top of page
Search

இழத்தொறுஉம் காதலிக்கும் ... குறள் 940

11/07/2022 (500)

நன்றி, நன்றி, நன்றிகள் பல. உங்களுடன் சேர்ந்து, திருக்குறளைத் தொடர்ந்து சிந்திப்பதில், இன்றுடன் 500ஆவது நாள். இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஆச்சரியம்தான்! காலம் கடுகியேதான் செல்கிறது.


வாழ்நாளில், அனைத்து குறள்களையும், ஒரு முறையாவது வாசித்துவிட வேண்டும் - என்பதுதான் எனது அவா. அதற்கான முயற்சியாகத் தொடங்கியதுதான் இந்தத் தொடர். இந்த முயற்சியில் உங்கள் அனைவரின் ஊக்கம் அளப்பரியது. அதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


திருக்குறளை அலசி ஆராயும் அளவுக்கு கற்றிலன் நான். எனினும், சிறு குழந்தை நடை பயிலும் போது, விழுந்து, விழுந்து எழும். நடை சரியாக இருக்காது, இருப்பினும், “என்னமா நடக்கிறான் என் பிள்ளை!” என்பாள் அம்மா. அது போல, என் முயற்சிகளைத் தாய் உள்ளம் கொண்டு ஆதரித்துவரும் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.


குறளுக்கு வருகிறேன். சூது அதிகாரத்தின் பத்தாவது குறள். முடிவுரையாகச் சொல்ல வேண்டும் என்று கருதி ஒரு குறளை வைத்துள்ளார் நம் பேராசான். சற்று சிக்கலானக் குறள் போலத் தோன்றுகிறது. முயற்சி செய்வோம் புரிந்து கொள்ள.


அதாவது, சூதின் பால் ஈர்க்கப் பட்டால், பொருள்களை இழக்க, இழந்து விட்டதைப் பிடித்து விடலாம் என்று தொடர்ந்து ஆடிக் கொண்டிருப்பார்கள். அதுதான், சூதாடுபவர்களின் இயல்பு. இதை ஆங்கிலத்தில் addiction (ஒன்றுக்கு அடிமையாகும் தன்மை, போதை) என்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

“இதுவரைக்கும் மலை, மலையா கஷ்டம்பா. இந்த ஆடி போய் ஆவனி வந்தால் டாப்பா (topஆ) வருவேன்னு சொல்றான். அது வரைக்கும் ஒழுங்கா காலத்தை தள்ளனும். அதான், பல்லைக் கடிச்சுட்டு, உயிரைக் கையிலே பிடிச்சுட்டு இருக்கேன்” --- இப்படியான உரையாடல்களை நிச்சயாமாக நாம் கேட்டிருப்போம்.


அதாவது, துன்பங்கள் தொடர்ந்து வரும் போது, மிகவும் சிலர் தான் துறவு பூணுவார்கள். மிக, மிகச் சிலர்தான் தன் உயிரைப் போக்கிக் கொள்வார்கள். பெரும்பான்மையானவர்கள் எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் அடுத்து வரும் நாளில் இன்பம் காணலாம். ஏற்றம் பெறலாம் என முயன்று கொண்டிருப்பார்கள்.


இந்த இரு வகையானவர்களை ஒப்பிட்டு, முத்தாய்ப்பாக ஒரு குறள் சமைத்துள்ளார் நம் பெருந்தகை.


இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறுஉம் காதற்று உயிர்.” --- குறள் 940; அதிகாரம் – சூது


இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் = தொடர்ந்து இழக்க, இழக்க எப்போதாவது வெற்றி காணலாம் என்று சூதாடுபவர்கள், சூதினை, விரும்புவது போல;


துன்பம் உழத்தொறுஉம் காதற்று உயிர் = எவ்வளவுதான் துன்பம் வந்தாலும், உடம்பின் மேல் இருக்கும் காதலை உயிர் விடாது.


காதற்று = காதல் + அற்று = காதலை விடாது.

இழத்தொறுஉம், உழத்தொறுஉம் – இன்னிசை அளபெடை.


தொடர்ந்து இழக்க, இழக்க எப்போதாவது வெற்றி காணலாம் என்று சூதாடுபவர்கள், சூதினை விரும்புவது போல; எவ்வளவுதான் துன்பம் வந்தாலும், உடம்பின் மேல் இருக்கும் காதலை உயிர் விடாதாம்.


இதை, சில அறிஞர் பெருமக்கள், விபரீத உவமை அல்லது எதிர்நிலையணி என்றும் சொல்கிறார்கள்.


நம் பேராசான், இயல்புகளைச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.


ஒன்று: சூதாடுபவன் அனைத்தையும் இழப்பது உறுதி;

இரண்டு: எவ்வளவுதான் உடம்பைக் கட்டிக் காத்தாலும் ஒரு நாள் உயிர் பிரிவது உறுதி.


உறுதி என்பதைச் சொல்ல, உச்சபட்ச உவமையான உயிரை நம் பேராசான் கையாண்டு இருக்கிறார் என்று தோன்றுகிறது.


உங்களின் கருத்து என்ன?


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




13 views1 comment
Post: Blog2_Post

©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page