அன்பிற்கினியவர்களுக்கு:
பாடல் 2:31 றிற்கு “நீ இது என் சுயதர்மம் என்று சொல்வாயானால் அது பொருந்தாது; அறத்தை முன்னிட்டு நிகழும் இந்தப் போரைவிட வேறொன்று சிறந்தது வீரனுக்கு இல்லை.” என்று பார்த்தோம்.
இந்தப் பாடலுக்கு ஆதிசங்கரப் பெருமான் வகுத்துள்ள உரை:
உனது வாழ்வின் தர்மம் என்பது க்ஷத்திரியனுக்கு உரிய தர்மமாகும். அந்தத் தர்மத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நீ இவ்வாறு வருந்தி அமர்வது தகாது. க்ஷத்ரியன் ஒருவனுக்குத் தர்மமான செயலுக்காக நடைபெறும் யுத்தம் என்பது இயற்கையே ஆகும். அதுவே அவன் குறிக்கோள் ஆகும். இப்படிப்பட்ட யுத்தங்கள் தர்மத்தை நிலைநாட்டவும், மக்களைக் காப்பாற்றவும் ஆகும். அதன் விளைவாக நாட்டைக் கைப்பற்றுதல் நிகழ்கிறது. எனவே இது தர்மமான செயலே ஆகும். க்ஷத்ரியன் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தர்ம யுத்தத்தைவிட வேறு ஏதும் நன்மை தராது.
(பக்கம் 63, ஸ்ரீமத் பகவத்கீதை, க.ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம், ஏப்ரல் 2023 பதிப்பு)
ஸ்ரீ இராமநுஜப் பெருமான் உரையும் அதன் விரிவும்:
இப்போது தொடங்கியுள்ள இந்தப் போரில் உயிர்களைக் கொல்வது என்பது தவிர்க்க இயலாது. இவ்வாறு கொல்வது அந்த உயிர்களை வதை செய்வது போன்றதாகும் என்று எண்ணி உனக்கு விதிக்கப்பட்ட கடமையை விடக்கூடாது. அக்னிஷோம யாகத்தில் பசுவதை என்பது தர்மமே ஆகும். அதுபோன்று இந்த யுத்தமும் தர்மமே ஆகும். உண்மையான ஒரு க்ஷத்ரியனுக்கு தர்மமான யுத்தத்தைவிட நன்மையை அளிக்கவல்லது வேறு ஏதும் இல்லை.
இந்தக் கருத்து ஸ்ரீமத் பகவத்கீதையில் (18-43)
சௌர்யம் தேஜோ த்ருதி: தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலா யநம் தாநமீச்வரபாவச்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம். – யுத்த த்தில் யாருக்கும் அஞ்சாத தன்மை, எதிரிகளால் வெல்ல இயலாத தன்மை, எந்தத் தடைகளையும் சமாளிக்கும் வல்லமை, எதனையும் முடிக்கும் திறன், புறமுதுகு காண்பிக்காமல் இருத்தல், தியாகம், நியமிக்கும் ஆற்றல் ஆகியவை க்ஷத்ரியனுக்கு இயல்பாகவே இருக்கும் தன்மை என்று கூறப்பட்டுள்ளது.
அக்னி ஷோம யாகத்தில் வதைக்கப்படும் பசுவிற்கு உண்மையில் எந்தவிதமான ஹிம்சையும் நடைபெறுவதில்லை, வேத வரிகளின்படி அந்தப் பசு தனது தாழ்ந்த உடலை விடுத்து, மிக அழகிய தேவ உடலைப் பெறுகிறது. அதன் பின்னர் ஸ்வர்க்கம் செல்கிறது.
இதனை யஜூர் வேதம் (4-6-9-46) –
ந வா உவேதந்ம்ரியஸே ந ரிஷ்யஸி தேவாக்ம் இதேஷி பதிபி: ஸூகேபி: யத்ர யந்தி ஸூக்ருதோ நாபி துக்ஷ்க்ருத: தத்ரத்வா தேவ: ஸவிதா த தாது
என்று விரிகிறது விளக்கம்.
(பக்கம் 63 - 64, ஸ்ரீமத் பகவத்கீதை, க.ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம், ஏப்ரல் 2023 பதிப்பு)
இது நிற்க.
அர்ஜுனா, போர் உன் வாசலுக்கே வந்து கதவைத்தட்டினால் உன் போன்ற வீரனுக்கு அதுதான் சரியான வாய்ப்பு; இது போன்றதொரு வாய்ப்பினை விரர்கள் புறம் தள்ளமாட்டார்கள். ஆனால், நீ இந்தப் போரினைப் புறந்தள்ளுவாயானால் நீ உன் கடமையைக் கடப்பாட்டைக் கண்ணியத்தைக் கைவிட்டவனாவாய்; இந்தச் செயலால் உனக்குப் புகழும்கிட்டாது. நான் மட்டுமல்ல இந்த உலகமும் உன்னைத் தூற்றும்;
அழியாத பழிச் சொல்லுக்கு ஆளாவாய்; உன் போன்ற வீரனுக்குப் புகழ் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இழி சொல்கள் அனுதினமும் உன்னைக் கொல்லும். உன்னைப் பெரிய வீரன் என்று நினைத்து மதித்துக் கொண்டிருக்கும் தலை சிறந்த வீரர்களும் உன்னை எள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவாய்; உன் பகைவர்களுக்கோ சொல்லவே வேண்டியதில்லை; அவர்களின் ஏளனப் பேச்சுகளைவிட உனக்குத் துன்பம் தரக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்;
ஒரு வேளை இந்தப் போரில் நீ கொல்லப்பட்டால் அது வீர மரணமாகக் கொண்டாடப்படும்; நீ வெற்றி கண்டால் நீ மன்னனாவாய்; துணிந்து நில்; முதலில் எழுந்திரி! – 2:32-37
இன்ப துன்பங்களையும், இலாப நட்டங்களையும், வெற்றி தோல்விகளையும் ஒன்றுபோலப் பாவித்து போரினைத் தொடங்கு; இவ்வாறு பற்றற்று காரியங்களைச் செய்தால் நீ கடமையில் இருந்து நழுவிய பாவத்தைச் செய்யமாட்டாய். – 2:38
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments