top of page
Search

29/11/2024, பகவத்கீதை, பகுதி 105

அன்பிற்கினியவர்களுக்கு:

யோனி என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?


யோனி என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள உள!


யோனி என்றால் உயிர்கள் பிறக்கும் முறை என்று ஒரு பொருள் உள்ளது. இந்த வகையினில் யோனி என்பது நான்கு வகைப்படும்.


1.   கருப்பையில் தோன்றுவன: - மனித மிருக உயிர்கள்

2.   முட்டையில் இருந்து தோன்றுவன: - பறவைகள், பாம்புகள்

3.   விதைகளில் இருந்து தோன்றுவன: - மரம், செடி, கொடிகள்

4.   வியர்வையில் இருந்து தோன்றுவன: - கிருமிகள்


யோனி பேதங்கள் 84 இலட்சம் என்றும் அவை மேற்கண்ட நான்கு பிரிவினில் அடங்கும் என்றும் சொல்கிறார்கள்.


உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்

நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்கு உயிராய் … பாடல் 1419; திருஞானசம்பந்தர் தேவாரம்


இந்த 84 இலட்சம் யோனி பேதங்கள் என்னும் குறிப்பு திருமந்திரம் (பாடல் 409, இரண்டாம் தந்திரம்) , கந்தர் கலி வெண்பா (பாடல் 8) உள்ளிட்ட நூல்களிலும் காணலாம்.


பிறப்புகள் ஏழு. அவை நிற்பன, நெளிவன, தத்துவன, தவழ்வன, நடப்பன, கிடப்பன, பறப்பன என்பனவாம்.


ஆக, யோனி என்றால் உயிர்கள் பிறக்கும் முறை என்பது தமிழ் நூல்களிலும் காணக் கிடைக்கின்றது.


ஆனால், எங்கும் பாப – யோனி, புண்ணிய - யோனி போன்ற பிரிவுகளைக் குறித்த குறிப்புகள் பண்டைய தமிழ் நூல்களில் கிடைக்கவில்லை.


குணங்களையும் செயல்களையும் வைத்துதான் நான்கு பிரிவுகள் (வர்ணங்கள்) என்றார் பாடல் 4:13 இல்.


பாடல் 18:41 இல் நான்கு வர்ணங்களை விரிக்கிறார். அவையாவன: பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பனவாம். இதனைச் சொல்லிவிட்டு அவர் அவர் குணங்களால் செயல்கள் வகுக்கப்படுகின்றன என்கிறார்.


இந்தப் பாடலிலும் பிறப்பினால் வர்ணம் என்பதனைக் குறித்த குறிப்பு இல்லை. ஆனால், பெரும்பாலான உரை ஆசிரியர்கள் பிறப்பினை மையமாக வைத்து உரை எழுதுகிறார்கள்.


ஏற்றத் தாழ்வு கருதா இறைக்குப் பிறவி பேதங்கள் இருக்க இயலுமா என்ன? பல பாடல்களில் தாம் எதற்கும் பொறுப்பு அல்லன் என்பதனை வலியுறுத்திச் சொல்கிறார்.


ஆனால், இந்த ஒன்பதாம் அத்தியாயத்தில் “எல்லாம் நானே” என்று பொருள்படும்படி பல பாடல்கள் அமைந்துள்ளன!


“எல்லாம் நானே” என்று எந்த அருளாளர்களும் சொல்வதில்லை! கீதாசாரியன் இதற்கு விதி விலக்காக இருந்திருக்கமாட்டார் என்றே எண்ணுகிறேன். 


இந்தப் பகுதியில் உள்ள பாடல்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் எனக்குச் சிக்கல் இருக்கிறது.


பலரின் உரைகள் ஏற்புடையனவாக இல்லை.


நம்மால் முடிந்தவரைப் புரிந்து கொள்ள முயலுவோம்.


நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




4 views0 comments

Yorumlar


Post: Blog2_Post
bottom of page