அன்பிற்கினியவர்களுக்கு:
கல்வி, கேள்விகளால் வருவது அறிவு; சிந்தித்து தெளிவதால் வருவது ஞானம்; ஞானம் என்பது அறிவின் வளர்ச்சி;
விஞ்ஞானம் என்பது செயல் முறையால் பெறப்படும் அனுபவம்; ஞானத்தின் திறன் வெளிப்படும் இடம் விஞ்ஞானம். படிப்பறிவு, பட்டறிவு என்பதனைப் போல! ஞானம் = அறிவின் நீட்சி; விஞ்ஞானம் = பெரிய ஞானம்; சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஞானம்.
நாயகன் = தலைவன்; விநாயகன் = பெருந்தலைவன் என்பதனைப் போல ஞானமும் விஞ்ஞானமும்!
இயற்கை விதிகளைக் கற்றுக் கேட்டுச் சிந்தித்துத் தெளியும் கல்வியை நாம் தற்கால வழக்கிலும் அறிவியல் (Science) அல்லது விஞ்ஞானம் என்கிறோம்.
இந்த விஞ்ஞானத்தை மேலும் செயல் முறைகளால் விளங்கிக் கொள்ளும் படிப்பிற்குப் பொறியியல் (Engineering) என்று வழங்குகிறோம். அறிவியல் ஞானத்தைப் பயன்படுத்திப் பொறிகளை வடிவமைப்பதும் அவை இயங்கும் முறைகளை ஒழுங்கு செய்வதும் பொறியியல் (Engineering). அஃதாவது Application of Science is Engineering.
பொறிகளை எவ்வாறு வடிவமைப்பது என்று அறிந்துகொண்ட பிறகு அவற்றைக் கொண்டு சமுதாய நலனுக்காக, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட பயன்பாட்டிற்கு ஏற்றார் போலக் கருவிகளை வடிவமைப்பதனைத் தொழில்நுட்பம் சார் புலம் (Technology) என்கிறோம். அஃதாவது Application of Engineering is Technology.
அதனால்தான், B.Sc., B.E., B.Tech என்ற படிநிலைகளில் வகைப்படுத்துகிறார்கள். அனைத்திற்கும் அடிப்படை (ஆத்மா) இயற்கைதான்!
சரி, ஞானம், விஞ்ஞானம் எல்லாம் கீதையில் இருக்கா என்று கேட்கிறீர்களா?
ஞானம், விஞ்ஞானம் என்ற பதங்களைக் கீதையில் பார்க்கலாம். கீதையில் ஒரு அத்தியாயம் ஞான விஞ்ஞான யோகம். இஃது ஏழாம் அத்தியாயம். இருக்கட்டும், அதனைப் பின்னர் பார்ப்போம்.
செயல்முறையில் நம்பிக்கை வைத்துச் செய்முறைகளைச் செய்தால் அனைவர்க்கும் ஒன்றே போல் விளைவுகள் இருக்கும். இஃதே விஞ்ஞானத்தின் அடிப்படை.
நம்மாளு: சரியான வகையினில் காபியைக் (Coffee) கலக்கும் முறையைக் கற்றுக் கொண்டால் அனைவருமே நன்றாகக் காபி போடலாம்!
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு மூன்று முக்கியமான பண்புகள் இருக்க வேண்டும். அவையாவன: செய்முறைகளை மீண்டும் மீண்டும் செய்தாலும் விளைவுகள் மாறாமல் இருக்கும் தன்மை (Repeatability); செயல் முறைகளை மீண்டும் செய்து பார்க்கும் வாய்ப்பு (Reproducibility); தேவை என்றால் பல மடங்காகப் பெருக்கக் கூடிய வாய்ப்பு (Replicability). இதனை ஆங்கிலத்தில் 3R என்பர்.
ஆராய்சிகள் இருவகைப்படும். அவையாவன: அடிப்படை ஆராய்ச்சி (Fundamental research), பயன்பாட்டு ஆராய்ச்சி(application research).
பயன்பாட்டு ஆராய்ச்சியும் இரு வகைப்படும். அவையாவன: உறுதி செய்யும் ஆராய்ச்சி (Validation research), கருவிகளை வடிவமைக்கும் ஆராய்ச்சி (Utility research). Clinical research and Utility research என்றும் வழங்குவார்கள்.
அனைவருமே அடிப்படை ஆராய்ச்சி செய்வதில் இறங்கமாட்டார்கள்; ஒரு பகுதியினர் பயன்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்;
பெரும்பாலனவர்கள் பயனாளர்களாகத்தாம் (users / consumers) இருப்பர்.
பயனாளிகள் அந்தக் கருவிகளைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பதனில்தான் அக்கறை கொள்வார்கள். ஆனால், அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதனில் பற்று வைக்கமாட்டார்கள்.
அந்தக் கருவி சரியில்லையா, வேறு ஒரு கருவிக்கு மாறிக் கொள்வார்கள். அவர்களுக்குத் தேவை பயன்பாடு.
நம்மாளு: ஐயகோ, இந்தத் தேங்காயை இப்படி அரைத்தால் தேங்காய் பாவம் என்று எந்த அரைப்பானும் (Mixie) நினைக்காது! அவ்வாறு நினைத்து அரைத்தால் இட்லிக்குச் சட்னி நன்றாகவா இருக்கும்?
அதனைப் போன்று அர்ஜுனா நீ ஒரு கருவி அவ்வளவே. நீ இல்லையென்றால் வேறு ஒரு கருவி பயன்பாட்டிற்கு வரும்! உனக்கு இடப்பட்டிருக்கும் கடமையைச் செய் என்கிறார். இதுதான் முக்கியம்.
பிள்ளைக்கு வலிக்குமே என்று பிரம்படியைத் தவிர்த்தால்?
பிறரிடம் அதே பிரம்படியை அவன் பல மடங்கு வாங்குவான்!
நாமெல்லாம் கருவிகள் என்பதுதான் சாங்கியம்!
இதெல்லாம் அறிவு, ஞானம் அவ்வளவே!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
댓글