top of page
Search

அறன் அறிந்து மூத்த ... குறள் 441

Updated: Mar 29, 2022

28/03/2022 (395)

1880 ல் இருந்து 1993 வரை “Illustrated Weekly of India” (இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியா) என்ற வாரப் பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அது ஒரு டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) நிறுவனத்தின் பத்திரிக்கை. அதனுடைய அளவு (size) பெரியதாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும் மற்ற வாரப் பத்திரிக்கைகளைவிட.


அதிலே, அறிஞர் அண்ணாவிடம் பேட்டி கண்டு போட்டிருந்தார்கள். அந்த பேட்டி வெளிவரும் போது அண்ணா இயற்கையுடன் இணைந்து விட்டிருந்தார்.


அதிலே, முக்கியமான ஒரு கேள்வி. அண்ணா, உங்கள் இயக்கம், தொடக்க காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தினர் மீது வெறுப்பைக் கொட்டியது ஏன்? அதற்கு அண்ணா அவர்களின் பதில் (சுருக்கமாக): என்றைக்கும் வெறுக்கவில்லை. அவர்கள் மிகவும் அதிக எண்ணிக்கையில் எங்களுடன் சேர்வதையே விரும்புகிறேன்.


தொடர் கேள்வியாக: அவர்கள் அதிகமாக வந்தால், உங்களின் தலைமைக்கே ஆபத்து ஏற்படலாம். நாளை ராஜாஜியே உங்கள் கட்சியில் சேர விரும்பினால் நீங்கள் உங்கள் தலைமையை விட்டுக் கொடுப்பீர்களா?


“ஓ. அப்படி சேர்ந்தால் அது எங்கள் கட்சிக்கு திருநாளாக அமையும். ராஜாஜியின் தலைமையின் கீழ் செயல்படுவது எனக்குப் பெருமை, எனக்குக் கிடைத்த கௌரவம், நல்லூழ் என்பேன்.”


மூதறிஞர் ராஜாஜி அவர்களை அண்ணா பல தருணங்களில் கலந்து ஆலோசிக்கத் தவறியதில்லை.


அதே போல, மாண்புமிகு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது வெளிநாடுகளிடம் நல்உறவுகள் வளர வேண்டும் என்பதற்காக சரியான துணையைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் தேர்வு செய்தது, யாரை என்றால் எதிர்கட்சியில் இருந்த மாண்புமிகு வாஜ்பாயி அவர்களை. அவரின் மூலம்தான் நல்லுறவுகள் மீண்டும் சீரமைக்கப் பட்டன. பொருளாதார மாற்றம் நிகழ்ந்தது.


சரி, இது எதற்கு என்று கேட்கீறீர்களா? சொல்கிறேன். பெரியாரை அஃதாவது பெரியோர்களின் துணையுடன் இருத்தல் என்பது நம்மை உயர்த்தும். சிற்றினம் தாழ்த்தும்.


சிற்றினம் சேராமை (46ஆவது) அதிகாரம் சொல்வதற்கு முன் பெரியாரைத் துணைக்கோடல் (45ஆவது) அதிகாரம் சொல்லி வைத்துள்ளார்.


அறம் எது என்று அறிந்த மூத்த அறிவுடையார்களின் வழிகாட்டுதலை தலைமையில் இருப்பவர்கள் திறன் அறிந்து, தேர்ந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன் அறிந்து தேர்ந்து கொளல்.” --- குறள் 441; அதிகாரம் – பெரியாரைத் துணைக் கோடல்.

கேண்மை = நட்பு


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






15 views1 comment
Post: Blog2_Post
bottom of page