top of page
Search

குணம்நாடிக் குற்றமும் நாடி ... குறள் 504

நூறாவது நாள்


இன்றைக்கு நூறாவது நாள் இந்த தொடர் தொடங்கி. கருத்துகளை வழங்கி வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துகளும்.


குறைகள் இருப்பின் அது எனது அறியாமையே. நிறைகள் இருப்பின் அது எனதருமை ஆசான்களையே சாரும். அதில் மிக்கவை நாடி ஏற்பதோ, தவிர்ப்பதோ நன்று.


தெரிந்துதெளிதல் என்கிறது 51வது அதிகாரம். தெரிந்து தெளிதல் என்றால் ஆராய்ந்து தெளிதல். எதையுமே ஆய்ந்து, நல்லது எது, அல்லது எது என்று கண்டறிந்து நடப்பது நன்று. அந்த வகையிலே இதுகாறும் நாம் பார்த்ததை அனுகவும்.


இந்த முயற்சி எனக்கு நானே கற்றுக்கொள்ளும் முயற்சி. நான் முறையாக தமிழ் கற்றவன் அல்ல. கற்க முயல்பவன். பல குறைகள் இருக்கலாம். நடை பயிலும் குழந்தையின் நடைதான் இது. அதை சுட்டியோ, வெட்டியோ திருத்தினால் செம்மை படும் அந்த நடை.


வள்ளுவப்பேராசான் வாக்கில்:


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.” --- குறள் 504; அதிகாரம் - தெரிந்துதெளிதல்

குணம்நாடி = நல்லவைகளை நாடி; குற்றமும் நாடி = அல்லவைகளையும் கண்டு தவிர்த்து; அவற்றுள் மிகைநாடி = அதில் நல்லவை மிகுந்து இருப்பின் அதை ஏற்று; மிக்க கொளல் = அதையே (பயன் கருதி) கொள்ள வேண்டும்.

‘நாடி’ என்ற சொல்லுக்கு நேர்முகமாகவும் எதிர்மறையாகவும் பொருள் படும் படி அமைந்த குறள் இது.


குணமும் குற்றமும் கலந்தே இருப்பது உலகத்து இயற்கை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்கிறார் பெரும்புலவர் ஒளவையார். காலமும், இடமும் இடறிவிடும். நூலறுந்த பட்டம் போல் நம் கையை விட்டுப் போகும். அந்தக்கணம், விழிப்புணர்வு கொண்டு அதை தாவி பிடித்து விட வேண்டுமாம்.


தாவிப் பிடிப்போம்!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்






7 views0 comments
Post: Blog2_Post
bottom of page