29/06/2024 (1211)
அன்பிற்கினியவர்களுக்கு:
18/01/2021 இல் தொடங்கிய இந்தத் தொடர் இன்றுடன் அஃதாவது 29/06/2024 இல் இனிதே நிறைவு பெறுகிறது.
திருக்குறள்களின் சிறப்புகளைப் பல அறிஞர் பெருமக்கள் எடுத்து வைத்துக் கொன்டேயுள்ளனர். எனவே அத் திருக்குறள்களை முற்றும் முழுதாக ஒரு முறையேனும் வாசித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிபாடுதான் இந்தத் தொடர்.
வாசித்து முடிக்க வேண்டும் என்பதனை அடிக் கோடிட்டுக் கொள்கிறேன். கற்றறிந்தேன் என்று சொல்ல இயலாது. அந்த முயற்சி தொடரும். திருக்குறளை முன்னிட்டு உங்களுடன் பல செய்திகளை பகிர்ந்து கொள்ளும் வாய்பு கிடைத்தமைக்கும் நன்றி.
இந்தத் தொடர் முழுக்க முழுக்க எனக்கு நானே சொல்லிக் கொண்டது. அஃது அனைவர்க்கும் பயன் அளிக்குமாயின் மிக்க மகிழ்ச்சியே. என்னை நாள் தோறும் ஊக்குவிப்பவர்கள் பலர். அவர்கள் இல்லையென்றால் இந்தத் தொடரில் தொய்வு ஏற்பட்டிருக்கும். உங்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த நிறைவுப் பகுதியை நண்பர்களின் விரும்புதலுக்கு இணங்க அவர்களுடன் இருந்து, காஞ்சியிலிருந்து எழுதுகிறேன்.
சரி, குறளுக்கு வருவோம்.
என் கண்ணுக்கினியவள் தொடர்ந்து ஊடல்களை நிகழ்த்தட்டும்; அவளின் பின்னே நான் சென்று அவளை அன்புடன் இரந்து நிற்க இந்த இரவுப் பொழுது நீளட்டும் என்கிறான்.
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா. – 1329; - ஊடல் உவகை
ஒளியிழை யாம் இரப்ப ஊடுக மன்னோ = என் கன்ணுக்கினியவளிடம் நான் இரந்து நிற்க அவள் ஊடல் நாடகத்தைத் தொடரட்டும்; இரா நீடுக மன்னோ = அதற்காக இந்த இராப் பொழுது நீளட்டும்.
என் கன்ணுக்கினியவளிடம் நான் இரந்து நிற்க அவள் ஊடல் நாடகத்தைத் தொடரட்டும்; அதற்காக இந்த இராப் பொழுது நீளட்டும்.
1330 ஆவது குறளை நாம் முன்பொரு முறை பார்த்துள்ளோம். காண்க 29/03/2021. கவித்துவமான குறள். மீள்பார்வைக்காக:
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். -1330; – ஊடல் உவகை
சிறு சிறு பிணக்குகள்தாம் வாழ்க்கையை வசீகரமாக்குகின்றன.
ஊடுதல் அன்பின் வெளிப்பாடு. நீ என்னவன், என்னவள் என்னும் நெருக்கத்தினை வெளிபடுத்தும் செயல். அதைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்துச் சென்றால், கூடி முயங்கினால் அஃது இனிமையிலும் இனிமை.
இதுவரை இந்தத் தொடரைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அனைவர்க்கும் நன்றி.
என் எண்ணற்ற ஆசிரியப் பெருந்தகைகளை என் மனம் மொழி மெய்களால் போற்றிப் பணிந்து என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நூலினை வாசிக்கிறோம் என்றால் அந்த நூலைப் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தோம்; அந்த நூலைப் படித்த பின்னர் ஏதாவது சிந்தனையில், செயலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா என்பதனைக் கவனிக்க வேண்டும். அப்படி மாற்றங்களை ஏற்படுத்தினால் அஃதே இலக்கியம்.
இந்தத் தொடரின் மூலம், என்னைப் பொறுத்தவரையில் நான் பல மாற்றங்களை உணர்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்:
1. என்னுள் இருந்த இருண்ட எண்ணங்களில் குறளின் வெளிச்சம் பாய்ந்து அவை மாறியுள்ளன;
2. சிந்தனையில் செயலில் ஒரு நிதானம் ஏற்பட்டுள்ளது;
3. என்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்த பல கற்பனை பூதங்கள் காணாமல் போயுள்ளன.
இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும் இம் மூன்றினை முக்கியமானதாக நினைக்கிறேன்.
திருவள்ளுவப் பெருந்தகை 1330 இல் சொன்னதைச் சுருக்கி ஒரே ஒரு சொல்லில் சொல்ல முடியுமா என்றால் அழுத்திச் சொல்வேன், அதுதான் அன்பு.
திருக்குறளில் ஓடும் அடிநாதமே அன்புதான். அன்பினைப் பிடித்துக் கொண்டால் அனைத்திற்கும் அதுவே மந்திரச்சாவி.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன் உங்கள் மதிவாணன்.
Comments