22/06/2023 (840)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே வருகிறார்.
இரண்டாம் குறளில், நான்கு வகையான நிலப் பரப்புகளைக் கொண்டதாக அரண் இருக்க வேண்டும் என்றார். காண்க 19/06/2023 (837). மீள்பார்வைக்காக:
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.” --- குறள் 742; அதிகாரம் – அரண்
இந்த நான்கு வகை நிலப்பரப்பினுள் மண் என்பதற்கு பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் மரு நிலம் என்றும் பயனற்ற களர் நிலமென்றும், சதுப்பு நிலமென்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
நம் பேராசான் சொன்ன முறைமையைப் பார்த்தல் அது வேறு மாதிரி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
நீரைச் சிறப்பித்து மணி நீர் என்றார். காட்டைச் சிறப்பித்து அணி நிழல் காடு என்றார். அணி நிழல் காடு என்றால் கதிரவனின் ஒளி முழுவதும் நிலப்பரப்பில் விழ முடியாமல் இருக்கும் அழகான அடர்ந்தக் காடு என்று சொல்லிச் சிறப்பிக்கிறார்.
இப்படி சிறப்பித்துக் கூறியவர் மண்ணை மட்டும் களர் என்று சொல்லியிருப்பாரா என்பது எனது ஐயம்.
இந்த நான்கு நிலப்பரப்புகளும் மனிதர்களுக்கு உதவுவன; உணவு அளிப்பன; பாதுகாப்புத் தருவன. இவ்வகை நிலப்பரப்புகளால் சூழப்பட்டிருந்தால் அந்த நாட்டிற்கு பஞ்சம் என்பது வருமா? வராது.
பல வகை பெரும் நிலங்கள் சூழ இருந்தால் எதிரிகள் அந்த நாட்டை அவ்வளவு எளிதில் வெல்ல முடியுமா என்ன?
நான் கேட்கவில்லை. நம் பேராசானே விரிக்கிறார் கீழ் காணுமாறு:
“கொளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்.” --- குறள் 745; அதிகாரம் – அரண்
கூழ் = உணவு; நீரது = தன்மைத்து; கொளற்கரியதாய் = எதிரிகள் வெற்றி கொள்ள அரியதாய்; கொண்ட கூழ்த்து ஆகி = அந்த நாட்டைக் கொண்டவர்கள், அதாவது அந் நாட்டில் வசிப்பவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தன்னகத்தேக் கொண்டு; அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண் = (மேலும்) அந்த நாட்டில் வாழ்பவர்கள் வெளியே இருந்து வரும் தாகுதல்களுக்கு எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி முறியடிக்கும் வண்ணம் அமைந்திருப்பதுதான் அரண் எனப்படுவது.
எதிரிகள் வெற்றி கொள்ள அரியதாய்; அந்த நாட்டைக் கொண்டவர்கள், அதாவது அந் நாட்டில் வசிப்பவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை தன்னகத்தேக் கொண்டு, மேலும், அந்த நாட்டில் வாழ்பவர்கள், வெளியே இருந்து வரும் தாகுதல்களுக்கு எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி வெற்றி கொள்ளும் வண்ணம் அமைந்திருப்பதுதான் அரண் எனப்படுவது.
இதிலே நம் பேராசான் தற்சார்பைக் குறித்த குறிப்பைக் காட்டுகிறார். ஒரு நாட்டிற்கு மதில்கள் அல்ல பாதுகாப்பு. அதுவும் வளர்ந்துவரும் உலகில் மதில்கள் என்பது பயனற்றது.
நம்மால் இந்த நீர் வளமும், நில வளமும், மலை வளமும், காட்டு வளமும் கட்டிக் காக்க முடியுமானால், சுய சார்பு மட்டுமல்ல உலகிற்கே நாம் வாரி வழங்கலாம்.
அண்மைச் செய்தியாக நான் கண்டது என்னவென்றால் நெதர்லாண்ட் (Netherlands) என்னும் ஒரு சிறிய நாடு தன் நாட்டிற்குத் தேவையான உணவு உற்பத்தியைவிட பல மடங்கு உற்பத்தி செய்கிறதாம். அதனால், அது விவசாய விளைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலில் இருக்கும் அமெரிகாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக உள்ளது. அவர்களின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி கடல் மட்டத்திற்கும் கீழே இருக்கிறதாம்!
உணவு உற்பத்தி என்பது மிக முக்கியம். ஆகையால் தான் நம் பேராசான் “கூழ்த்தாகி” என்கிறார்.
உற்பத்தியைப் பெருக்கினால் அதுவும் அரண்தான். அது அறமும்கூட!
சரி, உணவு மட்டும் போதுமா என்றால்?
அதானே, நம்ம பேராசான் விட்டுவிடுவாரா என்ன? அடுத்தக் குறளிலும் தொடர்கிறார். எல்லாப் பொருளும் நாட்டுக்குள்ளே கிடைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அதனுடன் மிக முக்கியாமான ஒன்றைச் சொல்கிறார். அது என்னவென்று நாளைப் பார்ப்போம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários