அன்பிற்கினியவர்களுக்கு:
பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம்; இறந்தவன் மீண்டும் பிறக்கலாம்; தவிர்க்க முடியாததைக் குறித்து கவலை ஏன்? என்று பாடல் 2:27 இனை முடித்திருந்தார்.
அதனிலிருந்து தொடங்குவோம்.
அவ்வியக்த்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத
அவ்யக்தநிதனான் யேவ தத்ர கா பரிதேவனா – 2:28
பாரத = அர்ஜுனா; பூதானி = பொருள்கள்; அவ்வியக்த்தாதீனி = முதலில் தோன்றாமலும்; வ்யக்தமத்யானி = இடையில் சில பொழுது தோன்றியும்; அவ்யக்தநிதனான் யேவ = முடிவில் மறையும் தன்மையையும் உடையன; தத்ர = ஆங்கே/அதற்காக; பரிதேவனா = பரிதவித்தல் ஏன்?
அர்ஜுனா, பொருள்கள் முதலில் தோன்றாமலும், இடையில் சில பொழுது தோன்றியும், முடிவில் மறையும் தன்மையையும் உடையன. ஆங்கே/அதற்காகப் பரிதவித்தல் ஏன்?
நம்மாளு: பற்றுகளை விடு என்கிறார் பரமாத்மா. நம்மிடம் இருக்கும் சில குணங்கள் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் யார்க்கும் தெரியாது. நாம் நம்மைக் குறித்து எது உலகிற்குத் தெரிய வேண்டுமோ அவற்றையே முதன்மைப்படுத்துவோம். நம் மனசாட்சிக்குத் தெரியும், உள்ளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுக்குகளை களைய வேண்டும். அழிக்க வேண்டும் என்று!
இல்லை, இல்லை இவை இதுநாள்வரை என்னுடனே பயனித்துவிட்டதால் அவற்றை விடமாட்டேன் என்பது சரியல்ல. நாம் அவற்றை அழித்தால்தான் நல்ல குணங்கள் குடியேற இடம் இருக்கும். எல்லாமே சில காலம்தான். ஆகையினால், கூடிய விரைவில் தள்ள வேண்டியனவற்றைத் தள்ளுக; கொள்ள வேண்டியனவற்றைக் கொள்ளுக.
இந்த ஆத்மா என்னும் கருத்தினை ஒருவன் வியப்புடன் நோக்குவான்; ஒருவன் வியப்புடன் பேசுவான்; ஒருவன் வியப்புடன் கேட்டுக் கொள்வான்; ஆனால் உண்மையில் எவனும் முழுமையாக அறிந்து கொள்ளமாட்டான். – 2:29
நம்மாளு: மனசாட்சி, மனசாட்சி என்று எல்லாருமே பேசுவார்கள். மனசாட்சிபடி நடப்பார்களா என்றால்? கேள்விக்குறிதான்!
கண்ண பரமாத்மா மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறார்:
எந்த உடலில் இருக்கும் ஆத்மாவும் மரணமில்லாதது; இது குறித்து நீ வருந்துவது வீண். – 2:30
என்று சொல்லி முடித்துவிட்டு “சுயதர்மம்” மற்றும் “ஷத்திரியன்” என்னும் சொல்களை அடுத்த பாடலில் பயன்படுத்துகிறார்.
ஸ்வதர்மம் அபி ச அவேக்ஷ்ய ந விகம்பிதிம் அர்ஹஸி
தர்ம்யாத் யுத்தாத் ச்ரேயஹ அன்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே. – 2:31
ஸ்வதர்மம் அபி ச = உனக்குரிய அறத்தையும்; அவேக்ஷ்ய = நோக்குமிடத்து; விகம்பிதிம் அர்ஹஸி = (நீ) பின்வாங்குவதற்கு உரியவனில்லை; தர்ம்யாத் யுத்தாத் = அறத்தை முன்னிட்டு நிகழும் இந்தப் போரைவிட; அன்யத் = வேறொன்று; ச்ரேயஹ = சிறந்தது; க்ஷத்ரியஸ்ய = வீரனுக்கு; ந வித்யதே = இல்லை
நீ இது என் சுயதர்மம் என்று சொல்வாயானால் அது பொருந்தாது; அறத்தை முன்னிட்டு நிகழும் இந்தப் போரைவிட வேறொன்று சிறந்தது வீரனுக்கு இல்லை.– 2:31
தன்னறம் (சுயதர்மம்) என்றால் நாமே நமக்கு வகுத்துக் கொள்ளும் கொள்கை (Personal Policy). வீரன் (ஷத்திரியன்) என்றால் போராடத் தயங்கா குணம் உடையவன்.
உன்னுடைய பழைய செய்கைகளை நோக்கும் பொழுது நீ பலரைக் கொன்றிருக்கிறாய், பலரை அழித்திருக்கிறாய். அப்பொழுதெல்லாம் நீ வருந்தியவன் இல்லை!
“நான் ஒரு மறவன்; வில்லுக்கு விஜயன்” என்று மார்த்தட்டி நின்று களம் பல கண்டவன்தான் நீ.
இப்பொழுது என்ன மயக்கம், என்ன தயக்கம். ஒரே வேறுபாடு இவர்கள் உனக்கு நெருங்கியவர்கள் அவ்வளவுதான். நெருங்கி இருந்தாலும் நெருஞ்சி முள் போலத் தைத்தால், பார்த்தா, அவற்றைப் பார்த்துப் பக்குவமாக நீக்கிட வேண்டும். இல்லை, இல்லை அவை ஆழமாகப் பதிந்திருக்கிறது என்றால் அறுவை சிகிச்சையும் தேவை என்பதனை உணர் என்று சொல்கிறார் போலும் பரமாத்மா.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários