அன்பிற்கினியவர்களுக்கு:
பகவத்கீதை யாருக்கானது என்ற கேள்வி எழ அஃது தலைமைப் பொறுப்பில் இருந்து போராடிக் கொண்டிருக்கும் இல்லறத்தார்க்கு என்று பார்த்தோம். அதனின் நீட்சியாகப் பல்வேறு செய்திகளைப் பார்த்தோம்.
பகவத்கீதையில் பரமார்த்தா சாங்கியப் பகுதியை முடித்துவிட்டு யோகப் பகுதியைச் சொல்லத் தொடங்கினார் என்றும் பார்த்தோம்.
மீள்பார்வை பாடல் 2:40
யோக முறையில் முயற்சி வீணாகப் போவதில்லை; இதனால் எதிரிடையான விளைவுகளும் இல்லை; சிறியதாகச் செய்யத் தொடங்கினாலும் அஃது உன்னைப் பெரிய அச்சத்தினின்றும் காப்பாற்றும்.
யோகம் என்றாலே முயற்சி.
முயற்சிக்குத் தேவை மன உறுதி.
மன உறுதி இருந்தால் செயலில் கூர்மை (Focus) இருக்கும். மன உறுதி இல்லாதவர்களின் புத்தி பல கிளைகளாக விரிந்து நீர்த்துப் போகும். – 2:41
மன உறுதி இல்லாதவர்களின் முயற்சி விழலுக்கு இரைத்த நீராகப் போகும். ஒவ்வொரு இடத்திலும் வெறும் பத்துப் பத்து அடியாகக் கிணறு வெட்டினால் நீர் கிடைக்குமா என்ன? ஒரே இடத்தில் ஆய்ந்து ஆழமாகத் தோண்டினால் பயன் இருக்கும் என்கிறார் பரமாத்மா.
இதுவரை செயலுக்கு வேண்டிய அறிவினை அந்த அறிவினில் தெளிவு உண்டாகச் சொன்னதைக் (சாங்கியத்தைக்) கேட்ட சிலர் அந்த அறிவினாலேயே எல்லாம் தெரிந்துவிட்டதனைப் போன்று அதனை அலங்கார வார்த்தைகளால் சொல்லித் தமது புலமையை வெளிப்படுத்தி மகிழ்வர். அதுமட்டுமல்ல தமக்குத் தெரிந்த கொள்கைகளைத் தவிர வேறு ஏதும் இல்லை என்றும் வாதிடுவர். – 2:42
இவர்கள் சாங்கிய அறிவினை வெறும் சாங்கியமாக்கிவிடுவார்கள்! சொர்க்கம் சேர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், இக வாழ்க்கையில் சுக போகத்தில் இருக்க நினைப்பவர்களுக்கும் பல விதமாக ஆசைகளை ஊட்டி பல விதமான கிரியைகளைச் செய்யத் தூண்டுவர். இவர்கள் தம்மட்டில் பேராசையில் திளைப்பவர்கள். – 2:43
இவர்களின் பின்னால் மதி மயங்கிச் செல்பவர்களுக்கும் மனத்தில் உறுதி இருக்காது. – 2:44
பாடல்கள் 2:42 – 44 மிக முக்கியமான பகுதி. இவற்றைப் புரிந்து கொண்டால் அதுவே முழுமைக்கு வழி வகுக்கும்.
இந்தப் பாடல்களுக்கு ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் தம் விரிவுரையில்.
வேதங்களிலே சொற்சுவை கண்டு இரசிக்கிறவர்கள் இருக்கிறார்கள்; ஆசையினால் இம்மையிலும் மறுமையிலும் புலன்களுக்கு இன்பம் தருவனவற்றையே நாடுவார்கள். மேலும், ஆசைகளினால் கட்டுண்டவர்களின் கல்வி,கேள்வி ஞானம் இத்தகைய நாட்டத்தையே தேடி இருக்கும்.
“… வேதத்தில் கரும காண்டம் இத்தகைய புன்மையரது புல்லியல்பை நிறைவேற்றுவதாக அமைந்தது. பல் வகைப்பட்ட இன்பங்களை நாடிப் பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடப்பவர்க்குமட்டும் அது பயன்படும்.
“… வேதங்கள் மிகப் பழைமையானவை எனினும் அவை புகட்டுவனவெல்லாம் சிறப்பு வாய்ந்தவைகளென்று எண்ணி ஏமாற்றம் அடையலாகாது. இன்பங்களைப் பெறுவது வாழ்க்கையின் லட்சியமன்று. பரிபூரணம் அடைவதே முடிவான லட்சியமாகும். அதற்கு ஞானத்திலும் யோகத்திலும் உறுதி பெற்ற உள்ளம் வேண்டும். வேதங்கள் புகட்டுகின்ற கரும காண்ட அனுஷ்டானத்தினின்று ஒருக்காலும் உறுதியான உள்ளம் (சமாதி) உண்டாகாது…”
(பக்கம் 138-139, ஸ்ரீமத் பகவத் கீதை, சுவாமி சித்பவானந்தர் விளக்கவுரை, நாற்பதாம் பதிப்பு 2023, தபோவன அச்சுப் பள்ளி, திருப்பராய்துறை)
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments