அன்பிற்கினியவர்களுக்கு:
பார்த்தா, பொருள்கள் இறுதியில் எதனுடன் கலக்கின்றதோ, எவை நீக்கமற அனைத்துப் பொருள்களிலும் கலந்திருக்கின்றதோ அந்தக் காரணியுடன் முழுமையாக ஒன்றுவதனால் அவன் இயற்கையுடனே இணைகிறான். – 8:22
இந்த உலகிற்கு இரு பாதைகள் எப்பொழுதுமே உள்ளன. ஒன்று ஒளி பொருந்திய பாதை; மற்றொன்று இருளில் மூழ்கும் பாதை. முதல் பாதையில் செல்பவர்கள் தம் இலக்கை அடைவார்கள். இருளில் இருப்பவர்கள் இயங்க முடியாமல் அங்கேயே உழல்வார்கள். இருளானது ஒருவரைக் கட்டிப் போடும். - 8:26
இவ்விரு பாதைகளையும் உனக்குக் கூறுகிறேன். (இடமும் காலமும் மிக முக்கியம்.) ஒளிக்கு சில எடுத்துக் காட்டுகளைக் குறிப்பாகக் காட்டுகிறேன். நெருப்பின் ஒளி; பகல்; உத்தராயனம் எனப்படும் கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலம் (தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி) போன்ற காலங்கள் செயல்களுக்கு உகந்தவை. – 8:23-24
புகை; இரவு; தட்சணாயணம் எனப்படும், கதிரவன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் காலம் (ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி) போன்ற காலங்கள் செயல்களுக்கு உகந்தவையாக இருக்கா. – 8:25
ஆசிரியர் குறிப்பு: சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒளியையே நம்பி இருந்தவர்களின் கருத்துகளாகத்தாம் மேற்கண்ட கருத்துகளை நாம் எடுத்துக் கொள்ள இயலும்.
சூரியன் தன்மட்டில் இருக்கிறான், உழல்கிறான். உலகம்தான் சூரியனைச் சுற்றி வருகின்றது. சூரியன் இந்தப் பூமிப் பந்தினைச் சுற்றி வருவதில்லை என்னும் கருத்து புலப்படாமல் இருந்த பொழுது இருந்த கருத்துகளாகத்தாம் இவை இருந்திருக்கும்.
சில உரை ஆசிரியர்கள் மேற் கண்ட பாடல்களுக்கு ஆச்சரியப்படத் தக்க வகையினில் உரை காண்கிறார்கள். அஃதாவது, பகல், முதலான காலங்களில் உயிர் நீப்பவர்கள் இந்த உலகிற்கு மீண்டும் வருவதில்லை எனவும், இரவு முதலான காலங்களில் உயிர் நீப்பவர்கள் இந்த உலகில் மீண்டும் தோன்றுவார்கள் எனவும் பொருள் சொல்கிறார்கள்!
அஃதாவது, பகவத்கீதை ஆசிரியரின் நோக்கம் கடமையைச் செய் என்பதுதான். அக்காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர் காலத்தின் அருமையைச் சொல்வதாகத்தாம் இந்தக் கருத்துகளுக்குப் பொருள் காண்பது சிறப்புடையதாக இருக்கும்.
இது நிற்க.
அடுத்துவரும் இரு பாடல்களுடன் இந்த அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்.
பார்த்தா, இரு வேறு பாதைகள் உள்ளன என்று அறிந்து கொண்டவர்கள் மயங்கி நிற்பதில்லை. ஆகையினால், எக்காலத்திலும் இந்தச் சிந்தனைகளில் பொருந்தி நில். அறிவுடையனாக இரு. (யுக்தனாக இரு) – 8:27
நன்றாகக் கவனி என்று சொல்லாமல் சொல்லித் தொடர்ந்துவரும் கருத்துகளை முன் வைக்கிறார்.
வேதங்களை ஓதுவது, யாகங்களை இயற்றுவது, தவம், தானம் போன்றவற்றைச் செய்வதனைவிட நான் முன் சொன்ன கருத்துகளை மனத்தினில் வைப்பவன் உயர்ந்த இடங்களை அடைகிறான். – 8:28
அக்ஷரப்பிரம்ம யோகம் என்னும் இந்த எட்டாம் அத்தியாயம் முற்றிற்று.
முடிவு மட்டும் முக்கியமல்ல அதன் பாதையும் ஒளி பொருந்தியதாக இருக்கட்டும். இந்தக் கருத்தியல் முக்கியம் என்கிறார்.
மக்களை ஒன்றிணைப்பதற்குப் பல காரணிகள் இருக்கலாம். அவற்றுள் மதம், மொழி உள்ளிட்ட பலவும் இருக்கலாம். இவையெல்லாம், அனைவரையும் ஒருங்கிணைக்கா. ஆனால், அவற்றை எல்லாம் கடந்து ஒரு காரணி இருக்குமானால் அதுதான் கருத்தியல்.
எடுத்துக்காட்டாக, ஒரு சிறு குழந்தை அடக்குமுறைக்கு ஆளாகின்றது என்று ஒரு நிழற் படத்தைக் கண்டால்கூட இந்த உலகில் உள்ள அனைவருமே ஒன்றிணைவர். கண்ணீர் சிந்துவர். அதனைத் தடுக்க முயலுவர். இதுதான் கருத்தியல்.
அந்தக் குழந்தை இந்தச் சாதி, இந்த இனம், இந்த நிறம், இந்த மொழி என்று ஆராயமாட்டார்கள். அவ்வாறு ஒரு பிறவி ஆராயுமாயின் அந்தப் பிறவி இழிபிறவி, அது மனிதப் பிறவியே அல்ல என்று சொல்வதனைவிட வேறு என்ன சொல்ல இயலும்!
கருத்தியலை விதைப்பதுதான் முக்கியம். உயரிய கருத்தியல்தாம் மனிதக் குலத்தை இணைக்கும்; முன்னேற்றும்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios