top of page
Search

காமம் வெகுளி மயக்கம் ... 360, 35, 01/04/2021

Updated: Feb 9

01/04/2021 (74)

அன்பிற்கினியவர்களுக்கு:

துறவிக்கும் அதே மூன்று!

அறத்துப்பாலில் துறவறவியலில் மெய் உணர்தல் அதிகாரம். மெய் உணர்தல் என்றால் உலகத்தின் மாறாத இயல்பை உணர்தல். அது என்ன உலக இயல்பு?


ஆக்கப்பட்ட பொருள்களுக்கு ஆயுள் உண்டு. அது முடிந்த பிறகு அழிவும் உண்டு. அதுதாங்க ‘நிலையாமை’. இதை உணர்ந்துவிட்டால் பொருள்களின் மீது இருக்கும் பற்று போய்விடும். அதற்குப் பெயர்தான் துறவாம். அதற்குப் பிறகு வருவது மெய் உணர்தல். மன மயக்கங்களிலிருந்து விடுபட வேண்டுமென்றால் (விடுவதுதான் வீடு) ஆசை, அவாக்களை அறுக்கணுமாம். பின்னர் நேராக வீடுதான்!


நிலையாமை (34), துறவு (35), மெய் உணர்தல் (36), அவாஅறுத்தல் (37) – இப்படி அதிகார அமைப்புச் செய்திருக்கிறார் நம் வள்ளுவர் பெருந்தகை. இவை துறவறவியலில் கடைசி நான்கு அதிகாரங்கள். சும்மா, தெரிந்து வைத்துக் கொள்வோம். நிற்க.


துறவிக்கும் அதே மூன்று குற்றங்கள் என்று நேற்று முடித்திருந்தோம். அந்தக் குறளைப் பார்த்துவிடலாம்:

 

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். - 360; - மெய் உணர்தல்


காமம் = ஆசை(கள்); வெகுளி = சினம், கோபம்; மயக்கம் = அகங்கார மமகாரங்கள் (செருக்கு); இவைமூன்றன் நாமம் கெட = இந்த மூன்றின் நாமம் கெட, அழிய; நோய் கெடும் = துன்பம் விலகும்.


ஆசை, சினம், அகங்கார மமகாரங்கள் (செருக்கு) ஆகிய இந்த மூன்றின் நாமம் கெட ஒருவர்க்குத் துன்பம் விலகும்.


அகங்கார மமகாரங்களைப் பின்னர் விரிக்கலாம் என்றார் ஆசிரியர்.

இக்குறளில், இந்த மூன்றும் கெட என்று சொல்லியிருந்தாலே போதும். பொருள் ஓரளவிற்கு விளங்குகிறது. அது ஏன் ‘நாமம் கெட’ என்றார். 


எப்படிப் பெரிய காட்டுத் தீயின் முன் ஒரு சிறு பஞ்சுப் பொதியானது ஒன்றும் இல்லாமல் போகுமோ, அது போலத் துறவிகளின் மனத்திண்மை முன் இந்த மூன்றும் எது எது என்று தெரியாமல் அழிந்து போகுமாம். அஃதாவது, தீ விபத்தில் ஆள் அடையாளமே தெரியவில்லை. யார், என்ன பெயர் என்றுகூடத் தெரியவில்லை என்கிறார்களே அது போல!


துறவில் இருப்பவர்கள் அவ்வாறு இருப்பின் அவர்களுக்குத் துன்பம் இல்லை என்கிறார்.


முன்னர் நாம் பார்த்தக் குறள் ஒன்று கவனத்திற்கு வருகிறது. காண்க 20/02/2021.


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். - 35; - அறன் வலியுறுத்தல்


திருப்பித் திருப்பி இதுதாங்க அடிப்படை. இதைப் புரிந்து கொண்டால் வேறு எதுவும் தேவையில்லை.


பொறாமை (மயக்கத்தின் வெளிப்பாடு), பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகியவற்றைத் தவிர்த்தல் என்பதுதான் மூலஅறம். இவை எல்லார்க்கும் பொது அறமும் ஆம். எல்லார்க்கும் = வாழ்க்கையில எந்தப் படி நிலையில் இருப்பவர்க்கும்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




10 views0 comments

Comentarios


Post: Blog2_Post
bottom of page