top of page
Search

27/09/2024, பகவத்கீதை, பகுதி 43

அன்பிற்கினியவர்களுக்கு:

செயல்களை எவ்வாறு கைக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்.


அஃதாவது:


செய்யும் செயல்களில் மன உறுதி (will power); கூர்மை (focus); ஏற்படப்போகும் விளைவுகளால் அலைபாயும் மனம் இல்லாமல் இருத்தல்(unwavering mind about the results); பேராசை கொண்டு பிறர் சொல்லும் கருத்துகளுக்குச் செவி சாய்க்காமை; காலம் இடம் ஆகியவற்றால் ஏற்படும் குணக் கோளாறுகளை வென்று; செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதுதான் முக்கியம் என்கிறார்.


மேலும்:


உடனடியாகப் பலன்களைப் பெற வேதங்களிலே பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கலாம். அவை ஒரு பொருட்டல்ல! அவற்றின் பின் ஓடிக் கொண்டிருக்காதே! அவற்றால் நிரந்தரமான பலன்களைத் தர இயலா. நான் சொல்லிக் கொண்டிருக்கும் ஞானமாகிய பெரிய நீரோடை இருக்க சிறிய ஊற்றுகளைத் தேடாதே. – 2:46


விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்; அவற்றையும் பதட்டமில்லாமலும், அவற்றின்பால் பற்றுவைக்காமலும் செய். விளையப்போகும் நன்மைகளில் ஆர்வம் கொள்ளாமல் செய். இப்படிச் சொல்கிறேன் என்பதனால் கடமைகளைச் செய்யாமல் இருந்து விடாதே. – 2:47


கடமைகளைச் செய்யும்போது அதன் வெற்றி தோல்விகளை எண்ணுவாயானால் உன்னால் முழு அளவில் செயல்பட இயலாமல் போகலாம். அதனால் அந்த எண்ணங்களைத் தவிர். நீ முயலும் செயல் வெற்றியாகவோ தோல்வியாகவோ முடியலாம். அவ்வளவே! சம நிலையில் இருந்து செய்ய வேண்டியவற்றைச் செய். இந்தச் சம நிலையையே யோகம் எனலாம். – 2:48


கர்மம் = செயல்;

நிஷ்காம கர்மம் = தன்னலமற்ற செயல்; பற்றில்லாமல் செய்யும் செயல்;

காம்ய கர்மம் = பற்றுகளால் கட்டுண்டுச் செய்யும் செயல்


பயனைக் கருதி கடமைகளைச் செய்பவர்கள் பேதைகள். அஃதாவது காம்ய கர்மங்களைச் செய்பவர்களுக்கு மனத்தில் அமைதி கிட்டாது. மனத்தில் அமைதி வேண்டுவோர் செய்ய வேண்டியது நிஷ்காம்ய கர்மம். இவ்விருவகையான செயல்களில், பெறப்போகும் வெற்றி தோல்விகளில் கவனம் சிதறாது செய்யும் செயலே சிறப்பு. – 2:49


பற்றுகள் இல்லாமல் கடமையைச் செய்பவன் எப்பொழுதும் மன அமைதியுடன் இருப்பான். அவனின் செயல்களால் அவனுக்குப் பிற்காலத்தில் எந்தவித மன வருத்தங்களோ, துன்பங்களோ நேரா. இவ்வாறு கடமைகளைச் செய்வதே யோகமாம். – 2:50


தவளைகளுக்குள் ஒரு போட்டி. ஒரு வழுக்கு மரத்தில் முதலில் ஏறுவதுதான் அந்தப் போட்டி. அந்தப் போட்டியில் பல தவளைகள் கலந்து கொண்டன. இதுநாள்வரை அந்தப் போட்டியில் எவருமே வென்றதில்லை.

தவளைகள் அந்த வழுக்கு மரத்தில் ஏற முயலும்போதெல்லாம் அவை வழுக்கி வழுக்கி மீண்டும் கீழே விழுந்த வண்ணம் இருந்தன. அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தவளைகளும் இது இயலாத காரியம் என்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தன.


பல தவளைகளுக்கு வெற்றியின் மேல் இருந்த நம்பிக்கை தளர்ந்து போயிற்று. ஆனால், இவற்றுக்கிடையே ஒரே ஒரு தவளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக் கொண்டிருந்தது. அந்தத் தவளையை நோக்கி மற்ற தவளைகள் போகப் போக வழுக்கல் அதிகரிக்கும். உயரே இருந்து கீழே விழுந்தால் பலத்த அடி விழும். இதற்கு மேல் ஏறாதே என்று தொடர்ந்து கூச்சல் போட்டன.


இதனைக் காதில் வாங்காது அந்தத் தவளை தன்மட்டில் மேலே ஏறி வெற்றி வாகையைச் சூடியது. பின்னர் அதனிடம் பேட்டி கண்டார்கள். உங்களின் வெற்றியின் இரகசியம் என்னவென்று கேட்டார்கள். அது அப்பொழுதும் பேசாமலே இருந்தது.


அப்பொழுதுதான் அதன் தாய் அங்கு வந்தது. நிகழ்ந்ததைக் கேள்விப்பட்ட அந்தத் தாய் தவளை சொல்லிற்று “என் மகனுக்கு காது கேட்காது” என்று!


கடமைகளைச் செய்யும் பொழுது காதுகளைப் பொத்திக் கொள்வதில் பயனுண்டு.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





 

5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page