அன்பிற்கினியவர்களுக்கு:
இஸ்ரேல் நாடு உருவானது 1948 இல்! முற்றும் முழுவதுமாக அறிவுசார் பாதையை வடிவமைத்துக் கொண்டது. கடந்த எழுபது ஆண்டுகளில் தான் இழந்த நாகரிகத்தை, மொழியை மீட்டு எடுத்துவிட்டது. இவை சாத்தியமே!
(இஸ்ரேலின் புவிசார் அரசியலை (Geopolitics) உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இரணமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். அது வேறு பிரச்சனை.)
எங்கிருந்து ஆரம்பிப்பது? மொழியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
அனைத்துத் துறை நூல்களும் தமிழினில் மொழி பெயர்க்க வேண்டும். தமிழ் என்றவுடன் தூய தமிழ் என்று ஆரம்பித்துவிடக் கூடாது. இக்காலப் பேச்சு வழக்கினைக் கருத்தில் கொண்டு மொழி பெயர்ப்புகள் இருக்க வேண்டும்.
பிற மொழிக் கலைச் சொல்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தூய தமிழினை இலக்கிய ஆசான்கள் தங்கள் இயற்றும் இலக்கியங்களுக்குப் பயன்படுத்தட்டும்! அந்த இலக்கியங்களை உலகத் தரத்தினில் வழங்கட்டும்! பாராட்டுவோம்; கொண்டாடுவோம். இதுவும் முக்கியம்தான்.
ஆனால், அதே வழியினில் அனைத்துத் துறைகளும் தூய தமிழில்தான் இருக்க வேண்டும் என்று இறுக்கக் கூடாது!
தூய தமிழ் என்றால் என்ன? கற்காலத் தமிழா? தொல்காப்பியக் காலத்தில் இருந்த தமிழா? திருக்குறள் காலமா? நன்னுலார் காலத் தமிழா? இளங்கோவடிகள் காலமா? கம்பனின் காலமா? தமிழானது காலம் தோறும் மாற்றம் பெற்றுக் கொண்டே உள்ளது!
கேள்வி என்பதற்கு வள்ளுவப் பெருமான் கேட்டு அறிதல் என்னும் பொருளில்தான் பயன்படுத்தியுள்ளார் என்கிறார்கள். பதில் என்றால் “இதற்கு ஈடாக” (equivalent) என்றுதான் பொருள். எனவே, கேள்வி-பதில் என்பன சரியில்லை என்கிறார்கள். வினா – விடை என்பனதாம் சரி என்கிறார்கள்.
இரண்டும் ஏற்புடையதே என்று சொல்வதுதான் சிறப்பாக இருக்கும்.
வெகுளி என்றால் கோபம் என்பார் நம் வள்ளுவப் பேராசான். இப்பொழுது வெகுளி என்றால் அப்பாவி!
ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீண்டகாலமாகப் பயன்பாட்டில் வேறு பொருள்படினும் அதனையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
விடை என்பதற்கு எருது என்ற பொருளும் உண்டு!
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி … என்கிறார் திருஞானசம்பந்தர் பெருமான். விடை என்றால் எருதினைக் குறிக்கிறார்.
விஷயத்தை “விடயம்” ஆக்கி, சந்தோஷத்தைச் “சந்தோடம்” ஆக்கி, ராஜாஜியை “இராசாசி” ஆக்கி, ஸ்டாலினைத் (Stalin) “தாலின்” ஆக்கி, அக்டோபரை (October) “அக்குதோபர்” ஆக்கிப் புலவர்கள் தம் தமிழ் பற்றினைக் காட்டிக் கொள்கிறார்கள்! இது நிற்க.
ஆங்கிலேயர்கள் ஆண்டதனால் நமக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழியைப் போலவே பழக்கமாகிவிட்டது. இஃது ஒரு நன்மையே! ஆங்கிலத்தையும் நேர்தியாக எழுதவும் பேசவும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இது மிக மிக முக்கியம்.
பிற பாடங்களைவிட மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மொழியைப் பயன்படுத்தி எழுதுவதனையும் திறம்பட பேசுவதனையும் முதலில் இருந்தே அறிமுகப்படுத்த வேண்டும்.
மொழிப் பாடம் என்றவுடன் பழங்கால இலக்கணங்களைக் கொண்டுவந்து முதலிலேயே திணிக்கக் கூடாது. இலக்கியம் கண்டுதான் இலக்கணம் வந்தது என்பதனைக் கவனத்தில் கொள்ள வெண்டும்.
இப்பொழுதும் நம் மாணவர்களுக்கு, மாணவர்கள் என்ன, மற்றவர்களும் இந்தச் சவாலில் கலந்து கொள்ளலாம். தமிழில் உள்ள 18 மெய்யெழுத்துகளை வரிசை மாறாமல் சொல்லக் கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பர்? எத்தனை ஆண்டுகள் பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் படித்தும் என்ன பயன்?
இதுதான் இன்றைய நிலை. ஆனால், நாம் சொல்லுவோம் தமிழ் மொழி வாழ்கவென்று!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments