கேட்டார்ப் பிணிக்கும் திறனறிந்து சொல்லுக ... 643, 644
13/04/2023 (770)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
சொல்வன்மையில் மூன்றாவது பாடலில் சொல்லும் சொல்லின் இலக்கணம் சொல்கிறார்.
அமைச்சரானவரின் சொல் (இது எல்லோருக்குமே பொருந்தும்) எப்படி இருக்க வேண்டும் என்றால் நண்பர்கள் அதனை மேலும், மேலும் விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல இருக்க வேண்டுமாம்!
அது மட்டுமில்லாமல், பகைவர்களும், அடடா, அவர் சொல்வதில் நியாயம் இருக்கத்தானே இருக்கு. நாமும் கேட்பதில் தவறில்லை என்பது போல் இருக்க வேண்டுமாம்.
நாம் ஏற்கனவே இந்தக் குறளைச் சிந்தித்துள்ளோம். காண்க 28/01/2023 (695). மீள்பார்வைக்காக:
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.” --- குறள் 643; அதிகாரம் – சொல்வன்மை
வேட்ப = விரும்ப; பிணிக்கும் தகையவாய்= எப்போதும் நம்முடன் இணைந்து இருக்கும் வகையில்.
அடுத்துவரும் மூன்று பாடல்களின் மூலம் சொல்லை எப்படிச் சொல்லவேண்டும் என்று சொல்கிறார்.
முதல் குறிப்பு: திறனறிந்து சொல்லுதல். இது முக்கியமாக, நம்ம திறமையையும், கேட்பவர்களின் திறமையையும் குறிக்கும்.
திறன் என்றால் எதுவெல்லாம் அடங்கும்? இதற்குப் பரிமேலழகப் பெருமான் ஒரு பட்டியல் போடுகிறார். அதாவது, குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள் என்கிறார்.
இரண்டாம் குறிப்பு: நாம் இப்போது உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம். அதனால், யாரிடமும் பணிவாகப் பேசத் தேவையில்லை என்று நினைக்கக்கூடாது.
“இங்கே வா” என்று எல்லோருக்கும் பொதுவாகச் சொல்ல இயலாது! பார்த்துதான் சொல்லணும். இதுதான் உலகத்தோடு ஒட்ட ஒழுகல். இதுதான் அறம்! இதுதான் இரண்டாம் குறிப்பு.
மூன்றாம் குறிப்பு:
“ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்” என்று ஒரு பழமொழி இருக்கு.
இந்தப் பழமொழியின் அடிப்படையில் ஒரு சிறந்த திரைப்படப் பாடலும் இருக்கு. கவிஞர் மருதகாசி அவர்கள், 1963இல் வெளியான அறிவாளி என்ற திரைப்படத்தில் ரொம்பவே அருமையாக எழுதியிருப்பார்.
“ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
...அறிவும் திறமையும் வேணும்
எதுக்கும் அறிவும் திறமையும் வேணும்...” கவிஞர் மருதகாசி, திரைப்படம் – அறிவாளி.
நாம் சொல்லும் சொல் இனிமை பயக்கணும். அப்போதுதான், ஒரு செயலை நமக்காகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்வார்கள். அப்போதுதான் நாம் சொல்லுக்கு பொருள் இருக்கும். பொருளும் கிடைக்கும்! இதுதான் மூன்றாம் குறிப்பு.
சரி, நாம் குறளுக்குப் போவோம்.
“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.” --- குறள் 644; அதிகாரம் – சொல்வன்மை
சொல்லை திறனறிந்து சொல்லுக = சொல்லை நம் திறனும், கேட்பவர்களின் திறங்களையும் அறிந்து சொல்லுக;
அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் = அப்படிச் சொல்லுவதற்கு மேற்பட்ட அறமும், பொருளும் இல்லை.
சொல்லை நம் திறனும், கேட்பவர்களின் திறங்களையும் அறிந்து சொல்லுக; அப்படிச் சொல்லுவதற்கு மேற்பட்ட அறமும், பொருளும் இல்லை.
சொல்லே அறம், பொருள்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
