top of page
Search

21/08/2024, பகவத்கீதை, பகுதி 7

அன்பிற்கினியவர்களுக்கு:

இலக்கியங்கள் இருமுனையிலும் கூரான வாள் (Double edged sword)! இலக்கியம் மட்டுமா இயற்கையும் அவ்வாறே!


கண்ணாடிக் குடுவையை அழுத்திப் பிடிக்கலாம். மிக அழுத்திப் பிடித்தால் அதுவும் உடைந்து நம் கையையும் பதம் பார்க்கும்.


இதுதான் இலக்கியங்களைக் கற்க இரண்டாம் குறிப்பு.


குடியால் கெட்டுச் சீரழிந்த ஒருவனுக்கு இரு மகன்கள். இரட்டைப் பிறவிகள். ஒருவன் தலை நிமிர்ந்து நிற்கிறான்; மற்றொருவன் அவன் தகப்பனைப் போல குடியால் சீரழிகிறான்.


காரணம் என்னவென்று இருவரையும் கேட்டார்கள். இருவர் அளித்த பதிலும் ஒன்றே. அஃதாவது, “என் அப்பாவைப் பார்த்து இப்படி ஆகிவிட்டேன்” என்பது!

நிகழ்வு ஒன்றுதான். அதன் தாக்கமோ பல வகை. ஒருவன் திருந்தினான்; மற்றவன் அழிந்தான்.


அதே போன்று ஒரே புத்தகம்; இரு வேறு விளைவுகள்!


மகாத்மா காந்தி அவர்கள் பகவத்கீதை எனக்கு வழிகாட்டி; தாய் போல என்றும் வழிகாட்டுவது (Eternal mother); அகிம்சை வழியில் செல்ல வலியுறுத்துவது என்கிறார்.


ஓப்பன்ஹெய்மெர் (Openheimer) அணு குண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர். இவரின் தயாரிப்புதான் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மேல் போடப்பட்டு இந்த உலகம் பேரழிவைச் சந்தித்தது.


அந்த அணுகுண்டுகளை ஆங்கே போடுவதற்கு முன் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதன் வெற்றிக்குப் பிறகு அவர் சொன்ன கருத்து பதைபதைக்க வைப்பது.


"I remembered the line from the Hindu scripture, the Bhagavad-Gita; Vishnu is trying to persuade the prince that he should do his duty, and to impress him, takes on his multi-armed form and says, "Now I have become death, the destroyer of the worlds'. I suppose we all thought that, one way or another."


"எனக்கு இந்து நூலான பகவத் கீதையில் இருந்து ஒரு வரி நினைவுக்கு வருகிறது: விஷ்ணு (கிருஷ்ண பரமாத்மா) அந்த இளவரசனை (அர்ஜுனன்) தன் கடமையைச் செய்ய வலியுறுத்துகிறார். அதற்காக விசுவரூபம் எடுத்துப் பல வகையான ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு “இப்பொழுது நான் அழிவின் வடிவம், இந்த உலகை அழிப்பவன்” என்கிறார்.  நாம் அனைவரும் ஏதோ ஒரு சமயம் அவ்வாறு தோற்றம் எடுக்க நினைப்பவர்கள்தாம்.” என்கிறார் ஓப்பன்ஹெய்மர்.


உலக வரலாற்றின் உச்சகட்ட அழிவிற்கு அடிகோலியது அவரின் கண்டுபிடிப்பு.


பகவத்கீதை ஒன்று; இரு வேறு விளைவுகள்.


மேலே கண்ட இரு நிகழ்வுகளும் அதோடு முடியவில்லை.


அந்தக் குடிகார மகனிடம் கேட்டார்கள், இப்பொழுது என்ன நினைக்கிறாய் என்று? அவன் சொன்னது “எனது புரிதல் தவறு” என்றான்!


அதேபோன்று, ஓப்பன்ஹெய்மரும் அந்த விளைவுகளை எண்ணி இறுதியில் சொன்னது “எனது புரிதல் தவறு” என்பதைத்தான்!


“என் கைகளில் மானுட குலத்தின் இரத்தம் இருப்பதாக உணர்கிறேன்” என்று கதறினார் ஓப்பன்ஹெய்மர்.


ஆனால் ஒன்று அவர்களின் புரிதல் இறுதியில் தெளிவானாலும் அழிவு என்னவோ நிகழ்ந்தேவிடுகிறது.


ஆகையினால், சிந்தையில் தெளிவு முக்கியம். அழகு என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது என்பார்கள். (Beauty is in the eyes of beholder). அழகு மட்டுமல்ல எல்லாமே பார்ப்பவர் பார்வையில்தான் இருக்கிறது!


நேரான பார்வை; சிந்தையில் தெளிவு! இவைதாம் இலக்கு. இந்த இலக்குகளைக் காட்டத் தோன்றுவதுதான் இலக்கியம். கற்பவனுக்கு அன்னம் போல் பிரித்தறியும் திறன் வேண்டும்.


எங்கிருந்து பருகிறோம் என்ற கவனம் வேண்டும். கல்வி கற்றவர்களின் நெஞ்சங்களில் கரவு ஒளிந்திருக்கும். அவர்கள் காட்டும் வழி (உரைகள்) சில அழிவின் பாதையாக இருக்கலாம். இந்தக் கருத்தினை நம் அருணகிரிநாதப் பெருமான் சொல்லிச் சென்றதைத் திருக்குறளில் சிந்தித்துள்ளொம்.


கரவாகிய கல்வி உளார் கடை சென்று

இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? …” பாடல் 45, கந்தர் அநுபூதி


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

9 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page