top of page
Search

29/08/2024, பகவத்கீதை, பகுதி 15

அன்பிற்கினியவர்களுக்கு:

ஈ இருக்கும் இடம் எனினும் ஈயேன் என்றவன் உன் சோதரன்தானே?

அப்பொழுது வெகுண்ட நீ, இப்பொழுது பின்வாங்கச் சொல்லும் காரணம் சரியல்லவே!


போரினால் அழிவுதான் என்ற எண்ணம் உனக்கு எப்பொழுது வந்தது?

நீ பல போர்களை நிகழ்த்தியவன்தானே? அப்பொழுதெல்லாம் இந்த மன அமைதியைக் குறித்த நாட்டம் எழவில்லையே?


அவர்: உன்னிடம் பலம் குறைவு என்பதனால் ஐயப்படுகிறாயா?


அவன்: இல்லை


பலரை அழித்தாயே அப்பொழுது உன்னைப் பெருவிரன் என்றார்கள், நீ மிகவும் மகிழ்ந்தனை! உன்னை அனைவரும் “வில்லுக்கு ஓர் விஜயன்” என்று சொல்ல வேண்டும் என்று வம்பிற்குச் சண்டைக்குச் சென்றாயே? அப்பொழுதெல்லாம், “அவர்கள் யாரோ” என்றதனால் கொன்றாயா?

இப்பொழுது இவர்கள் உன் உறவினர்கள் என்பதனால் உன் மனம் பேதலிக்கிறதா?


அவன்: ஆம் கேசவா … என்ன செய்வேன்? பந்த பாசம் என்னைக் கட்டிப்போடுகின்றது. நான், நான் எப்படி இவர்களைக் கொல்வேன் …ஐயகோ


அவர்: இந்தப் போர் நாம் வலிந்து கூட்டியதுமன்று, உன்னை, உங்களை வாழ வழிவிடாமல் செய்ததனால் அவர்களே வரவழைத்தது. செய்ய வேண்டியதனைச் செய்; அல்லது செத்து மடி என்ற கடமை உனக்கு இருக்கிறது.


போரில் இருபக்கமும் அழிவு நிச்சயம். இருப்பினும் அநீதையைக் களைய நீதியை நிலை நாட்ட இந்தப் போரை நீ நிகழ்த்த வேண்டும்.


நம்மாளு: வாழ்க்கையே ஒரு போர்தான். நல்லவைகளைத் தொடரவும் அல்லவைகளை விலக்கவும் தினம் தினம் நம் கடமையாகிய போரை நிகழ்த்தியே ஆக வேண்டும்.


நம் மக்கள் பள்ளிக்குச் சென்றால் கண்டிப்பிற்கு உள்ளாவார்கள் என்று பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க முடியுமா?

 

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும் ஆடையும் ஆதரவாய்க்கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்த தல்லால்துள்ளித் திரிகின்ற காலத்திலே என் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே. – ஒரு பழம் பாடல்


எந்தை எனக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்; என் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டார்; துள்ளித் திரியும் காலத்தில் என் துடுக்கினை அடக்கவில்லை; பள்ளிக்கு அனுப்பவில்லை; பக்கத்திலேயே இருத்திக் கொண்டார். அப்பொழுது எனக்கும் தெரியவில்லை ஏன் என்று? அகமகிழ்ந்து இருந்தேன்.

இப்பொழுது புரிகிறது.


அவர்பட்ட கடனுக்கும் அவருக்குக் கொள்ளி வைக்க ஒருவன் வேண்டும் என்பதனால் அந்தப் பாதகன் அவ்வாறு செய்துவிட்டான். முடிவெடுக்க முடியவில்லை. முடைகள் நீங்க வழியுமில்லை!


ஆகவே மானுடரே, கடமையைச் செய்ய வேண்டும். கசப்பாக இருந்தாலும்!


பந்த பாசம் கண்ணை மறைத்தாலும் கடமையைச் செய்ய வேண்டும் இதுவே கீதையின் நெறி!


பரமாத்மா எப்படித் தொடர்கிறார் என்று நாளைப் பார்ப்போம்.


நன்றியுடன், உங்கள் மதிவாணன்.





 

5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page