அன்பிற்கினியவர்களுக்கு:
எதிரினில் அர்ஜுனன் தம் சாரதியைக் கேட்டுதான் எல்லா நகர்வுகளையும் செய்கிறான்!
சல்லியன் பல நுட்பங்களை அறிந்தவர்; களம் பல கண்டவர்.
நாகாஸ்திரத்திரம் என்னும் கொடிய அம்பினைப் பூட்டி அர்ஜுனன் தலைக்குக் குறி வைக்கிறான் கர்ணன். அப்பொழுது சல்லியன், கர்ணா அவனின் மார்பினை நோக்கி குறி வை. கண்ணனை நம்ப முடியாது ஏதேனும் சூட்சிகள் செய்வான் என்கிறார்.
கர்ணனுக்குத் தாம் தம் அன்னையான குந்திக்கு அளித்த வரங்கள் நினைவுக்கு வந்தன. ஒன்று – அர்ஜுனன் தலைக்குதான் குறி வைக்க வேண்டும்; இரண்டு - நாகாஸ்த்திரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
சல்லியனை நோக்கி சல்லியா “நீ இப்பொழுது என் தேரோட்டி” என்பதனை நினவில் வை. நான் சொல்வதனைச் செய்ய வேண்டியது உன் கடமை என்று கடிந்து கொள்கிறான். இதனை ஆணவத்தின் வெளிப்பாடாகச் சல்லியன் பார்க்கிறார்.
தலையைக் குறி வைத்தான்; கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரைச் சற்று நிலத்தில் ஆழ்த்த கர்ணனின் குறி தவறுகிறது.
சல்லியன் மீண்டும் சொல்கிறார்: “கர்ணா மீண்டும் அந்த அம்பினை ஏறி”. கர்ணன் மறுக்கிறான்!
அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த சல்லியன் கர்ணனைவிட்டு நீங்கிவிடுகிறார்.
எவ்வளவோ நல்ல பண்புகளைக் கொண்ட கர்ணன் அந்தப் போர்க்களத்தில் தேரோட்டும் தொழிலைச் சிறுமைபடுத்திவிடுகிறான்!
அவன் சல்லியனிடம் தன் நெருக்கடியைச் சொல்லி இருக்கலாம். அவர் வேறு ஏதேனும் வழிமுறைகளைக் காட்டி இருக்கலாம்! கலந்து ஆலோசனை செய்யும் அளவிற்கு அவன் மனம் இடம் கொடுக்கவில்லையே!
நெருக்கடியில்தான் குணக் கோளாறுகள் வெளிப்படுகின்றன. சிந்திப்போம்.
மீண்டும் வர்ணத்திற்கு வருவோம்.
இந்த நான்கு பிரிவுகள் மாறாத் தன்மையுடையன என்றால், அப்படியா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
நடைமுறை சாத்தியமும் இல்லை. மனிதன் மண்ணால் அடித்தப் பிண்டமும் இல்லை!
நாம் வணங்கும் கடவுளர்கள் பெரும்பாலனவர்கள் பிறப்பால் பிராமனர்கள் அல்லர். கிருஷ்ண பரமாத்மா ஆடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவர். அவரின் அறிவினில் குறையேதும் உளதா என்ன?
ஒருவனை உயர்த்துவது எது என்ற வினாவிற்கு செல்வமா என்றால் செல்வம் பூரியார் (இழிந்தவர்) கண்ணும் உள என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
குடிப்பிறப்பாலா என்றால் அண்ணனும் தம்பியும் ஒரே மாதிரி இருப்பதில்லை!
அப்பொழுது எது ஒருவரை உயர்த்தும்? அறிவு, அறிவு, அறிவு என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. இதுதான் சாங்கியம். காண்க https://foxly.link/easythirukkural_430_அறிவுடையார்
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். குறள் 430; – அறிவுடைமை
நம் அறிவின் தரத்தையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள நாம் யாருடனும் போராட வேண்டாம்.
போராட வேண்டுமெனில் நாம் நம்முடனே போராட வேண்டும். இதுதான் முக்கியம்; இதுதான் சாங்கிய யோகம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments