அன்பிற்கினியவர்களுக்கு:
பற்றற்றுச் செயல்களைச் செய்வது முக்கியம். வேதங்களில் சில குறிப்புகள் இருக்கலாம். அவை இந்த இக வாழ்விற்கு பலனுமளிக்கலாம். அவற்றிலே மயங்கிவிடாதே. அவையல்ல நான் சொல்வது. உண்மை அனுபவம் உன்னை அறிவதே என்கிறார்.
இந்தக் கருத்தை வடலூர் வள்ளல் பெருமான் அவர்கள் தமது பேருபதேசம் என்னும் உரையில் தாம் மறைவதற்கு (30/01/1874) சில மாதங்களுக்கு முன் (21/10/1873) மீண்டும் தெளிவாக்கியுள்ளார்.
“… முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்…”
“… அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது…”
“எப்பொழுதும் ஆண்டவர் மீது இலட்சியம் வை” என்று வள்ளல் பெருமான் குறிப்பது ஆத்ம சிந்தனையையே என்று நினைக்கிறேன். அஃதாவது, மன அமைதியுடன் இருப்பது.
உறுதியான உள்ளத்துடன் எதனிலும் பற்று வைக்காமல் கடமையை ஆற்றுவதன் மூலம் என்றும் மன அமைதியுடன் ஆனந்தமாக இருக்கலாம்.
அடுத்து ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறார். அஃதாவது குணக் கோளாறுகளைக் கடந்து நில் என்கிறார் பரமாத்மா.
த்ரைகுண்யவிஷயா வேதா, நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந். – 2:45
வேதாஹா த்ரைகுண்யவிஷயாஹா = மறைகள் சொல்வனவெல்லாம் முக்குணங்களைப் பற்றியவை; அர்ஜுனா = நீ; நிஸ்த்ரைகுண்யஹ = முக்குணங்களைக் கடந்தவனாய், குணக் கோளாறுகள் இல்லாதவனாய்; நிர்த்வந்த்வஹ = இருள் சேர் இரு வினைகளையும் சேராமல் (நல் வினை, தீ வினை) அவற்றை வெற்றி கொண்டு; நித்யஸத்த்வஸ்தஹ = உறுதியுடைய மனத்தினனாய்; நிர்யோகக்ஷேமஹ = பொருள்களின் மேல் பற்றில்லாமலும்; ஆத்மவான் = ஐம்பூதங்களால் பரவி நிற்கும் உள்ளத்தை அறிந்து; பவ = இருப்பாயாக.
வேதங்கள் சொல்வனவெல்லாம் முக்குணங்களைப் பற்றியவை. நீ முக்குணங்களைக் கடந்தவனாய், குணக் கோளாறுகள் இல்லாதவனாய், இருள் சேர் இரு வினைகளையும் சேராமல் (நல் வினை, தீ வினை) அவற்றை வெற்றி கொண்டு உறுதியுடைய மனத்தினனாய், பொருள்களின் மேல் பற்றில்லாமலும், ஐம்பூதங்களால் பரவி நிற்கும் உள்ளத்தை அறிந்து இருப்பாயாக.
குணங்களைப் பின்னர் விரிப்பார்.
இடம், காலத்திற்கு ஏற்றார்போல் குணங்கள் மாறலாம். அதன் பரிமானங்களைத் தெரிந்து கொள். ஆனால், அக் குணங்களையும் கடந்து செல்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments