அன்பிற்கினியவர்களுக்கு:
இதுவரை பரமாத்மா தர்க்க ரிதியாகச் சொல்லிக் கொண்டு வந்தார்!
சுருக்கமாக: தீமைகளும் நல்லவர்களின் வேடத்தில் இருக்கலாம்; நம்முடன் நெருங்கியத் தொடர்புடனும் இருக்கலாம்; ஆனால், அவற்றைக் களைந்துதாம் ஆக வேண்டும் என்னும் கட்டாயம் வந்துவிட்டால் தயக்கம் கூடாது. அங்கே பற்றுகளுக்குப் பந்த பாசங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
ஆத்மா, ஆன்மா என்பதெல்லாம் நம் மனசாட்சியின் உருவகங்கள்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்! இளைதாக முள் மரம் கொல்க என்றார் நம் வள்ளுவப் பெருந்தகை.
சரி, இவையெல்லாம் புரிகிறது. இருந்தாலும் செயலிலே செய்ய முனையும்போது ஒரு தயக்கம், தடுமாற்றம் வருகிறதே கிருஷ்ணா என்றான் போலும் அர்ஜுனன்.
ஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திஹி யோகே த்விமாம் ச்ருணு
புத்த்யா யுக்தஹ யயா பார்த்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி – 2:39
தே = உனக்கு; ஏஷா = இந்த; ஸாங்க்யே புத்திஹி = அறிவின் வழியில் ஞானத்தைக் குறித்துச்; அபிஹிதா = சொல்லப்பட்டது; யோகே து = இனி கர்மத்தின் மூலம்; இமாம் = இதனை; ச்ருணு = கேள்; யயா = இந்த; புத்த்யா = புத்தியுடன்; கர்ம பந்தம் = கர்மத் தளைகளை; ப்ரஹாஸ்யஸி = அறுத்திடுவாய்.
அர்ஜுனா இதுவரை உனக்கு அறிவின் வழியில் அடிப்படையை விளக்கினேன். அஃதாவது, சாங்கிய முறையில் விளக்கினேன். இனி அந்த ஞானத்தைச் செயல்முறையில் எவ்வாறு அடையலாம் என்பதனைச் சொல்கிறேன். கேள்! இதனால் விளையும் நன்மைகளையும் சொல்வேன். இதனை யோகம் என்று வழங்கலாம். இதனை நீ நன்கு உள்வாங்கிக் கொண்டால் கர்மத் தளைகள் என்று பயப்படுகிறாயே அந்த அச்சம் தேவையில்லாது என்பதனை உணர்வாய் – 2:39
யோக முறையில் முயற்சி வீணாகப் போவதில்லை; இதனால் எதிரிடையான விளைவுகளும் இல்லை; சிறியதாகச் செய்யத் தொடங்கினாலும் அஃது உன்னைப் பெரிய அச்சத்தினின்றும் காப்பாற்றும். – 2:40
இங்கே யோகம் என்றால் முயற்சி
அஃதாவது, “முயற்சி தன் மெய் வருத்த கூலிதரும்”! உன் முயற்சிக்கு ஏற்றவாறு பயன் இருக்கும்; நீ எவ்வளவுக்கு எவ்வளவு பற்றற்றுச் செயல்களைச் செய்கிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு பயன் இருக்கும்;
முயற்சிகளால் எந்த பாதகமும் இல்லை! காலை எடுத்து வை; எந்த ஒரு பெரும் பயணமும் ஒரு சிறு முதல் அடி வைப்பதினில் இருந்து தொடங்குகிறது. A journey of a thousand miles begins with a single step.
முயற்சியே தன்னம்பிக்கையைத்தரும் என்கிறார் போலும்.
பெருமளவு ஞானத்தை நீ சேர்த்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவற்றைக் கொண்டு தீர்வுகளை நோக்கி செயல் ஆற்றாவிட்டால் அந்த அறிவினால் என்ன பயன்? என்று கேட்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários