29/03/2022 (396)
ஒருவருக்குப் பல வழிகளிலே இடர்கள் வரலாம். தனி நபர்களுக்கே இவ்வாறு என்றால் ஒரு நாட்டிற்கு சொல்லத் தேவையில்லை.
வரும் இடர்களை இரண்டாகப் பிரிக்கலாம். (Natural disasters and Man-made disasters). இயற்கைப் பேரிடர் என்றும், மனிதத் தூண்டுதலால் நிகழும் பேரிடர்கள் என்றும் பகுக்கிறோம்.
இடர்களை, மேலும், வந்துற்ற இடர்கள் என்றும், வரும் வாய்ப்புள்ள இடர்கள் என்றும் பகுக்கலாம்.
இவைகளையெல்லாம் சமாளிக்கத் தெரிந்தவர்கள்தான் பெரியவர்கள், மூத்தவர்கள். அவர்கள், நடந்துவந்தப் பாதையின் அனுபவம் அவர்களிடம் நிறைந்து இருக்கும்.
இயற்கை விநோதமானது. இளமையில் வேகம் இருக்கும். முதுமையில் அனுபவம் இருக்கும். வேகமும், விவேகமும் எப்போதும் இணைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
சார்ந்து வாழ்வது மாந்தக் குலத்திற்கு நன்மை பயக்கும் என்ற காரணத்தால் இயற்கையே அவ்வாறு ஒரு ஏற்பாடு செய்துள்ளது போலும். இது நிற்க.
பெரியவர்களை, அதுவும் எப்படிப்பட்ட பெரியவர்களை, வந்துள்ள துன்பங்களை நீக்கும் அறிவு கொண்டவர்களை, இனி அத்துண்பங்கள் வராதபடி காத்துக் கொள்ள வழி சொல்பவர்களை, அதற்கும் மேல், குறிப்புகளைக் கொண்டு வரப்போகும் துண்பங்களை முன்கூட்டியே எடுத்துரைத்து பாதுகாப்பு செய்யும் திறன் உடையவர்களை, அவர்களின் பாதம் பணிந்து போற்றி பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமாம். சொல்கிறார் வள்ளுவப் பேராசான்.
“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.” --- குறள் – 442; அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
நோய் = துன்பங்கள்; நீக்கி = களைந்து; உற்ற = வந்துற்ற; உறாமை = இனி வாராதவாறு; முற்காக்கும் = வரப்போவதை அறிந்து காக்கும்; பெற்றியார் = அறிவும் அனுபவும் பெற்ற பெரியார்கள்; பேணி = அவர்களை நாம் பணிந்து காத்து; கொளல் = துணைக்கு வைத்துக் கொள்ளுதல் சிறப்பு
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
コメント