27/05/2023 (814)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
மிக்காருக்கு நம் பேராசான் பயன்படுத்தியச் சொல்கள்: முதுவர், வியன்புலம் ஏற்றுணர்வார். அதாவது, படிப்பறிவுடன் கூடிய அனுபவ அறிவு, மற்றும் உண்மைப் பொருள்களை ஆராய்ந்து அறியும் தன்மை உடையவர்கள் மிக்கார்.
இதைத்தான் “நுண்மான் நுழை புலம்” என்கிறார்கள். இந்தச் சொற்றொடர் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு பதில் என்னவென்றால் இதுவும் நம் பேராசானின் கொடையே!
கல்லாமை என்னும் அதிகாரத்தில் பயன்படுத்தியுள்ளார்.
மண்ணினால் செய்யப்பட்ட கண்ணைக் கவரும் ஒர் அழகான பாவையின் சிலை. உயிருடன் இருப்பதுபோலவே செய்திருக்கிறார் அந்தக் கலைஞர். உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கிறது என்றால் அது மிகையில்லை. எனினும், அந்தப் பாவையால் பயன் இருக்குமா என்றால் பார்த்து மகிழ்ச்சி அடையலாம், அவ்வளவே.
அந்த மண் பாவைக்கு நாம் பார்ப்பது புரியுமா என்றால் புரியாது. நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றால் நடக்காது! மேல் பார்வைக்கு அழகாக இருக்கும்.
அதைத்தான் நம் பேராசான் இப்படிச் சொல்கிறார்:
“நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.” --- குறள் 407; அதிகாரம் – கல்லாமை
நுண் மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் = நுண்ணிய, கண்டுணர முடியாத அரிய, சிறந்த கருத்துகளைச் சிறந்த நூல்களின் உள் நுழைந்து, மாட்சிமைப்பட்டு, உணரும் அறிவு இல்லாதவர்கள் எப்படிப் பட்டவர்கள் (என்றால்);
மண்மாண் புனைபாவை அற்று = மண்ணால் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட பெண்ணின் சிலை போன்றவர்கள்.
நுண்ணிய, கண்டுணர முடியாத அரிய, சிறந்த கருத்துகளை, சிறந்த நூல்களின் உள் நுழைந்து, மாட்சிமைப்பட்டு, உணரும் அறிவு இல்லாதவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றால்மண்ணால் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட பெண்ணின் சிலை போன்றவர்கள்.
“மாட்சிமை” என்பதற்கு கடிதிற்காண்டலும், மறவாமையும் முதலாயின என்கிறார் பரிமேலழகப் பெருமான். அதாவது, விரைந்து பொருள் காண்பதும், கண்ட பொருளினை மறவாமல் இருப்பதும் உள்ளிட்டது என்கிறார்.
கற்க வேண்டும். அதுவும் நன்றாக கற்க வேண்டும். அதனையும் மறவாமல் இருக்க வேண்டும்.
இந்த மறதிதான் பலரையும் கொல்கிறது.
மறவாமைக்கு மருந்து உண்டா என்றால் அதற்கு ஔவைப் பெருந்தகை மனப்பாடம் பண்ணுங்க என்கிறார்.
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.” --- ஒளவையார் தனிப்பாடல்கள்
கல்வி என்பதே மனப் பழக்கத்தையும் உள்ளடக்கியதுதான்.
அண்மைக் காலமாகவே, மனப்பாடம் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்ற ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டுக் கொண்டுவருகிறது. இது ஒரு சதியைத் (conspiracy) தவிர வேறில்லை. எதைக் கேட்டாலும் மென்பொருள் (software) இருக்கிறது. அதனிடம் கேட்டால் போதும் அது உடனே பதில் அளிக்கும் என்கிறார்கள்!
அது பதில் அளிக்கும். அந்த பதிலுக்குப் பதிலாக, நம் உழைப்பால் ஈட்டிய பொருள்களை மட்டுமல்ல நம் தனித்துவத்தையே பறிக்கும். இந்த உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. ஒரு பொருள் (commodity) இலவசமாகக் கிடைக்கிறது என்றால், அங்கே விற்கப்படும் பொருள் (commodity) நாம்தான் என்பதை உணரவேண்டும். நாம்தான் விலை பேசப்படுகிறோம்!
இலவசங்களையும் கவனத்துடன் கையாள வேண்டும்.
ChatGPT என்ற மென்பொருள்தான் இப்போதைக்கு, இந்த உலகைப் புரட்டிப் போட்டுக் கொண்டுள்ளது. நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் உடனடியாகப் பதில் தருகிறது. Chat என்றால் அரட்டை என்று பொருள். உரையாடுவது என்றும் பொருள். GPT என்றால் Generative Pre-trained Transformers. அதாவது, பயிற்சி பெற்ற உருவாக்கும் திறன் கொண்ட மாற்றிகள் அல்லது செயலிகள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், Chat GPT ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, வேண்டுமென்றே அது தவறான பதிலையும் தரும் என்றும் நீங்கள் அந்தத் தப்பைக் கண்டுபிடித்தால் எனக்குச் சொல்லுங்கள் என்றும் சொல்கிறது!
நான் முயற்சி செய்து பார்த்தபோது அதனை உணர்ந்தேன். தப்பைச் சுட்டிக் காட்டிய உடனே, ஆமாம் என்னுடைய பதில் தப்புதான். நான் உங்களை குழப்பியதற்கு மன்னிக்கவும் என்று மிகவும் நளினமாக பதில் தருகிறது. கவனமாக இருங்கள் நண்பர்களே.
சரி, அவையறிதல் எங்கே என்றுதானே கேள்வி? நாளைப் பார்க்கலாம்.
இன்று என் ஆசிரியர் வரவில்லை என்பது உங்களுக்குச் சொல்லாமலே புரிந்திருக்கும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios