்கின்றான் …

சொன்னவன் கண்ணன்; சொல்பவன் கண்ணன்;

துணிந்து நில் தர்மம் வாழ …” என்றும் சொல்லியுள்ளான்.

 “…காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக

இக்களமெலாம் சிவக்க…” என்றல்லவா கண்ணன் சொன்னான்.

தர்மம் வாழ செய்ய வேண்டியதைச் செய்தேன். நீங்கள் இந்தப் பாடலைக் கேட்டதில்லையா?


அதனால் அந்தக் கொலையை நான் செய்தேன் என்று கூறமாட்டேன்!

ஆகையினால் நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றால் கண்ணனைத்தான் தண்டிக்க வேண்டும்!


ஒரு நீதிபதி மயக்கம் போட இன்னுமொரு நீதிபதி திகைத்து நிற்க மூத்த நீதிபதி நீதிமன்றத்தைச் சிறிது நேரம் ஒத்தி வைப்பதாகச் சொன்னார்.

நீதிமன்றம் மீண்டும் கூடியது.


மூன்று நிதிபதிகளும் ஒரு சேர எழுந்து நின்று அந்தக் கொலையாளியைப் பார்த்து வணங்குகிறார்கள்.


(நீதிமன்றத்தில் சலசலப்பு.

அமைதி, அமைதி, அமைதி …)


நீதிபதிகள்: நாங்கள் மூவரும் அந்தப் பாடலைக் கேட்டோம். எங்களுக்கு இப்பொழுது ஒரு தெளிவு வந்துவிட்டது; கொன்றவன் கண்ணன்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


அவன்: கோர்ட்டாரை வணங்கிக் கோர்ட்டார் அவர்களே மிக்க மகிழ்ச்சி. நான் செல்லலாமா?


நீதிபதிகள்: கொஞ்சம் பொறுங்கள்.


(நீதிபதிகள் அவனுக்கு ஒரு இருக்கையைத் தருமாறு பணிக்கிறார்கள். அதில் அவன் அமர்ந்த உடன் அவர்களும் அமர்கிறார்கள்.)


மூத்த நீதிபதி: (கண்ணாடியைக் கழற்றி அதனைத் துடைத்துக் கொண்டே) குற்றம் சாட்டப்பட்டவரின் வாதத்தைக் கேட்டவுடன் முதலில் எங்களுக்குத் திகைப்பாகத்தான் இருந்தது.


இதுதான் உண்மையான உண்மை என்ற தெளிவினை ஏற்படுத்திய இந்தக் குற்றவாளிக்கு, இல்லை, இல்லை இந்த அறிவாளிக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம். நாங்களும் இதுநாள்வரை இந்தத் தெளிவாமல் இருந்திருக்கிறோம். குற்றம் நிரூபிக்கபட்டவர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள்தண்டிக்கும்போது எங்களுக்குள் ஒரு விதமான கலக்கம் இருக்கவே செய்யும். நாங்கள் செய்வது சரியா, தவறா? தண்டிப்பதற்கு நாங்கள் யார் என்றெல்லாம் கேள்விகள் எழும். இன்றுதான் அந்த வினாக்களுக்கு விடை கிடைத்தது.


(அவன் கோர்ட்டில் உள்ள அனைவரையும் பார்த்து கர்ணன் திரைப் படத்தில் என்.டி.ராமாராவ் (NT Ramarao) கண்ணன் வேடத்தில் சிரிப்பாரே அது போல ஒரு புன்னகையை உதிர்க்கிறான். உதிர்த்ததும் இல்லாமல் விசுவரூபம் எடுப்பது போன்று நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொள்கிறான்!)


(கோர்ட்டார் மீண்டும் ஒரு முறை அவனை வணங்குகிறார்கள்.)


நீதிபதிகள்: (அவனைப் பார்த்து) ஐயா, வழக்கு என்று ஒன்று எங்களிடம் வந்தால் தீர்ப்பு என்ற ஒன்றினைச் சொல்ல வேண்டும். சொல்லலாங்களா?

அவன்: (புன்னகை மாறாமல் கையாலேயே, ஆகட்டும் என்று செய்கை செய்கிறான். அதே ராமாராவ் பாணி!)


மூத்த நீதிபதி: எங்களின் ஒருமித்த தீர்ப்பு என்னவென்றால் இவரை மரியாதையாக தூக்கிலிட வேண்டும்! அஃதாவது, அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைச் செய்து நாளை காலை தூக்கிலிடுங்கள்.


அவன்: ஐயா, என்ன இது? உங்களுக்குத் தெளிவு வந்துவிட்டது என்றீர்களே?


நீதிபதிகள்: ஆம். தீர்புகளுக்கெல்லாம் நாங்கள்தாம் பொறுப்பு என்று இதுநாள்வரை இருந்தோம். ஆனால் இன்றுதான் தெரிந்தது இதற்கும் கண்ணன்தான் பொறுப்பு. கொலை தண்டனை உங்களுக்கு அல்ல. உங்கள் உடலிற்குதான். மறுபிறவியில் உங்களுக்குப் புதிய உடை போன்ற புதிய உடல் கிடைக்கும்! ஆகையினால் கவலை கொள்ள வேண்டாம்.


(காவலர்களைப் பார்த்து) இவரை எந்தவித மரியாதைக் குறைவுமில்லாமல் நாளைக் காலைத் தூக்கிலிடுங்கள்.


கோர்ட் கலையலாம் என்று சொல்லிவிட்டு மூவரும் கலைந்து சென்றார்கள்.


நாளைச் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





 

3 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page