top of page
Search

30/09/2024, பகவத்கீதை, பகுதி 46

அன்பிற்கினியவர்களுக்கு:

ஒரு கதை; அதுவும் நமக்குத் தெரிந்த கதைதான். இருக்கட்டும். இன்னுமொரு முறை கேட்போமே!


ஒரு இளைஞனுக்கும் ஒரு முதியவருக்கும் உரையாடல். அந்தப் பெரியவர் அவனிடம் சொன்னாராம்:

 

“தம்பி, மனத்தை அடக்குவது ரொம்ப கடினம் தம்பி. அதனை அடக்க நினைத்தால் வெகுண்டு எழும். அறிய நினைத்தால் அடங்கும்” என்றாராம்.

 

இளைஞன்: ஐயா, மனத்தையெல்லாம் ரொம்ப சுலபமாக அடக்கலாம். நான் அதனை அடக்கிக் காட்டுகிறேன் பாருங்க. அதற்கு தனியான இடத்திலே இருந்தாலே போதும்.

 

முதியவர்: சரி, தம்பி செய்யுங்க.

 

அந்த இளைஞன் என்ன செய்தார் என்றால், மனத்தை அடக்க ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டாராம்.

 

அந்தச் சமயம் பார்த்து அந்த வழியாக, தனியாக அழகியப் பெண் ஒருவள் நடனம் பயில முழு அலங்காரத்தோடு நடந்து சென்றாளாம்.

 

நம்மாள் நிலைமையை நினைச்சுப் பாருங்க. அந்தப் பெண் பின்னாலேயே அவனின் மனம் சென்றதாம்.

 

ச்சே.. என்ன இது? இந்தக் கண் பார்ப்பதால்தான் தொந்தரவு என்று நினைத்து ஒரு துணியை எடுத்து கண்ணை இறுக்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்தானாம்.

 

மறுநாள், அதே நேரம். சல், சல் என்று சலங்கை ஒலி. அதேப் பெண் அதே வழியாக வந்தாளாம். நம்மாளுக்கு அவள்தான் என்று தெரிந்துவிட்டது. அப்புறம் என்ன, அன்றைக்கும் அவரின் சபதம் அதோகதிதான்.

 

சரி, நாம் நாளைக்கு ஏமாந்துவிடக் கூடாது என்று நினைத்து, இரு காதுகளையும் அடைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாராம். இப்போ பார்க்கலாம்; இந்த மனது என்ன செய்கிறது என்று ஒரு சவால் வேறு விட்டாராம்!


மறுநாள் அதே நேரம். மெல்லிய ஒரு நறுமனம் மூக்கைத் துளைத்ததாம். அந்தப் பெண்ணின் கூந்தலில் இருந்த மலரின் வாசம் அது. அப்புறம் என்ன? அன்றைக்கும் சோதனைக்கு சோதனைதான்.


ச்சீ.. இது என்ன சோதனை. இருந்தாலும் நான் விடமாட்டேன் என்று சபதம் எடுத்து மூக்கையும் அடைத்துக் கொண்டாராம்! இப்போ பார்த்துடலாம் என்று அமர்ந்து கொண்டாராம்.

 

மறு நாள் அதே நேரம். அப்போது, அவனின் மனம் நினைத்ததாம்.  இந்நேரம் அவள் சென்று கொண்டிருப்பாள் என்று! இதுதான் மனம்!

மனத்தை எதைக் கொண்டு அடக்க?

 

இதற்குத்தான் பகவான் ரமண மகரிஷி சொல்கிறார் மனத்தை அறிய அது அடங்கும். மனத்தை அடக்க நினைத்தால் அது மீண்டும் மீண்டும் எழும் என்கிறார்.

 

இந்தக் கருத்தினை நம் பரமாத்மா சொல்கிறார் அடுத்தப் பாடலில்.

விலக்க வேண்டியனவற்றை விலக்கிவிட்டால் நம்மிடமிருந்து அவை விலகிவிடுகின்றன. இருப்பினும் அவற்றின் சுவை, எச்சம் நம் மனத்துக்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கும். பரமாத்ம சிந்தனையில், அஃதாவது, உன் ஓர்மையில் (Focus), கவனம் செலுத்து. அந்தச் சலனமும் தீர்ந்துவிடும். – 2:59


நம்மாளு: மனத்தை அடக்காதே; மனத்தை அறிந்து கொள். அலை அலையாக வரும் எண்ணங்களுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுக்கத் தேவையில்லை. எது விதிக்கப்பட்டதோ அதைமட்டும் செய். உண்மையான உண்மைகளில் கவனம் செலுத்து என்கிறார்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





 

5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page