top of page
Search

22/09/2024, பகவத்கீதை, பகுதி 38

அன்பிற்கினியவர்களுக்கு:

பகவத்கீதை யாருக்குச் சொல்லப்பட்டது?


இல்வாழ்வில் இருக்கும் அர்ஜுனனுக்குச் சொல்லப்பட்டது என்று பார்த்தோம். அஃதாவது, கிருகஸ்தம் என்னும் ஆச்சிரமத்தில் இருப்பவர்களுக்குச் சொன்னது. இஃது பாதி விடைதான் என்றும் பார்த்தோம்.


ஆச்சிரமம் என்றால் வாழ்வியலின் பருவம் அல்லது அப்பொழுதைய நிலை.

ஆச்சிரமம் என்றால் தங்கும் இடம் என்றும் பொருள்படும். 


அர்ஜுனன் தம் மக்களைக் காப்பாற்றக் கடமைப்பட்ட ஒரு தலைவன். அதற்குரிய விரமும் விவேகமும் அவனிடம் இருக்க வேண்டும். எனவே சத்திரியன் என்று கிருஷ்ண பரமாத்வால் பல இடங்களில் அழைக்கப் படுகிறான். இஃது வர்ணம்.


வர்ணத்தையும் ஆச்சிரமத்தையும் இணைத்தால் வர்ணாச்சிரமம்.


எனவே, கீதை தலைமைப் பொறுப்பில் இருக்கும் இல்லறத்தார்க்குச் சொல்லப்பட்டது. இந்தப் புரிதலுடன் அனுகினால் குழப்பங்கள குறையலாம்.

கீதை அனைவர்க்குமானது என்பது ஆராயத்தக்கது. 


வர்ணங்கள் என்றால் தொழில் முறை பாகுபாடுகள் (Division of Labours) என்பதுதான் சரியான புரிதலாக இருக்கும். பிறப்பினால் வருவதல்ல அவை என்ற புரிதலும் நமக்குத் தேவை.


அந்த வர்ணங்களை நான்காகப் பிரிக்கிறார்கள். அவை எங்கனம்?

அனைத்துப் பணிகளுக்கும் தேவையானவை இரு பெரும் காரணிகள். அவையாவன: 1. அறிவு; 2. உடல் உழைப்பு.


பெரும்பாலும் அறிவினைக் கொண்டும் அதற்குத் தேவையான உடல் உழைப்பினைக் கொண்டும் செயலாற்றுபவர்கள் ஒரு பிரிவு;


அறிவினை பெரும் பகுதியாகவும் உடல் உழைப்பினைச் சிறு பகுதியாகவும் கொண்டு செயல்படுபவர்கள் ஒரு பிரிவு;


உடல் உழைப்பினைப் பெரும் பகுதியாகவும் அதற்கு ஏற்றார்போல் தேவைப்படும் அறிவினையும் பயன்படுத்துபவர்கள் ஒரு பிரிவு;


பெரும்பாலும் உடல் உழைப்பினைக் கொண்டும் அதற்குத் தேவையான அறிவினையும் பயன்படுத்துபவர்கள் ஒரு பிரிவாக நான்கு பிரிவுகள்.


எடுத்துக் காட்டாகக் குடிமைப் பணிகளில் (Civil Services) தொகுதி 1, 2, 3 மற்றும் 4 பணிகள் என்று பிரித்திருப்பதனைப் பார்க்கலாம்.


தொகுதி நான்கில் இருப்பவர் தொகுதி ஒன்றிற்கு உயரலாம்! இஃது இயல்பானதும்கூட! இந்த வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது.


அவரவர்க்கு வழங்கப்பட்ட பதவிகள் அவரவர் தகுதியினை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. அவரின் தகுதியும் திறமையும் பெருகும்போது அவர் உயர் பதவிக்கு உயர்த்தப்படுகிறார்.


மனிதர்கள் மற்ற உயிரினங்களைவிட எங்கு உயர்ந்து நிற்கிறார்கள் என்றால் அவர்கள் மனது வைத்தால் எதனையும் கற்று அந்தத் தொழிலில் உயர்ந்துவிடலாம். இதற்கு வழி வகை செய்வதுதான் அரசின் தலையாய கடமை.


இவர் இதனைக் கற்கத் தகுதியற்றவர் என்று சொல்லும் உரிமை எவர்க்கும் இல்லை.


ஒருவர் உயர் பதவிக்கு வருகிறார் என்றால் அந்தப் பதவிக்கு ஏற்றார் போல் அவர் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இது மிக முக்கியம். இங்கேதான் குணங்களின் கோளாறுகள் வெளிப்படும்!


திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது குண நலன்களையும் சீர்த்திருத்திக் கொண்டே வர வேண்டும்.


பதவி வரும்போது பணிவும் வர வேண்டும், துணிவும் வர வேண்டும். இது முக்கியம்.


அறிவினைக் கொண்டு பிறர்க்கு வழி காட்டலாம்; கற்பிக்கலாம். இந்தப் பிரிவினில் ஆசிரியப் பெருமக்களும், சான்றோர்களும் அடங்குவர். இவர்களைத்தாம் முதல் வர்ணம் என்று கொள்ளலாம்.


மதி நுட்பமும் மனோ திடமும் கொண்டு தலைமைப் பொறுப்பினில் இருப்பவர்கள் இரண்டாம் வர்ணம் எனலாம். இந்தத் தொகுதியில் தலைமை அமைச்சர் முதலானவர்கள் அடங்குவர்.


மக்களிடம் அன்புடனும் பண்புடனும் பழகும் அறிவும், செயல் திறனும் கொண்டவர்கள் மூன்றாம் வர்ணம் எனலாம். இந்தத் தொகுதியில் உள்ளவர்கள் பொருள்களை மக்களுக்குச் சென்றடையுமாறு செய்பவர்கள் அடங்குவர்.


செயல் திறன் அறிவோடு உடல் உழைப்பினை நல்குபவர்கள் நான்காம் வர்ணம் எனலாம். இந்தத் தொகுதியில் உற்பத்தியாளர்கள் அடங்குவர்.


இப்படித்தான் இந்த வர்ணங்கள் இருந்திருக்க வேண்டும். இப்படித்தான் உலகமெங்கனும் காணக் கிடைக்கின்றன.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





 

17 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page