17/10/2022 (594)
“கவ்வு” என்றால் ஒன்றை பற்றிக்கொள்வது. ஆனால் “தவ்வு” ன்னு ஒரு சொல் இருக்காம்.
பசுவின் பாலைத்திரித்து ஓரளவிற்கு திடமாக்குவர்கள். அதற்குப் பெயர் ‘பனீர்’ (Paneer).
சோயா விதைகளில் இருந்து பால் எடுத்து அதை திரித்து கெட்டியாக்குவார்கள். அதற்குப் பெயர் ‘டோஃபு’/‘Tofu’. இதை சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் “தவ்வு” என்று அழைக்கிறார்கள்.
இந்தத் தவ்வுவிற்கும் நாம் பார்க்கப் போகும் தவ்வுவிற்கும் வித்தியாசம் இருக்கு.
‘தவ்வு’ என்றால் தாவுதல். தவ்வித் தவ்விச் செல்வதால் தவளை!
‘கௌவை’யை கவ்வை என்றும் எழுதுகிறார்கள். அதன் பொருள்தான் நமக்குத் தெரியுமே, அதாங்க ஊர் முழுக்கப் பேசும் பழிச்சொல்.
இது நிற்க.
அவன்: எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தொடர்பை ஊதி, ஊதி பெரிதாக்குவதுதான் இந்த கவ்வை. இதுவும் ஒரு நன்மைக்கே. இந்த ஏளனப் பேச்சுகள்தான் எங்களின் தொடர்பை, அன்பை குறையாமல் பார்த்துக்கொள்கிறது. சேர்க்க வேண்டியவர்களுக்கும் செய்தியை சென்று சேர்கிறது!
“கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.” --- குறள் 1144; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
கவ்வையால் கவ்விது காமம் = எங்கள் நெருக்கம் ஊராரின் பழிப்பேச்சுகளுக்கு ஆளாகி உள்ளது;
அதுவின்றேல்= அது மட்டும் இல்லையென்றால்; தவ்வென்னும் தன்மை இழந்து = எங்களின் நோக்கம் தாவி, தாவிச் சென்று சேர வேண்டியவர்களுக்கு போய் சேர்க்க முடியாமல் போகும்.
எங்கள் நெருக்கம் ஊராரின் பழிப்பேச்சுகளுக்கு ஆளாகி உள்ளது; அது மட்டும் இல்லையென்றால் எங்களின் நோக்கம் தாவி, தாவிச் சென்று சேர வேண்டியவர்களுக்கு போய் சேர்க்க முடியாமல் போகும்.
வாழ்க கவ்வை!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Kommentare