top of page
Search

அறிதோறு அறியாமை ... 1110

14/09/2022 (563)

புணர்ச்சி மகிழ்தலில் கடைசி குறள். ரொம்பவே அழகான,ஆனால் ஆழமான கருத்தினைக் கொண்ட குறள். இன்பத்துடன் கடமையை இணைப்பதில் நம் பேராசானை யாரும் அடிச்சுக்க முடியாது.

இந்தக் குறளை, இந்தத் தொடரை ஆரம்பித்த சில நாட்களில் சிந்தித்திருந்தோம். காண்க 01/02/2021 (15).

மீள்பார்வைக்காக மீண்டும் இதோ:

கற்பதனால் பயன் இருப்பது நம்ம எல்லோருக்கும் தெரியும். அதனாலே:

“படி, படி, படி

காலையிற்படி கடும்பகல்படி மாலை, இரவு பொருள்படும் படி

சாதி என்னும் தாழ்ந்தபடி

நமக்கெல்லாம் தள்ளுபடி

சேதி அப்படி தெரிந்துபடி

தீமை வந்திடுமே மறுபடி … “

… பாவேந்தர் பாரதிதாசனாரின் வைரவரிகள்


கல்வியின் ஆயபயன் நமக்கு ஒருவாறு இப்போ விளங்கிடுச்சின்னு சொல்லலாம். கல்வி அருளாக மாறனும்,மேலும் அருளாளர்கள் தாள்களை வணங்கி மேலும் கற்கனும்.


அதுக்கு தான் வள்ளுவப்பெருமான்,

கற்க, கற்க நம்முடைய ‘அறியாமை’ தெரிய வரும்ன்றார். அதுவும் எப்படியாம்?


அதுக்கு ஒரு மேற்கோள் காட்டுகிறார்.

கொஞ்சம் கிட்ட வந்து காதை கொடு. பக்கத்திலே யாரும் இல்லையான்னு கேட்டுட்டு மெதுவாக வள்ளுவப்பெருமான் காதிலே சொன்னதை அப்படியே சொல்றேன். கொஞ்சம் கிட்ட வாங்க ப்ளிஸ்.


உடையவளிடமோ, உடையவனிடமோ ஒவ்வொரு முறை நெருங்கிச் செல்லும் போதும், ‘அடடா, இதுவரை இது தெரியாம போச்சே’ ன்னு அறியாமை வெளிப்படுதில்லையா அது போலன்னு போட்டார் ஒரு போடு.


நம்ம வள்ளுவப்பெருமான் நல்ல ஒரு ரசனையான ஆளா இருந்திருப்பார் போல. அனுபவம் பேசுது!


ம்..ம். பெருமூச்சு விடாதீங்க. குறள், குறள் அதிலே தான் கவனம் இருக்கனும். இதோ அந்த குறள்:


அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு” --- குறள் – 1110; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்


அறிதோறு(ம்) = கற்க, கற்க; அறியாமை கண்டற்றால் = கற்காதது, கற்க வேண்டியது மேலும் இருப்பதுதான் தெரிகிறது;

காமம் செறிதோறும் சேயிழை மாட்டு = (அதைப்போல) என்னவளுடன் நான் இணையும் போதெல்லாம், எனது அறியாமையை அகற்ற மேலும், மேலும் முயல வேண்டும் என்பது தெளிவாகிறது.


பின் குறிப்பு (14/09/2022):


நேற்று வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைச் சொன்னார். காண்க: 13/09/2022. அதாவது, ஊடல், உணர்தல், இணைந்து வெற்றி கொள்ளல். இந்த மூன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதனை, இல்லறம் தொடங்கும் முன்பே, காதலிக்கும்போதே பயின்று கொள் என்றார்.


முத்தாய்ப்பாக, ஒரு அருமையான வாழ்க்கையின் ஒரு பெரும் நோக்கத்தை அப்படியே போகிறவாக்கில் போட்டுவிட்டுப் போகிறார்.


அறியாமையை அகற்றுவதுதான் வாழ்க்கையின் நோக்கம். அதையும் காதல் வாழ்க்கையையும் இணைக்கிறார் நம் பேராசான்.


அதனால்தான் என்னமோ, மூதறிஞர் மு.வரதராசனார் அவர்கள் 1948ல் எழுதி வெளிவந்த “திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்” என்னும் நூலில் இன்பத்துப் பாலை முதலிலும், அதனைத் தொடர்ந்து பொருட்பாலையும், அறத்துப்பாலையும் வைத்து எழுதியுள்ளார். இந்த வைப்பு முறை இளையோர்களைக் கவரும் என்று எண்ணியிருக்கலாம்.


ஆனால், இந்த வைப்பு முறையில் குழப்பம் ஏற்படலாம் என்று பலர் கருதியதால், 1949ல் அனைவரும் ஏற்றுக் கொண்ட அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் வைப்பு முறையில் தனியாக, “திருக்குறள் – தெளிவுரை” என்ற ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.




2 views0 comments
Post: Blog2_Post

©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page