அன்பிற்கினியவர்களுக்கு:
ஆமை ஒரு அதிசய உயிரி. ஆமை மீது ஒரு கல் கொண்டு எறிந்தால் அது தனது நான்கு கால்களையும் தன் தலையையும் ஓட்டிற்குள் இழுத்துக் கொள்ளும்.
மனிதன் மீது கல்லெறிந்தால் அவனுக்கு வாய்ப்பிருந்தால் கல்லைக் கொண்டு திருப்பித் தாக்குவான். அல்லது அந்த இடத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள ஓடுவான்.
அந்தக் கல் தங்கத்தாலான கல்லாக இருந்தால் வலியை பொறுத்துக் கொள்வது மட்டுமன்று மீண்டும் எரிய மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டு இருப்பான். பணத்தைக் கொண்டு எரிகிறார்கள். சகித்துக் கொள்கிறான்.
ஆமையார் மீது வெறுங்கல்லோ, வைரக்கல்லோ எதனைக் கொண்டு எரிந்தாலும் அது தன் மட்டில் தன் அவயங்களை உள்ளே இழுத்துக் கொண்டு எதுவும் நடவாதது போலவே இருக்கும். எனவேதான், ஆமையார் ஒரு அதிசய உயிரி என்றேன். இந்தக் கல் விலை மதிப்புமிக்கது என்று நினைந்து ஆமையார் மாற்றிச் செய்யமாட்டார்!
ஆமைகள் இருவகைப்படும். ஒன்று நில ஆமை (Tortoise); மற்றொன்று நீரா ஆமை அஃதாவது தண்ணீர் ஆமை (Turtle). இந்த இரண்டையுமே நாம் பேச்சு வழக்கில் “ஆமை” என்று சொல்கிறோம்.
நிலத்தில் இருக்கும் ஆமை (Tortoise) சைவப் பிராணி. இலை, தழைகளை உண்ணும் (Herbivorous). தண்ணீர் ஆமை எல்லாவற்றையும் உண்ணும் (Omnivorous). இவை அனைத்துக் கரிமப் பொருள்களையும் உண்டு நீரினைச் சுத்தப்படுத்தும்.
இரண்டுமே, நிலத்தில் முட்டையிடும். சில சமயம் நில ஆமையின் குஞ்சிகளை நீர் ஆமை என்று நினைத்துக் கொண்டு நம்மவர்கள் “நல்லது செய்கிறேன்” என்று அந்தக் குஞ்சுகளை நீர் நிலைகளில் விடுவார்கள், அவற்றின் கதி அதோ கதிதான்!
நீர் ஆமைக் குஞ்சுகள் அதுவாகவே பக்கத்தில் இருக்கும் நீர் நிலைகளுக்குச் செல்லும் திறன் வாய்ந்தவை.
நீர் ஆமைகள் 80 ஆண்டுகள் வரை உயிர் வாழுமாம்; 800 கிலோ எடையைக்கூட எட்டுமாம்.
நில ஆமைகள் 300 ஆண்டுகள்வரைகூட இருக்குமாம். அவை 400 கிலோ எடையை எட்டுமாம்.
பாடல்களில் வரும் ஆமை நில ஆமையாகத்தான் இருக்க வேண்டும். ஏன் என்றால் நாம் கல் எறிகிறவரையில் அது ஒரே இடத்தில் இருக்கின்றது அல்லவா!
நம்மாளு: தண்ணிரில் குறி பார்த்து எறிவதும் சிரமம்! “ஐ” என்று எல்லாவற்றிற்கும் ஆம் கொட்டிக் கொண்டு இருப்பதனால் ஆமை (ஆம் + ஐ = ஆமை) என்றார்களோ?
அடக்கமுடைமை (13) என்ற அதிகாரத்தில் ஆறாவது குறள். காண்க https://foxly.link/easythirukkural_kural_126.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து. - 126; - அடக்கமுடைமை
ஆமை ஒடுங்குவதைப் போல, ஒருவன் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த ஐந்து புலன்களையும் அடக்கும் திறமை வந்துவிட்டால், அந்தத் திறமை அவனுக்கு ஏழு பிறப்புக்கும், அஃதாவது, நீண்ட காலத்திற்கும் பாதுகாப்பாக அமையும்.
பரமாத்மா தொடர்கிறார்:
ஆமை ஒடுங்குவதனைப் போன்று, எந்த ஒரு புறக்காரணிகளாலும் தாக்குதல் வரா வண்ணம் தம் ஐந்து புலன்களையும் அடக்கும் திறமை வந்துவிட்டால் அவனே மன உறுதி (ஸ்திரப் புத்தி) கொண்டவன். – 2:58
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments