top of page
Beautiful Nature

புல்லி விடா ... 1324, 1325, 1326, 27/06/2024

27/06/2024 (1209)

அன்பிற்கினியவர்களுக்கு:

ஊடலினால் வரும் சிறுபிரிவில் என் உள்ளத்தின் உறுதியை உடைக்கும் படை இருக்கிறது என்கிறாள்.

 

ஊடினாள் தள்ளி நின்றேன்

பின் ஓடி வந்து தழுவினாள் 

ஏன் தள்ளி நின்றாய் என்றாள்.

மௌனம்

விலகுவாளோ, ஊடுவாளோ என்றெண்ணினேன்

தழுவலை விடவேயில்லை.

பதிலாகக் குறளைத் தந்தாள். அந்தக் குறள் இதோ:

 

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை. – 1324; - ஊடல் உவகை

 

புல்லி விடா அப் புலவியுள் = தழுவிய கைகளை நழுவ விடாமல் செய்த அந்த ஊடலுள்; என் உள்ளம் உடைக்கும் படை தோன்றும் = என் உள்ள உறுதியை நொறுக்கும் படை இருக்கிறது.

 

தழுவிய கைகளை நழுவ விடாமல் செய்த அந்த ஊடலுள் என் உள்ள உறுதியை நொறுக்கும் படை இருக்கிறது.

 

… பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்

அந்தப் பெண்மையின் நிலை என்ன?

மௌனம் … கவியரசு கண்ணதாசன், சாரதா, 1962

 

இவளைச் சற்று நேரம் விலகி இருப்பதில்கூட ஒரு நன்மை இருக்கத்தானே செய்கிறது என்கிறான்.

 

நம் மேல் எந்தத் தவறும் இல்லை; அவளே கற்பனையில் குற்றம் கண்டுபிடிக்கிறாள்; சண்டை போடுகிறாள்; விலகி நிற்கிறாள்; பின் ஓடி வந்து இறுகத் தழுவுகிறாள்; தோளில் சாய்கிறாள்; அவள் முன்பு செய்த ஊடலிலும் ஒரு மகத்துவம் இருக்கிறது.

 

செய்ய வேண்டியது என்னவென்றால் கொஞ்சம் குளிரூட்டுவதுதான் (அதாங்க, ஐஸ் வைப்பது!).

 

தவறிலர் ஆயினும் தாம் வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து. – 1325; - ஊடல் உவகை

 

அகறல் = நீங்குதல், அகலல்;

 

தவறிலர் ஆயினும் = தம் மேல் எந்தத் தவறும் இல்லை என்றாலும்; தாம் வீழ்வார் மென் தோள் =  தாம் காதலிக்கும் அன்புக்குரியவளின் மென்மையானத் தோள்; அகறலின் ஆங்கொன்று உடைத்து = ஊடலினால் சற்று நேரம் விலகி இருந்ததிலும் ஒரு பெரும் பயன் இருக்கிறது.

 

தம் மேல் எந்தத் தவறும் இல்லை என்றாலும், தாம் காதலிக்கும் அன்புக்குரியவளின் மென்மையானத் தோள், ஊடலினால் சற்று நேரம் விலகி இருந்ததிலும் ஒரு பெரும் பயன் இருக்கிறது. பயனாவது, ஊடலால் விலகி இருந்த நேரத்திற்குப் பன்மடங்காக இதோ தழுவி நிற்பது.

 

அது மட்டுமன்று, இந்தக் காரணமற்ற ஊடலினைப் பின்னர் மெதுவாகச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியும் சிரிப்பும் வரத்தானே செய்கிறது. 

 

இது எப்படி இருக்கிறது என்றால் எப்படி உணவு உண்ணும் பொழுதும் மகிழ்ச்சியைத் தரும்; பின்னர் அதனைச் செரிக்கும் பொழுதும் மகிழ்ச்சியைத் தரும் அது போல இருக்கின்றது  என்கிறான். அந்தக் குறளை நாம் முன்னரே சிந்தித்துள்ளோம். காண்க 18/04/2021. மீள்பார்வைக்காக:

 

உணலினும் உண்ட தறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது. - 1326; -  ஊடல் உவகை

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.



ree

 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page