top of page
Search

28/09/2024, பகவத்கீதை, பகுதி 44

அன்பிற்கினியவர்களுக்கு:

கருமமே கண்ணாகப் பணி செய்தல் முக்கியம் என்றார்.


பாடல் 2:50 இல், நம்மால் முடிந்த அளவிற்குச் செவ்வனே கடமைகளைச் செய்தால் பின்னர் எந்த வருத்தமும் அடையத் தேவையில்லை என்றார்.

செய்யும் செயல்கள் நமக்கு எந்தக் காலத்திலும் மன அமைதியைத் தரட்டும். மனத்தின்கண் உண்மையாக இருந்தால் அனைத்தும் நலமே.


அனைத்தையும் கடந்து உள்ளே இருப்பவன்தான் கடவுள்!


பற்றுகளைத் துறந்து செயல்களைச் செய்பவர்கள் பிறப்பு இறப்பு போன்றனவற்றைக் குறித்துக் கவலை கொள்ளாமல் தன் மட்டில் ஆனந்தத்தில் லயித்திருப்பார்கள். – 2:51


பற்றுகளைத் துறந்து செயல்களைச் செய்யும்போது அவற்றைக் குறித்து மற்றவர்கள் சொல்லும், சொல்லப்போகும் விமரிசனங்கள் உன்னைப் பாதிக்காது. – 2:52


தவளைக் கதையைக் கவனத்தில் வைக்கலாம்.


சமாதி அடைதல் என்றெல்லாம் சொல்கிறார்களே அதனை அடைவது எப்படி என்று சொல்கிறார். நமக்கு நாமே உண்மையாக இருக்க வேண்டும். இத்தகைய நிலையே மனம் சமாதி நிலையில் இருப்பதற்குக் கருவி என்கிறார்.


சமம் + ஆதி = சமாதி; ஆதியில் நிலை கலங்காது எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே தொடர்ந்து இருப்பது சமாதி. 


எந்தப் புறக்கருத்துகளாலும் காரணிகளாலும் மனம் கலங்காமலும், உறுதி குலையாமலும், மனம் சமாதி நிலையில் நீடித்து நின்று செயல் ஆற்றுவதே யோகம். அஃதாவது, அதுவே சீரிய முயற்சி. – 2:53  என்று சொல்லி சற்று நிறுத்துகிறார்.


சமாதி நிலையில் இருப்பவரை “ஸ்திதப்பிரங்ஜன்” என்று வழங்குகிறார்கள். அஃதாவது, ஸ்திர புத்தியுடையவன், முற்றும் நீத்தவன், நிறை ஞானி, தன்னை உணர்ந்தவன் என்று பொருள்.


அர்ஜுனன் கேட்கிறான்:


கேசவா, இந்த நிறை ஞானி (ஸ்திதப்பிரங்ஜன்) என்பவனை வர்ணிக்க இயலுமா? அவன் எவ்வாறு பேசுவான்? எப்படி இருப்பான்? எங்கனம் நடப்பான்? -  2:54


அர்ஜுனனைப் பார்த்து “நீ ஸ்திர புத்தியுடையவனாய் மாறு” என்று பரமாத்மா சொல்ல, அர்ஜுனனின் பிறவிக் குணமான ஐயம் தலை தூக்குகிறது. இப்படி யாரேனும் இருக்க இயலுமா? அவனை நீ விவரிக்க முடியுமா என்று எதிர் வினா வைக்கிறான் கிருஷ்ணரிடம்.


மீண்டும் பரமாத்மா தாம் சொன்னவற்றைத் திரும்ப விரிக்கிறார்.


பார்த்தா, ஒருவன் தன் மனத்தில் எழும் பேராசைகளை விலக்கி தன்னிலே தான் மகிழ்ச்சி கொள்வானாயின் அல்லது அமைதி கொள்வானாயின் அவன் தான் உறுதியான புத்தியை உடையவன் என்று சொல்லப்படுவான். -2:55

மன உறுதி கொண்டவன் யார்?


துன்பம் வரும் போது துவளாதவன்;  இன்பம் வரும்போது ஆடாதவன், ஆசை, அச்சம், கோபம் தவிர்த்தவன் அவனே மன உறுதி கொண்டவன். – 2:56


நம்மாளு: உணர்ச்சிகளில் ஊசலாடிக் கொண்டிருப்பவன் மனிதன்; உணர்ச்சிகளைக் கட்டில் ஆக்கி அதன் மேல் அமைதியாகப் படுத்திருப்பவன் மன உறுதி கொண்டவன். இந்த உலகம், இரு வேறு கலவைகளால் ஆனது. நல்லதும் வரும், அல்லதும் வரும்! அஃதும் ஒரு கலவையாகவே (Package) வரும். நல்லது மட்டும் வேண்டும் என்று கேட்க முடியாது.


(பார்த்தா) நல்லவை நிகழும்போது மிகவும் மகிழாமலும் அல்லவை நிகழும்போது வருந்தாமலும் இருப்பவன் எவனோ அவனின் மனம் ஒரு நிலையில் இருக்கும். – 2:57


“This too shall pass” இதுவும் கடந்து போகும் என்பார்களே அதனை மனத்தில் நிறுத்த வேண்டும். இப்படிச் சொல்வதனால் எந்தச் செயலும் செய்யாமல் இருக்கலாமா என்றால் அதுவும் தவறு. அதற்காகத்தான் கடமைகளைச் செய்; அதுவும் பற்றற்றுச் செய் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்.


ஆமையாரைத் துனைக்கு அழைக்கிறார் பரமாத்மா. ஏன் என்று நாளைப் பார்ப்போம்.


நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





 

4 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page