top of page
Search

22/08/2024, பகவத்கீதை, பகுதி 8

அன்பிற்கினியவர்களுக்கு:

பாடங்கேட்டலின் வரலாறு, அஃதாவது எப்படி ஒரு நூலின் மூலம் கருத்துக் கொள்முதல் (Knowledge acquisition) செய்யவேண்டும் என்பதனை நம் நன்னூல் சூத்திரம் 41 தெரிவிக்கிறது.


இந்தப் பாடல் முதலில் தெரிவிப்பது என்னவென்றால் உலக வழக்கு (Practice) என்றும் நாடக வழக்கு (Theory / Literary presentation) என்றும் இரு வழக்கு உண்டு என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.


வழக்கினை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்றும் பிரிக்கலாம். இஃது செய்யுள்களுக்கு!


அஃதாவது, உலக வழக்கில் நாம் பேசுவது போலல்லாமல் செய்யுள்களுக்கு உரிய இலக்கணத்தோடு சொல்லும் முறைமையை அரிந்து கொண்டால் செய்யுள்களை நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.


அதுபோன்றே, உலக யதார்த்தினை நாடகத்தில் சொல்லும் பொழுது அதில் புனைந்துரை இருக்கும் என்பதனையும் நினைவில் கொண்டு புரிந்து கொள்ளல் வேண்டும்.


நூல் பயில் இயல்பே நுவலின், வழக்கு அறிதல்

பாடம் போற்றல்; கேட்டவை நினைத்தல்,

ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்,

அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்,

வினாதல், வினாயவை விடுத்தல், என்றுஇவை

கடனாக் கொளினே மடம்நனி இகக்கும். – பாடல் 41; நன்னூல்

 

ஒரு நூலினை எவ்வாறு கற்க வேண்டும் என்று சொன்னால் உலக வழக்கு, செய்யுள் வழக்கு, நாடக வழக்குகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து அறிதலும், மூலபாடங்களை மறவாது பாதுகாத்தலும், தாம் கேள்விகளால்  (கேட்டல்) அறிந்தவற்றைப் பலகாலும் சிந்தித்து (சிந்தித்தல்) தெளிவுபெறுதலும் (தெளிதல்), ஐயம் இருப்பின் மீண்டும் ஆசிரியரை அணுகி ஐயம் தெளிதலும்; அவ்வகையினில் பயில்பவர்களோடு பழகுதலும் (class room environment – off line teaching என்கிறார்கள்), தம் ஐயங்களை அவர்களிடம் விவாதித்துத் தெளிவு பெறுதலும், உரிய தெளிவைப் பெற சரியான வினாக்களை எழுப்புதலும், பிறர் எழுப்பிய வினாக்களுக்கு உரிய விடை அளிக்க முயலுவதும் என்று இவ்வாறு கற்றபதைக் கடமையாகக் கொண்டால் ஒருவரிடம் இருந்து அறியாமை மிகச் சீக்கிரம் விலகும் என்கிறார். அஃதாவது நிட்டை கைகூடும்.

 

கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் – இதுதான் அறிவின் தெளிவிற்கு வழி என்று நாம் திருக்குறளைப் படிக்கும்போதும் சிந்தித்துள்ளோம். காண்க https://foxly.link/easythirukkural_ஞானம்1

 

மகாத்மா காந்தி அவர்கள் பகவத்கீதையைக் குறித்துச் சொல்லும்போது, மகாபாரதத்தின் ஆசிரியரான வியாசர் பகவான் அந்தக் கதை “நாடக வழக்கு” என்பதனைத் தெள்ளத்தெளிவாகத் தெரிவிக்கிறார் என்கிறார். அஃதாவது உலகியலில் அவ்வாறு காண இயலாதக் காட்சிகளை அமைத்து தம் கருத்துகளைத் தெரிவிக்கிறார் என்கிறார்.


“… எல்லாரும் அறிந்த சரித்திர நூல்களைப் போல், மகாபாரதத்தையும் ஒரு சரித்திர நூலாக நான் கருதவில்லை. எனது கருத்துக்கு ஆதரவாக, ஆதி பர்வத்திலேயே அசைக்க முடியாத சாட்சியம் இருக்கிறது. மாகபாரதத்தில் உள்ள முக்கியமான பாத்திரங்களை, மனிதருக்கு மேற்பட்ட அதாவது தெய்விக புருஷர்களாகவோ அல்லது மனிதருக்குக் கீழ்பட்டவர்களாகவோ வியாச முனிவர் வர்ணித்துள்ளார். அவ்வாறு வர்ணித்ததன் மூலம், மகாபாரதம் சாதாரண மன்னர்கள், அவர்களுடைய பிரஜைகள் முதலியோரின் சரித்திரம் என்ற எண்ணத்திற்கே இடம் ஏற்படாமல் செய்துவிட்டார். அதில் விவரிக்கப்பட்டுள்ள நபர்கள் சரித்திரத் தொடர்புடையவர்களாக இருக்கலாம். எனினும், மகாபாரதத்தை இயற்றியவர், தரும சம்பந்தமான தமது கொள்கைகள் எல்லோருடைய மனத்திலும் பதியும்படி செய்வதற்காவே அவர்களை உபயோகித்துள்ளார்.”


மேலும் அவர்தம் முடிவுகள் சிலவற்றைச் சொல்கிறார்.


“… மகாபாரதத்தின் கர்த்தாவான வியாசர், லௌகீக யுத்தத்தின் அவசியத்தை நிரூபிக்கவில்லை. அதற்கு மாறாக, யுத்தத்தினால் யாதொரு பலனும் ஏற்படாது என்பதையே நிரூபித்திருக்கிறார்…”


“… வெற்றி பெற்றவர்கள் அடைந்த பலன் தொடர்த் துன்பங்களைத் தவிர வேறெதுவும் இல்லை.”


மேலும், கீதை யுத்த விதிகள் எதனையும் கற்பிக்கவில்லை; போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரிடையே நிலவ வேண்டிய நடவடிக்கை விதிகளுக்கும், கீதையின் நோக்கத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமே இல்லை என்கிறார்;


“… கீதையின் நாயகனான கிருஷ்ணன், குற்றம் குறையற்ற குணங்களின், மகோன்னதமான ஞானத்தின் உருவாகத் திகழ்கிறார். எனினும், கிருஷ்ணனைப் பற்றிய சித்திரம் கற்பனையே.”


“… மக்களால் கொண்டாடப்பட்ட கிருஷ்ணன் ஒரு காலத்திலும் வாழ்ந்ததில்லை என்பது அதன் அர்த்தமல்ல. (ஆனால்) பரிபூரணமானவர் என்பது கற்பனைச் சித்திரமே. கிருஷ்ணன் குற்றம் குறையற்ற நிறைந்த அவதாரம் என்ற கொள்கை பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.”


(பக்கம் 5-6, பகவத்கீதை மகாத்மா காந்தி எழுதியது, தமிழில் ஜெயமணி சுப்பிரமணியம், ஸ்ரீ ராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயம் பதிப்பு 1964)


இப்படி மகாத்மா காந்தி அவர்கள் பல மேற்கோள்களைக் காட்டி, நம் நன்னூலார் சொன்னார் அல்லவா “வழக்கு அறிதல்” என்பதனைத் தெளிவாக்குகிறார்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





 

8 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page