அன்பிற்கினியவர்களுக்கு:
ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்னும் ஒன்பதாம் அத்தியாயத்திற்குள் நுழைவோம்.
இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. இருப்பினும் கீதாசிரியன் தாமே அவனுக்குச் சில கருத்துகளைச் சொல்ல விரும்புவதாக அமைந்திருக்கின்றது. இந்த அத்தியாயத்தில் தன்னைக் குறித்த முன்னுரையே நீண்டதாக இருக்கின்றது!
அசூசையற்றவனான அர்ஜுனா, உனக்கு இரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்கிறேன், இதனால் நீ தீமையில் இருந்து விடுபடுவாய். இந்த இராஜ வித்தை, இராஜ இரகசியம் மிக உயர்ந்தது! கண்ணால் காணலாம்; அறத்திற்கு இசைந்தது; உணர்ந்து கொள்ள எளிது; செயல்படுத்தவும் எளிது; அழிவற்றது. – 9:1-2
இந்த கருத்துகளில் கவனம் வைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இந்த வாழ்க்கைக் கடலிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத என்னால்தான் இந்த உலகம் வியாபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அவற்றினுள் அடங்கிக்கிடப்பவன் அன்று. – 9:3-4
பொருள்களுக்கு முதல் (Capital) நான்; ஆனால் நானே பொருள்கள் ஆகமாட்டேன். – 9:5
ஆகாயத்தில் காற்று எல்லைகளற்று கடந்து நிற்பதனைப் போல எல்லாப் பொருள்களும் என்னையே இருப்பிடமாக கொண்டுள்ளன. காலத்தின் இறுதியில் எல்லாம் அழிவிற்கு ஆட்படும்; அவற்றை நான் மீண்டும் தோன்றச் செய்கிறேன். இந்தச் செயல்கள் என்னைக் கட்டுப்படுத்துவது இல்லை. என்னுடைய மேற்பார்வையினால் இந்த உலகம் சுற்றிச் சுற்றி வருகின்றது. 9:6-10
“நான்”, “எனது”, “என்னால்” என்று இதுவரை வந்த இடங்களில் இயற்கை என்று இட்டு பொருள் கண்டோம். கருத்துகளில் குழ்ப்பமில்லை. கீதாசாரியரும் அதற்குத் தகுந்தாற்போலத் தம் பாடல்களை அமைத்திருந்தார்.
அடுத்துவரும் பாடல்கள் அவ்வாறு பொருள் எடுக்க ஏதுவாக இல்லை. இந்தப் பாடல்கள் கீதாசிரியன் முன்னர் சொன்ன கருத்துகளுக்கு மாறுபட்டே உள்ளன!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments