18/09/2023 (926)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
சாப்பிட உணவைக் கொடுப்பது சிறந்ததுதான் என்றாலும் அந்த உணவை உருவாக்கும் திறனைக் கற்றுக் கொடுப்பது அதைவிடச் சிறந்தது!
“Give a man a fish and you feed him for a day. Teach a man to fish and you feed him for a lifetime.”
பொருளுதவியைச் செய்வது சிறந்ததுதான் என்றாலும் அந்தப் பொருளையே செய்யும் திறனைக் கற்றுத்தருவது அவன் வாழ்நாளுக்கும் பயன் அளிக்கும்.
நம்ம பேராசான் இருக்கிறாரே அவர் மிகவும் கெட்டி. அவரின் உரையாடலைக் கவனிப்போம்.
வள்ளுவப் பெருந்தகை: தம்பி, முதலில் நீங்க முக்கியமாகச் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
நம்மாளு: ஐயா சொல்லுங்க.
வ.பெ: ஒருவற்கு பசி என்று வந்தால் பத்தும் பறந்துவிடும். ஆகையினால் அவருக்கு நன்றாக உணவை அளிக்க வேண்டும்.
நம்மாளு: புரிஞ்சுதுங்க ஐயா. அதைத்தான் நீங்க விருந்தோம்பலில் சொன்னீர்களே!
வ.பெ: அருமை தம்பி. ரொம்ப சரி. முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்பினால் அகன் அமர்ந்து செய்யாள் உறையும் என்றும் பார்த்தோம் இல்லையா?
நம்மாளு: ஆமாம் ஐயா. திருமகளாகிய இல்லாள் இருப்பாள் என்று குறள் 84 இல் சொன்னீங்க.
வ.பெ: அப்படியென்றால் உங்களுக்குச் செல்வம் ஈட்டி அதனைக் காக்கும் திறன் இருக்கு என்றுதானே பொருள்?
நம்மாளு: (மனசுக்குள்ளே – நம்ம பேராசான் என்ன வருமான வரித்துறையிலிருந்து மாறு வேடம் போட்டு வந்திருக்காரா? ...)
வ.பெ: தம்பி என்ன யோசிக்கறீங்க? நான் உங்க வருமானத்தைப் பற்றி கேட்கவில்லை! நான் என்ன சொல்கிறேன் என்றால் இன்சொல் பேசுங்க அவ்வளவுதான்!
நம்மாளு: (மனசுக்குள்ளே – அப்பாடி, பேசுவதுதானே!) நிச்சயமாக ஐயா! அதிலென்ன சந்தேகம் பேசப்பழகறேன்.
வ.பெ: மகிழ்ச்சி, மகிழ்ச்சி. இன்சொல் என்றால் என்ன? அது எப்படி இருக்கணும்?
நம்மாளு: ஐயா, அதற்கு மூன்று குறிப்பைச் சொன்னீங்களே. அதாவது, நாம் சொல்லும் சொல்லில் அன்பு இருக்கணும், வஞ்சக எண்ணம் இருக்கவே கூடாது. அப்புறம் உண்மைப் பொருளைச் சொல்லணும். சரிங்களா ஐயா?
வ.பெ: சிறப்பு தம்பி. உங்களை மாதிரி ஒரு தம்பி எனக்கு கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். வாழ்க, வாழ்க. அந்த உண்மைப் பொருளை உணரும் வகையில் சொல்வது ஒருவற்கு வாழ்நாள் முழுவதும் பயன் அளிக்கும் தம்பி.
நம்மாளு: ஐயா, புரியலையே. என்ன சொல்றீங்க.
வ.பெ: தம்பி, ஒருவற்கு ஒரு வேளை உணவளித்தால் அவர் மகிழ்ச்சி கொள்வார். ஆனால் அவர் அடுத்த வேளைக்கும் உங்களையோ அல்லது உங்களை மாதிரி நல்ல தம்பி தங்கைகளையோதானே எதிர்பார்க்க நேரிடும்?
நம்மாளு: அதனால்?
வ.பெ: நீங்க என்ன செய்யணும் என்றால் சுயமாக பொருள் ஈட்டுவதற்குரிய வழிமுறைகள் உங்களுக்குத் தெரிந்தால் சரி, அல்லது, எங்கே அவர் அதனைக் கற்றுக் கொள்ளமுடியுமோ அந்த இடம் எதுவென்று அன்பாக எந்தவித வஞ்ச மனத்தோடும் இல்லாமல் சொல்லிக் கொடுங்க. அறிவு அற்றங் காக்கும் கருவின்னுதான் உங்களுக்குத் தெரியுமே!
நம்மாளு: (ஐயன் ரொம்ப கெட்டிதான். முதலில் சாப்பாடு போடுன்னு சொன்னார். அப்படியே கையைப் பிடித்துக் கொண்டு அவனுக்கு வழியையும் காட்டு என்கிறார்.) நிச்சயமாக செய்கிறேன் ஐயா.
வ.பெ: இந்தக் குறளைப் படிங்க. பிறகு சந்திக்கலாம். வாழ்த்துகள்.
“அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.” --- குறள் 92; அதிகாரம் – இனியவைக் கூறல்
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே = நெஞ்சு உவந்து ஒருவற்கு உதவியைச் செய்வதைக் காட்டிலும் நன்மையைப் பயப்பது எதுவென்றால்; முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் = முகம் மலர்ந்து இன்சொல்லால் அந்தப் பொருளை ஆக்கும் வழியைச் சொல்லித்தருவது
நெஞ்சு உவந்து ஒருவற்கு உதவியைச் செய்வதைக் காட்டிலும் நன்மையைப் பயப்பது எதுவென்றால்முகம் மலர்ந்து இன்சொல்லால் அந்தப் பொருளை ஆக்கும் வழியைச் சொல்லித்தருவது.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments