29/06/2023 (847)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இறைமாட்சியில் உள்ள மூன்றாவது குறளை நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 28/05/2023 (795). மீள்பார்வைக்காக:
“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.” --- குறள் 383; அதிகாரம் – இறைமாட்சி
நிலத்தினை ஆளும் திறம் உடையவர்களுக்குச் செயல்களில் விரைவுடைமை, அச் செயல்களைச் செய்ய ஆழ்ந்த அறிவு, செயல்களைச் செய்து முடிக்கத் துணிவுடைமை என்ற இந்த மூன்று பண்புகளும் ஒருபோதும் நீங்கா.
பாயிரவியலில் இறுதியாகவும் உறுதியாகவும் அனைவருக்கும் பொதுப்பட ஒரு குறளை அமைத்திருந்தார். அந்தக் குறளை நாம் முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். காண்க 22/02/2021 (36). மீள்பார்வைக்காக:
“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. “ ---குறள் 40; அதிகாரம் - அறன்வலியுறுத்தல்
அதாவது செய்வது என்றாலே அது அறமாக, நல்வினையாக இருக்க வேண்டும், ஒழிக்கவேண்டியது எது என்று கேட்டால் பழியைத் தரும் தீவினைகளே.
அந்தக் கருத்தையே மீண்டும் வலியுறுத்துகிறார் இறைமாட்சியில்.
“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.” --- குறள் 384; அதிகாரம் – இறைமாட்சி
அறன் இழுக்காது = தனக்கு வகுக்கப்பட்ட அறங்களில் இருந்து தவறாது; அல்லவை நீக்கி = அறமல்லாதவற்றை நீக்கி; மறன் இழுக்கா மான முடையது அரசு = வீரத்தில் இருந்து வழுவாத மானமுடையவன் அரசன்.
தனக்கு வகுக்கப்பட்ட அறங்களில் இருந்து தவறாது, அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் இருந்து வழுவாது மானமுடையவன் அரசன்.
அறம் என்றாலே விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் என்பது மீண்டும் நினைவு கூறத்தக்கது.
மேற்கண்ட குறளில் மூன்று குறிப்புகளைத் தருகிறார். முதலில் அறம், அதற்குப் பின் அல்லவை, இறுதியாக மறம். இந்த மூன்றையும் ஒவ்வொன்றாகப் பரிமேலழகப் பெருமானின் உரையிலிருந்து பார்ப்போம்.
அரசனுக்கு வகுக்கப்பட்ட அறங்கள் என்ன? ஓதல், வேட்டல், ஈதல் ஆகிய பொதுத் தொழில்களும் படைக்கலம் பயிறல், பல்லுயிர் ஓம்புதல், பகைத் திறம் தெறுதல் என்னும் சிறப்புத் தொழிலிலும் வழுவாது இருத்தல் என்கிறார்.
ஓதல் = நல்ல நூல்களை நாளும் கற்றல்; வேட்டல் = மக்களுக்குத் தேவையானவைகளை நாளும் விரும்புதல்; ஈதல் = தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுதல்; படைக்களம் பயிறல் = போர்த்திறம் பழகுதல்; பல்லுயிர் ஓம்புதல் = பல வகைப்பட்ட உயிர்களையும் (bio-diversity) காப்பாற்றுதல்; பகைத்திறம் தெறுதல் = பகைவர்களை வெற்றி கொள்ளுதல்.
அல்லவை என்றால்? அல்லவை என்றால் கொலை, களவு. இவைகளை நீக்க வேண்டுமாம்.
சேரும் இலக்கு மட்டும் முக்கியமல்ல; அதற்குத் தேர்ந்தெடுக்கும் வழியும் முக்கியம். End does not justify the means.
சரி, அது என்ன வீரத்தில் இருந்து வழுவாத? இதற்கு பல உதாரனங்களைத் தருகிறார். அதில் சீவக சிந்தாமணியிலிருந்து ஒரு பாடல்:
“வீறின்மையின் விலங்காம்என மதவேழமும் எறியான்
ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சில் என்று எறியான்
மாறன்மையின் மறம்வாடும் என்று.இளையாரையும் எறியான்
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்.” --- பாடல் 2261; திருத்தக்கத் தேவர்; சீவக சிந்தாமணி.
மறனிழுக்க மானம் என்பது:
யானையானது விலங்கு என்பதால் அதனைக் கொல்ல முயலாதவன்;
முன்பே யாராலோ அடிபட்டு வீழ்ந்து கிடப்பன்மேல் தானும் வேலினை எறியாதவன்;
தனக்கு இளையாரையும் தனக்கு மூத்தோரையும் எதிர்த்து போரிடாதாவன் என்கிறார்.
இந்தப் பாடல் கூர்ந்து சிந்திக்கத் தக்கது.
அதாவது, சரி நிகர் சமமாக எதிர்ப்பவர்களை எதிர்ப்பதுதான் மறனிழுக்கா மானம் என்பது! அதாங்க, செத்த பாம்பை அடித்தால் எப்படி? அது ஒரு வீரமா?
இவ்வளவு செயல்கள் இருக்கின்றன ஒரு மன்னனுக்கு!
நாமெல்லாம் இந்நாட்டு மன்னர்கள் என்பதை நினைவில் கொள்க!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
留言